×

ஆனந்தபுரம் படுகொலை – 04.06.1986

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் ஆனந்தபுரம் அமைந்துள்ளது. இக்கிராமம் கிளிநொச்சி நகரத்தின் தெற்கே ஒரு மைல் துரத்திலுள்ளது. இச்சிறிய கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.

1986களில் அரச படைகள் பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பரவலாக இராணுவ முகாம்களை விரிவாக்கத் தொடங்கியதுடன், பொதுமக்கள் வாழும் பிரதேசங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டார்கள்.

1986.06.04 ஆம் நாள் அதிகாலை 5மணிக்கு கிளிநொச்சி நகரில் முகாமிட்டிருந்த அரச படையினர் ஆனந்தபுரத்தை நோக்கி எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். இவ்வாறு இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைகளில் சில ஆனந்தபுரம் செல்வா வீதியிலுள்ள இராமையா பெரியான்பிள்ளை என்பவரின் வீட்டின் மேல் வீழ்ந்து வெடித்தது. வீட்டினுள் தாயின் அரவணைப்பில் ஐந்து பிள்ளைகளும் உறங்கிக்கொண்டிருந்தனர். வீட்டின் மீது வீழ்ந்த எறிகணையினால் இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் படுக்கையில் உடல் சிதறி உயிரிழந்தார்கள். மற்றைய மக்கள் தலையிலும் உடல் முழுவதும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு மரணமானார். தாய் தலையிலும் உடல் முழுவதும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கிளிநொச்சி இராணுவ முகாமிலிருந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலினால் பொதுமக்கள் ஆனந்தபுரக் கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்தார்கள். எறிகணைத் தாக்குதல்கள் முடிவடைந்த பின்னர் கிராமத்திற்கு மீண்டும் திரும்பிய பொதுமக்களால் உயிரிழந்த நான்கு மாணவர்களினதும் உடல்கள் வீட்டு வளவினிலேயே அடக்கம் செய்யப்பட்டன.

பிள்ளைகளின் நினைவாக அவர்களை அடக்கம் செய்த இடத்தில் கல்லறையும், இரத்தினபுரம் கண்டி வீதியில் மீனாட்சி அம்மன் வித்தியாலயத்தில் ஐந்து பிள்ளைகளின் நினைவுச் சின்னம் என்ற மணிக்கூட்டு கோபுரம் கட்டப்பட்டது. இவை இரண்டும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சத்ஜெய இராணுவ நடவடிக்கையில் சேதத்திற்குள்ளாகி காணப்படுகிறது. உயிரிழந்த நான்கு பிள்ளைகளும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களாவர்.

ஐந்து பிள்ளைகளை இழந்த தாய் பெரியதம்பி கனகமணி தெரிவிக்கையில்:

“ஆனந்தபுரம்: 1986 நாங்கள் வசித்த வீட்டின் மேல் கிளிநொச்சி நகரில் இருந்த சிறிலங்கா இராணுவத்திரால் ஏவப்பட்ட எறிகணை வீழ்ந்து வெடித்ததில், எனது ஐந்து பிள்ளைகள் அவ்விடத்திலேயே உடல்சிதறிப் பலியாகினர். நானும் ஒரு பிள்ளையும் படுகாயத்துடன் யாழ். வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டோம். இச்சம்பவத்தில் எனது கணவர் மனநிலை பாதிக்கப்பட்டு தற்போது சுகமடைந்துள்ளார்.”

04.06.1986 அன்று ஆனந்தபுரம் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. பெரியான்பிள்ளை புஸ்பகாந்தன் (வயது 15 – சிறுவன்)
  2. பெரியான்பிள்ளை செந்தில்குமார் (வயது 18 – மாணவன்)
  3. பெரியான்பிள்ளை கமலநாதன் (வயது 20 – மாணவன்)
  4. பெரியான்பிள்ளை கிருபாணி (வயது 11 – சிறுமி)
  5. பெரியான்பிள்ளை வாமதேவி (வயது 13 – சிறுமி)

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments