குறட் பாக்கள்
குறள் #871
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.
பொருள்
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது.
குறள் #872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
பொருள்
படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது.
குறள் #873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
பொருள்
தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.
குறள் #874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு.
பொருள்
பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.
குறள் #875
தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.
பொருள்
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
குறள் #876
தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
பொருள்
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்.
குறள் #877
நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.
பொருள்
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.
குறள் #878
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
பொருள்
வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.
குறள் #879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
பொருள்
முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்.
குறள் #880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
பொருள்
பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.
ஏமுற்றவர்
பித்துப் பிடித்தவர், பித்தன்
தமியன்
தனித்தவன்
காழ்த்த
முதிர்ந்த