
அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். பௌத்தத்திற்கு மாறிய இவர் பறையர்களின் மூலச் சமயம் பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்குத் மாறவேண்டும் அறிவுறுத்தினார். 1891 இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். பஞ்சமர் என்போர் வருணாசிரம முறையில் வராமல், அவர்ணாக்கள் என அழைக்கப்பட்டனர்.
பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.
கல்வியும், புலமையும்
அயோத்திதாசர் 1845 மே 20 இல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்து, பிறகு தனது தந்தையின் பணியின் காரணமாக நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன் ஆகும். நீலகிரியில் இவரது தாத்தா ஜார்ஜ் ஹாரிங்டனிடம் வேலைபார்த்து வந்தது இளம்வயதில் அயோத்திதாசருக்கு பலவகைகளில் உதவியாய் இருந்தது.
தனது தந்தையிடமும் காசி மேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர் (1830-1892), வல்லக்காளத்தி வீ. அயோத்தி தாசர் பண்டிதர் (1836-1900) ஆகியோரிடமும் கல்வி கற்றார். தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார். தன் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக் கொண்டார்.