×

அதிகாரம் 71 – குறிப்பறிதல்

குறட் பாக்கள்

குறள் #701

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

பொருள்
ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்.

குறள் #702

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

பொருள்
ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

குறள் #703

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்.

பொருள்
ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.

குறள் #704

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.

பொருள்
உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.

குறள் #705

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.

பொருள்
ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?.

குறள் #706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

பொருள்
கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்.

குறள் #707

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.

பொருள்
உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.

குறள் #708

முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.

பொருள்
அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.

குறள் #709

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

பொருள்
பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.

குறள் #710

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற.

பொருள்
நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.

திருக்குறள் அருஞ்சொற்கள்

கடுத்தது 

சினந்தது

முதுக்குறைந்தது 

அறிவுமிகுந்தது

உவப்பு 

மகிழ்ச்சி

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments