குறள் #191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
பொருள்
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.
குறள் #192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.
பொருள்
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
குறள் #193
நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
பொருள்
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.
குறள் #194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
பொருள்
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.
குறள் #195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
பொருள்
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.
குறள் #196
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.
பொருள்
பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.
குறள் #197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
பொருள்
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
குறள் #198
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.
பொருள்
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.
குறள் #199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
பொருள்
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
குறள் #200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
பொருள்
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
திருக்குறள் அருஞ்சொற்கள்
பல்லார்
பலர்
முனிய
வெறுக்க
எள்ளப்படும்
இகழப்படும்
நட்டார்
நண்பர்
பாரித்து
விரித்து
பதடி
பதர்
மருள்
மயக்கம்
மாசு
குற்றம்
பொச்சாந்தும்
மறந்தும்