
2009 இறுதி யுத்தகாலம் வரைக்கும் வெளிவந்துகொண்டிருந்த “ஈழநாதம் மக்கள் நாளிதழ்” மே-10 ஆம் திகதி தனது சேவையினை நிறுத்திக்கொண்டது. யுத்தம் முடிவுறும் வரைக்கும் எம்முடன் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் உட்பட 22 பேர் சிறிலங்காப்படையினரின் சினைப்பர், எறிகணை மற்றும் உந்துகணைத்தாக்குதல்களில் கொல்லப்பட்டிருந்தனர்.
இப்படங்களில் இறுதியாக காட்டப்பட்டுள்ளவர்கள் எமது செய்தியாசிரியரின் குடும்பத்தினர். இவர்கள் 2009- மே -11 அன்று எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். இக்குடும்பத்தில் ஏற்கனவே இரண்டு பேர் மாவீரர்களாக அம்மண்ணில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றொரு சகோதரன் இறுதிநாட்களின் போது காணாமல் போய்விட்டார்.
கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைக்கும் தங்கள் குடும்பங்களுடன் இடர்மிகு நேரங்களில் ஈழநாதம் மக்கள் நாளிதழுக்காக உழைத்துள்ளார்கள். பல நிறுவனங்களின் செயற்பாடுகள் செயலிழந்துகொண்டிருக்கையில் கூட ஒரு பாரஊர்தியில் அச்சுஇயந்திரத்தினை ஏற்றி பத்திரிகையை தொடர்ந்து அச்சிடுவதற்காக முன்னின்று செயற்பட்டவர்களான சுகந்தன், அன்ரனி, தர்சன், சசிமதன், மகேஸ்வரன், அன்ரன் பெனடிக், மற்றும் டென்சி ஆகியோர்களை இழந்திருந்தோம்.
இன்று இறுதியுத்தம் தொடர்பான தகவல்கள் பலவற்றை பலருக்கும் தெரிந்தது மட்டுமல்லாமல் ஆதாரங்களையும் பார்க்கமுடிகின்றதென்றால் அக்காலப்பகுதியில் பணியாற்றிய மிகக்குறைந்தளவான ஊடகவியலாளர்களின் உயரிய அர்ப்பணிப்பே ஆகும்.