×

ஓவியர் புகழேந்தி

37 ஆண்டுகளாக, சமூகப் பார்வையோடு ஓவியப்பணி ஆற்றி வரும் ஓவியர் புகழேந்தி தஞ்சாவூர் மாவட்டம், தும்பத்திக் கோட்டையில் பிறந்தவர்.

குடந்தை ஓவியக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பையும் முடித்துள்ளார். ஓவியத் துறையில் தமிழகத்திலேயே முதன் முதலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

1987 ஆம் ஆண்டு கல்கத்தாவில் தேசிய விருது, புகழ் பெற்ற ஓவியர் எம். எப். உசேன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டது. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில விருது, 1987 ஆம் ஆண்டு இந்தியாவின் உலக விமானப் போக்குவரத்து குழுமத்தின் விருது.  1988 ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக் கழகத்தின் மாநில அளவிலான ஓவிய போட்டி முதல் பரிசு, 1990 ஆம் ஆண்டு ஐதாராபத் மத்திய பல்கலைகழகம் வழங்கிய சிறப்புத் தகுதி விருது, 2002 ஆம் ஆண்டு தருமபுரி மனித வளமேம்பாட்டு மையம் வழங்கிய சிறந்த ஓவியர் விருது, 2004 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தின் கீழ்வேங்கை நாட்டு மக்களின (18 கிராமங்களின் கூட்டமைப்பு) மதிப்பளிப்பு. 2005 ஆம் ஆண்டு தமிழீழத்தின் அழகியல் கலாமன்றம் வழங்கிய தங்கப் பதக்க விருது, 2005 ஆம் ஆண்டு தமிழீழ தேசிய விருது, 2007 ஆம் ஆண்டு திருச்சி தூயவளனார் கல்லூரி வழங்கிய ஓவியம் வழி சமூக மாற்ற இயக்க விருது, 2007 ஆம் ஆண்டு இராசராசன் கல்வி பண்பாட்டுக்கழகம் வழங்கிய சாதனையாளர் விருது, 2007 ஆம் ஆண்டு வேலூர் தமிழியக்கத்தின் விருது, 2008 ஆம் ஆண்டு இராசபாளையம் பெரியாரியல் சிந்தனை மையம் வழங்கிய பெரியாரியல் சிந்தனையாளர் விருது, 2009 ஆம் ஆண்டு சென்னை கிருத்துவக் கல்லூரி வழங்கிய ஆளுமை விருது, 2014 ஆம் ஆண்டு கவிமுகில் அறக்கட்டளையும் விழிகள் பதிப்பகமும் இணைந்து வழங்கிய தூரிகை விருது, 2015 ஆம் ஆண்டு பாசறைப் பட்டறை தழல் ஈகி செங்கொடி நினைவாக வழங்கிய இனமானப் போராளி விருது, 2015 ஆம் ஆண்டு எஸ். ஆர். எம். பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்தின் ஆனந்த குமாரசாமி கவின் கலை விருது,  2015 ஆம் ஆண்டு கலகம்: கலை இலக்கிய தமிழ்த் தேசியத் தடம் வழங்கிய சிறந்த கருத்தோவியர் விருது, 2017 ஆம் ஆண்டு பிரித்தானியா உலகத் தமிழர் வரலாற்று மையம் வழங்கிய தங்க பதக்க விருது, 2018 ஆம் ஆண்டு மதுரா டிராவல் நிறுவனம் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் ஆதரவோடு வழங்கிய Best Tourist Attractive Artist-Tamil Nadu Tourism Award 2018, 2018 ஆம் ஆண்டு இந்தியன் சாலிடாரிட்டி கவுன்சில் வழங்கிய பாரத் வித்ய ரத்தன் விருது, 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வழங்கிய திலீபன் நினைவு விருது  போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.

சென்னை, ஐதராபாத், டெல்லி, லக்னோ, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான கண்காட்சிகளில் இவருடைய ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு மற்றும் தென்மாநிலங்களில் முக்கியமான இடங்களில் எரியும் வண்ணங்கள், உறங்கா நிறங்கள், சிதைந்த கூடு, திசைமுகம், புகைமூட்டம், புயலின் நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள் போர் முகங்கள் மற்றும் சே குவேரா: புரட்சியின் நிறம்  உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தனிநபர்  ஓவியக் காட்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.   

இவரது தனிநபர் ஓவியக் காட்சிகள் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தமிழீழம்  ஆகிய நாடுகளின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தமிழீழம், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, சுவீடன் மற்றும்  ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.

தமிழகத்தின் முன்னணி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், வார, மாத கலை இலக்கிய ஜனரஞ்சக இதழ்கள் மற்றும் உலகளாவிய நிலையில் பல்வேறு  இதழ்களில் இவருடைய ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளும் நேர்காணல்களும் வெளிவந்திருக்கின்றன.

தமிழகம் மற்றும் உலகளாவிய நிலையில் அனைத்து  தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் இவரது நேர்காணல்கள் ஒளிபரப்பாகி உள்ளன.

எரியும் வண்ணங்கள், உறங்கா நிறங்கள், திசை முகம், முகவரிகள், அதிரும் கோடுகள், சிதைந்த கூடு, புயலின் நிறங்கள் என்ற தலைப்புகளில் இவரது ஓவியப் படைப்புகள் நூலாக வெளிவந்துள்ளன. தூரிகைச் சிறகுகள் என்ற தலைப்பில் அமெரிக்க ஐரோப்பிய வெளிநாட்டு பயண அனுபவ நூலும், அகமும் முகமும் என்ற தலைப்பில் நேர்காணல்களின் தொகுப்பும், நெஞ்சில் பதிந்த நிறங்கள் என்ற தலைப்பில் இவரது ஓவியங்கள் பற்றி இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்பும், மேற்குலக ஓவியர்கள் என்ற தலைப்பில் ஐரோப்பிய ஓவியர்கள் – ஓவியங்கள் வரலாறும் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலை ஓவியங்கள், புயலின் நிறங்கள்: ஈழப் போர் வரலாற்றுப் பதிவு என்றத் தலைப்பிலும், தமிழீழ பயண அனுபவங்கள் தமிழீழம் : நான் கண்டதும் என்னைக் கண்டதும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஓவியம் : கூறுகளும் கொள்கைகளும் என்ற தலைப்பில் காட்சி ஊடகம் குறித்த அடிப்படை நூலும் வெளிவந்துள்ளது.

வண்ணங்கள் மீதான வார்த்தைகள் என்றத் தலைப்பில் – ஓவியர் புகழேந்தியின் ஓவியக் காட்சியில் பார்வையாளர் பதிவுகள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளன. ஓவியர் எம். எப். உசேன்:

இந்திய சமகால ஓவியக் கலையின் முன்னோடி என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்று நூலும், தலைவர் பிரபாகரன் :

பன்முக ஆளுமை என்ற நூலும், சென்னை வெள்ளம்:

முள்ளிவாய்க்காளுக்குப் பிறகு நான் அடைந்த பெரும் மனத்துயரம் என்ற நூலும், மனிதம்:

ஓவியர் புகழேந்தியுடன் நீண்ட உரையாடல் நூலும், நானும் எனது நிறமும் என்ற தன் வரலாற்று நூலும், தமிழீழ விடுதலை ஓவியங்கள், போர்முகங்கள்:

ஈழப் போர் ஓவியங்கள் என்றத் தலைப்பிலும், நான் கண்ட போராளிகள்:

களமும் வாழ்வும் என்றத் தலைப்பில் தமிழீழ விடுதலைப் போராளிகள் குறித்த  நூலாக வெளிவந்திருக்கின்றன.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 26 வது சர்வதேச புத்தகக் காட்சியில் இவர் எழுதிய தமிழீழம்:

நான் கண்டதும் என்னைக் கண்டதும் என்ற தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டன. ஜெனிவா சர்வதேச புத்தகக் காட்சியில் தமிழ் நூல் காட்சிக்கு வைப்பது அதுவே முதல் முறை.

2007 ஆம் ஆண்டு முதல் 2011 வரை தமிழக அரசின் ஓவியர் நல வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டு செயற்பட்டார்.

தற்போது, சென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியப் பணி.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments