×

அதிகாரம் 97 – மானம் குறள்

குறள் #961

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

பொருள்
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும்.

குறள் #962

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

பொருள்
புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்.

குறள் #963

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

பொருள்
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.

குறள் #964

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

பொருள்
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.

குறள் #965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

பொருள்
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.

குறள் #966

புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை.

பொருள்
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?.

குறள் #967

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

பொருள்
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.

குறள் #968

மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

பொருள்
சாகாமலே இருக்க மருந்து கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.

குறள் #969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

பொருள்
உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.

குறள் #970

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு.

பொருள்
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.

திருக்குறள் அருஞ்சொற்கள்

பேராண்மை 

மானம்

குன்று 

சிறிய மலை

குன்றுதல் 

குறைதல்

குன்றி 

குன்றி மணி (குண்டு மணி), நுண்ணிய அளவு

பீடு 

வலிமை, பெருமை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments