×

அதிகாரம் 69 – தூது

குறட் பாக்கள்

குறள் #681

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

பொருள்
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.

குறள் #682

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று.

பொருள்
தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.

குறள் #683

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் 
வென்றி வினையுரைப்பான் பண்பு.

பொருள்
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

குறள் #684

அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

பொருள்
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

குறள் #685

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.

பொருள்
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.

குறள் #686

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் 
தக்க தறிவதாந் தூது.

பொருள்
கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.

குறள் #687

கடனறிந்து காலங் கருதி இடனறிந்
தெண்ணி உரைப்பான் தலை.

பொருள்
ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.

குறள் #688

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

பொருள்
துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

குறள் #689

விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.

பொருள்
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

குறள் #690

இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் 
குறுதி பயப்பதாம் தூது.

பொருள்
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

தொகச்சொல்லி 

தொகுத்துச்சொல்லி

தூவாத 

இன்னாத

நகச்சொல்லி, செலச்சொல்லி 

மனமகிழச்சொல்லி

வடுமாற்றம் 

தாழ்வான வார்த்தை

வன்கணவன் 

வலிமையுடையவன்

இறைவன் 

மன்னன்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments