×

சங்கரண்ணா! சாவு உனது முடிவல்ல

எனது இதயத்தின் துடிப்பு    யாரும் சத்தம் போட்டு, நீ என்று கதைத்தாலே அதைத் தாங்கும் இதயம் எனக்கு இல்லை. அப்படிப்பட்ட என் வாழ்க்கை எதையும் தாங்கும் இதயமாகிவிட்டது. காலத்தின் கோலம்.1977 இல் கப்டன் பண்டிதருடன் எனது மைத்துனர் வசீ (லெப். சித்தாத்தன்), எனது அம்மப்பாவிடம் கிணற்று வெடி மருந்து கேட்டு வீட்டிற்கு வந்தபோதே ஓரளவு புரிந்து கொண்டேன்.

1978 ஆம் ஆண்டு மனோகரனுக்கும் (கப்டன். கரன்) எனக்கும் திருமணப் பேச்சு வந்தபோது, சொந்த மைத்துனர் என்பதால் மறுப்புத்தெ ரிவிக்கவில்லை. தமையனார் சொர்ணி (கேணல் சங்கர்) திருமணமாகாது இருக்கும் போது ஏன் தம்பி கரனிற்குத் திருமணம் பேசுகிறீர்களென மாமியிடமே கேட்டபோது ஒரு கடிதம் எடுத்துத் தந்தா 77 ஆம் ஆண்டு சொர்ணியால் தம்பியாருக்கு எழுதப்பட்ட கடிதம். தமிழீழம் தான் என் இலட்சியம். திருமணம் வேண்டாம். 7மணி பஸ் பழுதடைந்தால் 8 மணிபஸ் போகவேணும் தானே போகட்டும் என்று கடிதவரிகள் அமைந்திருந்தன.சரி இரண்டாவது மைத்துனர் சொர்ணியும் நாட்டுக்கான போராட்டத்திற்காக…புகுந்த வீட்டிற் போராட்டக்காறர்கள்.

என்ன செய்கிறது என்று இருக்க, புகுந்த வீட்டின் தலைவி – மாமி திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார்.எனது அப்பா தபாலதிபராக இருந்த போது, சிறிமா ஆட்சிக்காலத்திற் சிங்களச் சோதனை சித்தியடையாததால் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டப்போது ஏற்பட்ட தாக்கம் அடிமனதிற் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தது. அந்தத் தாக்க வெறியால் ஒற்றுமையாகப் புகுந்த வீட்டின் போக்கில் என்னை மாற்றிக் கொண்டேன்.வெளிநாட்டிலிருந்து வந்த மைத்துனர் சொர்ணி, ஒரு பொறியியலாளராக இருந்தும் சும்மா இருப்பது பலருக்கும் கேள்விக்குறியானதைச் சமாளிக்க மன்னாரில் இரண்டு மீன்பிடி ரோலர்களை வாங்கி விட்டதுடன், என் கணவரும் அவரது தம்பியுமான கரனுக்கு, 18-09-1980 இல் தனது பிறந்த நாளன்று ஒரு மாட்டுப்பண்ணையையும் ஆரம்பித்துக் கொடுத்தார். 1980 ஆம் ஆண்டே, போராட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என முத்திரை குத்தாத குறை. இராணுவம், பொலிஸ், சி.ஐ.டி என வருவார்கள். எப்படி எப்படிக் கதைக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கையாகக் கூறிவிடுவார்கள். புலிகளுடன் தொடர்பு எனத்தங்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்க அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத் தாங்களே தங்களைப் பற்றி பெட்டிசன் போடுவார்கள்.’புளொட்டுடன்’ தொடர்பு என்று அதில் இருக்கும் இராணுவத்தினரும் பொலிசாரும் குழம்பி விடுவார்கள்.

இவர்கள் நல்லா இருப்பது பிடிக்காமல் இப்படிப் பெட்டிசன் வருகுது என இராணுவத்தினரும் பொலிசாரும் நினைத்தனர்.1983இல், சித்தாவின் கைதைத் தொடர்ந்து, இராணுவ பொலிஸ் கெடுபிடியால், வெளிநாடு போவதாகக் கூறிவிட்டு சொர்ணி இந்தியா சென்றார். பெண் சகோதரிகள் இல்லாத, ஆறு ஆண் சகோதரர்களைக் கொண்ட குடும்பம் எனது புகுந்த வீடு.நான்தான் அங்கு முதற்பெண். தங்கள் சகோதரி போலவே என்னைக் கருதினர்.

எப்படி என்னை வளர்த்தார்கள் என்று எழுத வார்த்தைகள் இல்லை.தூசு பட்டால் தூசுக்கும் கூடத் தண்டனை கொடுக்க முடிந்தாற் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு நுணுக்கமான கவனிப்பு.1983 இல் ஒவ்வொருவராகப் புறப்பட நான் தனிமைப்படத் தொடங்கினேன். இயக்கச் செயற்பாடுகளில் எல்லோரும் ஈடுபடத் தொடங்க, தனிமை அதிகரித்துச் சென்றது.என்னைக் கரடுமுரடாக வளர விட்டிருக்கலாமே என அடிக்கடி கேட்டுப் பேசி அழுவேன். பதில் ஏதும் பேசாது தலை குனிந்து நிற்பார்கள்.05-10-1987 இல் கரன் வீரச்சாவடைய, 5வருடங்கள் விதவையாக இருந்தேன்.04-05-1992 இல் பிள்ளைகள் இருவருடன் என்னைப் பொறுப்பேற்றார் சொர்ணி.இந்தியாவில் இருந்த என்னை 1990ஆம் ஆண்டு நாட்டுக்கு அழைத்தார் சொர்ணி.

இருந்தும் 1992 இலேயே என்னைத் திருமணஞ்செய்தார். இரண்டு வருடம் திருமணத்தைத் தள்ளிப்போட்டமை பற்றிப் பலரும் காரணம் கேட்டனர். திருமணத்தின் பின் ஒரு நாள், ‘இரண்டு வருடமாக முடிவு செய்தியளா? என்ன குழப்பம்’ என்று சொர்ணியிடம் கேட்டேன். ‘நீ திரும்ப விதவையாகக் கூடாதென்ற காரணத்தால் முடிவெடுக்க முடியவில்லை’ என்றார். ஆனால் இன்று இரண்டாவது தடவையாக விதவையாகி உள்ளேன். எனக்கு ஏற்பட்டது ஒருவருக்கும் ஏற்படக்கூடாது.வேறு எவருக்கும் இப்படி நடந்ததாக நான் கேள்விப்படவும் இல்லை. கடவுளை நம்பினேன். இருநாள் முன் கனவு ஒன்று கண்டேன். இரண்டாவது தடவை வராது என நம்பினேன். ஆனால்…இறுதி மூச்சே நாடு என்பார். எல்லோரும் முன்னேற வேணும், படிக்க வேணும், பண்பு, நேர்மையுடன் வாழ வேணும் என்பார்.நகம் அளவேனும் எரிச்சல், பொறாமை, பொய், பெருமை எதுவும் இல்லாத தூய்மையானவரைக் கணவனாகக் கொண்டு அவரோடு சிறிது காலமே வாழ்ந்தாலும் அதுவே போதும்.சில நேரங்களில் மனஸ்தாபங்கள் ஏற்படும். கூறுவார் செருப்பு இல்லாததற்குக் கவலைப்படக் கூடாது. கால் இல்லாதவனை நினை. செருப்பில்லாத கவலை இராது என்பர்.மேலே பாராது கீழே பார் என்பார். கிளைமோரில் போனாலும் போவேன் என வாய் கூசாமற் கூறுவார். எரிச்சற் படுவேன். தலைவர் இருக்கும் வரை ஒரு குறையும் விடமாட்டார்.

தலைவரை நம்பு என்பார்.தலைவர் காலத்தில் தமிழீழம் நிச்சயம். எல்லாம் விடுதலையின் பெயராற் பொறுமையாக இரு என்பார்.வீட்டைக் கவனிக்காது நாடு, நாடு என்று திரிந்தாலும் பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டினார். எல்லோரின் பிள்ளைகளும் படித்து முன்னேற வேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு.தன்னைப்போல பிறரை நேசிக்கும் குணம் படைத்த மனிதர்கள் சிலர். அதில் ஒருவர் இவர்.சுயநலமற்ற தன் குணத்தையும், நாட்டின் தேவையையும் எங்கள் மூவருக்கும் ஊற வைத்துவிட்டுப் போட்டார்.அழுவதற்காகக் கட்டப்பட்ட சமாதியல்ல எனக்கூறி அடிக்கடி துயிலுமில்லம் செல்வார். எனக்கு அடிக்கடி துயிலுமில்லம் போய்ப் பார்க்கும் மனநிலை இருக்கவில்லை. தாங்கும் சக்தி இல்லை. தற்பொழுது துயிலுமில்லமே கதி என  ஆக்கிவிட்டார்.

   v குகா மனைவி

நினைவுப்பகிர்வு – கேணல் சங்கர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் வெளியிடப்பட்ட சங்கரண்ணா! சாவு உனது முடிவல்ல என்ற நூலில் இருந்து…நன்றி – சூரியப்புதல்வர்கள் 2003 இதழ்.

Enathu Ithayaththin Thudippu….

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments