×

பண்டா – செல்வா உடன்படிக்கை 1957ஆம் வருடம் யூலை மாதம் 26ஆம் திகதி

பண்டா – செல்வா உடன்படிக்கை 1957ஆம் வருடம் யூலை மாதம் 26ஆம் திகதி கைச்சாத்தான உடன்படிக்கை

(சிறிலங்கா பிரதமர் திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே 1957ஆம் வருடம் யூலை மாதம் 26ஆம் திகதி கைச்சாத்தான உடன்படிக்கை.) பகுதி – அ

“நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தி வந்த கருத்து வேற்றுமைகளைத் தீர்க்கும் முயற்சியாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரதிநிதிகள் பிரதமரோடு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.

உரையாடலின் தொடக்கத்திலேயே தமிழரசுக் கட்சியின் சில கோரிக்கைகளைப் பிரதமர் ஏற்பது சாத்தியமற்றதென்பது தெளிவாகியது.

சமஷ்டி அடிப்படையிலோ அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயோ தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழரசுக் கட்சி முன்வைத்ததானே ஒருத்திய மொழிச் சட்டத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கவோ அரசாங்கத்தின் நிலையினை இயலாது என்று பிரதமர் கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் எவற்றையும் கைவிடாத வகையில் ஓர் இடைக்கால ஒழுங்குக்கு வர இயலுமா என்பதை ஆராயும் கேள்வி பின் எழுந்தது.

“அரசாங்கத்தின் பிரதேச சபைகள் மசோதாவை ஆராய்ந்து அதன் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சி கருத்திற் கொண்டிருக்கும் சில விடயங்களை நியாயமாக உள்ளடக்கக் கூடிய ஏற்பாடுகளை செய்ய இயலுமா என்று பார்க்குமாறு பிரதமர் ஆலோசனை கூறினார்.

இடைக்கால ஒழுங்கு

“மொழி விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சம அந்தஸ்துக் கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால் இவ் விடயத்தில் பிரதமரின் நிலையை உத்தேசித்து இடைக்கால ஏற்பாடாக ஓர் உடன்படிக்கைக்கு வந்தனர். தமிழ் ஒரு தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படுவதும், வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அலுவல்கள் தமிழில் நடைபெறுவதும் முக்கியமானவை என்று அவர்கள் சுட்டிக் காட்டினர்.

“தான் முன் குறிப்பிட்டது போல, உத்தியோக மொழிச் சட்டத்தை அகற்றக் கூடிய எந்த நடவடிக்கையையும் எடுப்பது சாத்தியமற்றதெனப் பிரதமர் கூறினார்.

“கருத்துப் பரிமாறலின் பின், இயற்ற உத்தேசிக்கப்படும் சட்டத்தில் இலங்கையின் தேசியச் சிறுபான்மையோரின் மொழியாகத் தமிழை அங்கீகரிக்க வேண்டுமென்றும், உத்தியோக மொழியின் நிலையைப் பாதிக்காத வகையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாகத் தமிழ் இருக்கும் வகையில் பிரதமரின் நாலு அம்சத் திட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் பேசவொல்லாத சிறுபான்மையோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்றும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

“இந்திய வம்சாவழியினருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவது பற்றியும், குடிபுரிமைச் சட்டம் பற்றியும் தமது கருத்துக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரதிநிதிகள் பிரதமருக்கு எடுத்து விளக்கி, விரைவில் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினர்.

“இப் பிரச்சினை விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று பிரதமர் அறிவித்தார்.

“இம் முடிவுகளின் காரணமாகத் தமது உத்தேச சத்தியாக்கிரக நடவடிக்கையைக் கைவிடுவதாகத் தமிழரசுக் கட்சி அறிவித்தது.

பகுதி – ஆ

1) பிரதேச சபைகளின் எல்லைகள் சட்டத்திலேயே அட்டவணையாகச் சேர்க்கப்பட்டு வரையறுக்கப்படும்.

2) வட மாகாணம் ஒரு பிரதேச சபையாகவும் கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது கூடிய பிரதேச சபைகளாகவும் அமையும்.

3) மாகாண எல்லைகளைத் தாண்டி இரண்டு அல்லது மேற்பட்ட பிரதேச சபைகள் இணைவதற்குச் சட்டத்தில் விதி இடம்பெறும்; பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு அமைவாக, ஒரு பிரதேச சபை தன்னைப் பிரித்துக் கொள்ளவும் இடம் இருக்கும். இரண்டு அல்லது மேற்பட்ட பிரதேச சபைகளுக்குப் பொதுவான மேற்பார்வைக்குப்குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அவை சேர்ந்து செயல்படச் சட்டத்தில் இடம் இருக்கும்.

4) பிரதேச சபை உறுப்பினர் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவர். அதற்கான தொகுதிகளை வகுப்பதற்குத் தொகுதி நிர்ணயக் குழுவோ, குழுக்களோ அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்த மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச சபைத் தலைவராகவிருப்பதற்குத் தகுதி பெறுவது பற்றி ஆலோசிக்கப்படும். அரசாங்க அதிபர்கள் பிரதேச ஆணையாளர்களாக நியமிக்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்படும். பெரிய பட்டினங்கள், கேந்திர நகரங்கள், மாநகர சபைகள் ஆகியவற்றின் மேற்பார்வை செய்யும் அதிகாரங்கள் ஆராயப்படும்.

5) அதிகாரங்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப் பெற்றுச் சட்டத்தில் வரையறுக்கப்பட வேண்டும். விவசாயம், கூட்டுறவு, காணியும், காணி அபிவிருத்தியும், குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், மீன்பிடித் துறை, வீடமைப்பு, சமூக சேவை, மின்சாரம், நீர்ப்பாசனத் திட்டங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவை உள்ளடங்கக் குறிப்பிட்ட விடயங்கள் பிரதேச சபைகளின் அதிகாரத்திற்குள் இருக்க வேண்டுமென்று ஒப்புக் கொள்ளப்பட்டது. வேண்டிய அதிகார எல்லைகள் சட்டத்திலேயே வரையறுக்கப்படும்.

6) குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்த வரை, தமது அதிகார எல்லைக்குட்பட்ட காணிகள் வழங்கப்பட வேண்டிய குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்வதும், அத் திட்டங்களில் வேலைக்கமர்த்தப்படும் ஆட்களைத் தெரிவு செய்வதும் பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இப்போது கல்லோயா அபிவிருத்திச் சபையினால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தின் நிலை ஆராயப்பட வேண்டும்.

7) சட்ட மூலத்தில் பிரதேச சபையொன்று உள்ளூராட்சி அமைச்சுக்கு அளிக்கப்பட அதிகாரங்களை மாற்றித் தேவையான இடத்தில் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப் பொருட்டுத் தகுந்த விதிகள் திருத்தப்படும்.

8)பிரதேச மக்களுக்கு மத்திய அரசாங்கம் மொத்தமாக நிதி வழங்கும். அது தொகை கணக்கிடப்பட வேண்டிய கொள்கைகள் பின் ஆராயப்படும். பிரதேச சபைகளுக்கு வரி விதிக்கும், கடன் வாங்கும் அதிகாரமிருக்கும்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments