×

அதிகாரம் 61- மடி இன்மை

குறட் பாக்கள்

குறள் #601

குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

பொருள்
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

குறள் #602

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

பொருள்
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறள் #603

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து.

பொருள்
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

குறள் #604

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

பொருள்
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.

குறள் #605

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.

குறள் #606

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

பொருள்
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும்

சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது

அரிதாகும்.

குறள் #607

இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

பொருள்
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

குறள் #608

மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்.

பொருள்
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

குறள் #609

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

பொருள்
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.

குறள் #610

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

பொருள்
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

மடி 

சோம்பல்

மாசூர 

மாசு ஊர

மாசு 

இருள்

ஊர 

அடர

மாண்ட 

சிறந்த

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments