×

தமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 2002

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
27.11.2002

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே,

இன்றைய நாள் ஒரு புனித நாள்.எமது மாவீரர்களின் நினைவு நாள். எமது இனத்தின் இருப்பிற்காக, தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை, எமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நாம் நினைவு கூரும் நன்நாள்.

விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.

மாவீரர்களே, தமிழர் தேசம் உங்களுக்குத் தலைவணங்குகிறது. உங்களது தற்கொடையால் தமிழீழ மக்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றார்கள். உங்களது இரத்தத்தாலும், வியர்வையாலும், உங்களது இலட்சிய உறுதியாலும் கட்டியெழுப்பப்பட்ட எமது விடுதலை இயக்கம், இன்று யாராலும் வெற்றி கொள்ள முடியாத மாபெரும் போராட்ட சக்தியாக உலகப் புகழீட்டி நிற்கிறது. போர் அரங்கில் நீங்கள் படைத்துச் சென்ற மகத்தான சாதனைகளையே இன்று உலகரங்கில், நாம் அரசியல் வெற்றிகளாக அறுவடை செய்து வருகின்றோம்.

இன்று உலகம் மாறி வருகிறது. உலக ஒழுங்கும் மாறி வருகிறது. உலக நாடுகளின் உறவுகளும் மாறி வருகின்றன. மனித சமுதாயம் முன்னென்றும் காணாத புதிய சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கிறது. இன்றைய உலக நிதர்சனத்தை, அதன் யதார்த்தப் புறநிலைகளை நாம் உதாசீனம் செய்ய முடியாது. இன்றைய காலத்தையும், இக் காலத்தில் கட்டவிழும் சூழலையும் நாம் ஆழமாகப் புரிந்து, கால நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, எமது விடுதலைப் பாதையை செப்பனிடுவது அவசியம். இன்றைய காலத்தின் தேவை அது. உலகப் போக்குடன் முரண்படாது, உலக வரலாற்றின் ஓட்டத்திற்கு இசைவாக, நாமும் எமது போராட்ட வரலாற்றை முன்நகர்த்திச் செல்வதே விவேகமானது. இன்றைய வரலாற்றின் கட்டாயமும் அதுவே.

எமது விடுதலைப் போராட்டம் கால்நூற்றாண்டுகால வரலாறாக நீட்சிபெற்றுச் செல்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன் இன்றைய நாளில், எமது முதலாவது மாவீரன் களப் பலி ஆகியதைத் தொடர்ந்து இன்று வரை பல்லாயிரக் கணக்கில் எமது போராளிகள் விடுதலைப் போரில் களமாடி வீழ்ந்திருக்கிறார்கள். எமது இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக நிலத்தை அந்நியனிடமிருந்து மீட்டெடுக்க எமது விடுதலை இயக்கம் அளப்பரிய அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளது. எமது மாவீரர்களின் இம் மகத்தான தியாகங்களால், எத்தனையோ தடவைகள் நாம் பேரழிவுகளின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். மரணத்தின் வாயிலுக்குச் சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றோம். வல்லாதிக்க சக்திகளின் தலையீடுகளைத் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம். எமது விடுதலை இயக்கம் இன்று வானளாவ வளர்ந்து நிற்கிறது. நிமிர்ந்து நிற்கிறது. எமது இயக்க விருட்சத்தின் வேர்களும் விழுதுகளுமாக நிற்பவர்கள் எமது மாவீரர்களே.

எனது அன்பார்ந்த மக்களே,

இன்று எமது விடுதலைப் போராட்டம் ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில், ஒரு புதிய வரலாற்றுத் திருப்பத்தில் காலடி வைத்திருக்கிறது. என்றுமில்லாதவாறு இன்று ஒரு புதிய சவாலை நாம் சந்தித்து நிற்கின்றோம். போருக்கு ஓய்வு கொடுத்து, சமாதான வழியில், சமரசப் பேச்சுக்கள் வாயிலாக எமது மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். நாம் வன்முறையில் பற்றுக் கொண்ட போர் வெறியர் என்றும் சமாதானத்தின் விரோதிகள் என்றும், காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகள் மேற்கொண்டு வந்த பரப்புரையைப் பொய்யாக்கும் வகையில் நாம் நேர்மையுடனும் உறுதியுடனும் சமாதான வழிமுறையைத் தழுவி நிற்கின்றோம்.

ஆயுத வன்முறையில் ஆசைகொண்டு நாம் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. இன அழிவை இலக்காகக் கொண்ட இனவாத ஒடுக்குமுறையின் உச்சத்தில், அந்நிய இராணுவ அடக்குமுறை சகிக்க முடியாத அளவிற்குத் தீவிரமடைந்த கட்டத்திலேயே நாம் ஆயுதம் ஏந்தினோம். எமது மக்களின் உயிரைக் காக்கவும், எமது மக்களின் உரிமையை நிலை நாட்டவும், எமது இயக்கம் மேற்கொண்ட ஆயுதம் தரித்த விடுதலைப் போரை பயங்கரவாதமாகச் சிங்கள அரசுகள் சித்தரித்தன. தமிழரின் உரிமைப் போரைத் திரிபுபடுத்தி, இழிவுபடுத்தி உலகடங்கிலும் விசமப் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. இப் பொய்யான பரப்புரையை நம்பி, பல உலக நாடுகள் எமது அமைப்பிற்குத் தடை விதித்தன.

பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு உலக அரங்கிலிருந்து நாம் ஓரம் கட்டப்பட்டோம். உலக நாடுகள் ஒன்று திரண்டு எதிரியின் போர்த் திட்டத்திற்கு முண்டு கொடுத்தன. அனைத்து உலகத்தினதும் ஆதரவும், ஆயுத உதவியும் கிட்டியதால் மூர்க்கம் கொண்ட எதிரி போரைத் தீவிரப்படுத்தினான். நாம் தனித்து நின்று போருக்கு முகம் கொடுத்தோம். மக்களின் ஆதரவு மட்டும் எமக்கு மலையாக நின்றது. நாம் அலையலையாகத் திரண்டெழுந்து ஆக்கிரமிப்புப் படைகளுடன் மோதினோம். போர்க் கலையில் எமது வீரர்கள் படைத்த அபாரமான சாதனைகள் உலக இராணுவ நிபுணர்களையே திகைப்பில் ஆழ்த்தின.

போரிற்புலிகளை வெற்றி கொள்ள முடியாது என்பதனைச் சிங்களத் தேசமும் உலகமும் உணர்ந்து கொண்டன. இந்தச் சூழ்நிலையில்தான், அதாவது எமது போராட்ட வல்லமையை நிரூபித்துக் காட்டி, எமக்குச் சாதகமான இராணுவ சமநிலையில் நின்றபடியே நாம் சமாதானத்தின் கதவுகளைத் திறந்தோம். சமாதானத்தில் எமக்கு உண்மையான பற்றுண்டு என்பதை உலகத்திற்கு உணர்த்திக் காட்டவே நாம் இராணுவ மேலாதிக்க நிலையில் நின்றுகொண்டு அமைதி வழியைத் தழுவினோம்.

போருக்கு ஓய்வு கொடுக்கும் விடயத்திலும் நாமே முன்முயற்சிகளை எடுத்தோம். ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தப் பிரகடனம் செய்து, அரசாங்கத்தை அமைதி வழிக்கு அழைத்தோம். சமாதானத்திற்கான மனுவைப் பெற்று ஆட்சி பீடம் ஏறிய புதிய அரசு, எமது போர்நிறுத்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டது. இவ்வாண்டு பெப்ரவரி 23ம் திகதியிலிருந்து இரு தரப்பும் இணங்கிய போர் நிறுத்தம் சர்வதேச நாடுகளின் கண்காணிப்புடன் செயலுக்கு வந்தது.

இப் போர்நிறுத்தம் கடந்த ஒன்பது மாதங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சிங்கள ஆயுதப் படையினரிற் சில பிரிவினரும், இனவாத சக்திகளும், சமாதான விரோதிகளும் போர் நிறுத்தத்தைக் குழப்பி, மோதலை ஏற்படுத்த பல தடவைகள் முயன்றனர். எத்தனையோ ஆத்திரமூட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது மக்கள் பலர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். ஆயினும், எமது இயக்கம், ஒழுக்கம் கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடித்து, அமைதியை குலையவிடாது சமாதானத்தைப் பேணி வருகிறது. சமாதானப் பாதையில் எமக்குள்ள உண்மையான உறுதிப்பாட்டிற்கு இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு.

எமது மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வு காண்பது சாத்தியமாயின் அதனை முயன்று பார்ப்பதில் முழுமனதுடனும், நேர்மையுடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம். எமது மக்கள், தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆட்சி புரியும் உரிமை உடையவர்களாக, சுதந்திரத்துடன் கௌரவமாக வாழவேண்டும் என்பதே எமது போராட்ட இலட்சியம். இந்த இலட்சியம் சமாதான வழியிற் கைகூடுமானால் அந்த வழியைத் தழுவ நாம் என்றுமே தயாராக இருக்கின்றோம்.

சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நாம் என்றுமே தயங்கியதில்லை. திம்புவில், டில்லியில், கொழும்பில், யாழ்ப்பாணத்தில், இப்பொழுது தாய்லாந்திலாக நாம் பல தடவைகள், பல்வேறு வரலாற்றுச் சூழல்களிற் பேச்சுவார்த்தையிற் பங்குபற்றி வந்திருக்கின்றோம். முன்னைய பேச்சுக்கள் எல்லாமே தோல்வியிலேயே முடிந்தன. முன்னைய சிங்கள அரசுகளின் கடும் போக்கும் நேர்மையற்ற அரசியல் அணுகுமுறைகளுமே தோல்விக்கு காரணம். எனினும், திரு. ரணில் விக்கிரமசிங்காவின் இன்றைய அரசாங்கம் நேர்மையுடனும் துணிவுடனும் தமிழரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைகிறது.

உறுதியான அடித்தளத்திற் கட்டியெழுப்பப்பட்ட போர்நிறுத்தமும், அதனை மேலும் வலுப்படுத்தத் சர்வதேசக் கண்காணிப்புக் குழுவினரின் முயற்சிகளும் சமாதான அணுகுமுறைக்கு உரமேற்றி வருகின்றன. அத்தோடு, மிகவும் சாதுரியமாகவும், சாணக்கியமாகவும் நோர்வே அரசு கடைப்பிடிக்கும் அனுசரணை முறையானது இன்றைய பேச்சுக்கள் முன்னேறிச் செல்வதற்கு பேருதவியாக இருந்து வருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்றுமில்லாதவாறு சர்வதேச அரசுகள் இச் சமாதான முயற்சியில் காட்டிவரும் ஆர்வமும், அக்கறையும், ஊக்குவிப்பும் இரு தரப்பினருக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்து வருகின்றன. ஒரு வலுவான சமாதான அடித்தளத்தில் நிலையூன்றி நின்றவாறு, படிப்படியாக, கட்டம் கட்டமாக, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தபடி பேச்சுக்களை முன்நகர்த்திச் செல்வதே சாலச் சிறந்தது.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக முடிவில்லாது தொடர்ந்த கொடிய போரின் விளைவாக எமது மக்கள் பாரிய வாழ்நிலைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு நிற்கின்றார்கள். தமிழர் தேசத்தின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகள் சிதைந்து கிடக்கின்றன. தமிழரின் நகரங்களும், பட்டினங்களும், கிராமங்களும் தரைமட்டமாகக் கிடக்கின்றன. வீடுகள், கோவில்கள், பாடசாலைகள் அழிந்து கிடக்கின்றன. காலம் காலமாக இந்த மண்ணில் நிலைத்து நின்ற ஒரு பண்டைய நாகரீகம் வேரோடு சாய்க்கப்பட்டிருக்கிறது.

இச் சிதைவுகள், அழிவுகள் மத்தியிலிருந்து எமது மக்கள் மீண்டும் தமது சமூகப் பொருளாதார வாழ்வை மீளக் கட்டி எழுப்புவது என்பது இலகுவான காரியமல்ல. இதுவொரு பிரமாண்டமான மனிதாபிமானப் பிரச்சினை. இப் பிரச்சினையைச் சர்வதேச சமூகம் அனுதாபத்துடன் அணுக வேண்டும். அழிந்து கிடக்கும் தமிழர் தேசத்தின் புனர்வாழ்வுக்கும் புனர்நிர்மாணத்திற்கும் உதவியளிக்க வெளிநாடுகள் பல முன்வந்துள்ளமை எமக்கு நிம்மதியைத் தருகிறது.

தமிழர் தாயகத்தில் அமைதி நிலை தோன்றியபோதும் இயல்பு நிலை தோன்றவில்லை. “உயர் பாதுகாப்பு வலையங்கள்” என்ற போர்வையில் எமது மக்களின் வாழ்விடங்களை, சமூக, பொருளாதார, பண்பாட்டு மையங்களை சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன. சிறிய அளவிலான புவியியற் பரப்பும், குடிசன நெரிசலும் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டை நாற்பதினாயிரம் படையினர் ஆக்கிரமித்து நிற்கின்றனர். எமது மக்கள் தமது இயல்பு வாழ்வை நடத்த முடியாதவாறு மூச்சுத்திணறும் ஆக்கிரமிப்பு. என்றுமே ஒரு பதட்ட நிலை.

தமிழர் பண்பாட்டின் இதய பூமியான யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறையாக மாற்றப்பட்டிருக்கின்றது. இங்கு எமது மக்களைச் சிங்கள இராணுவம் தனது பாதுகாப்புக் கேடயங்களாகவே பாவித்து வருகிறது. வீடுகளும், வீதிகளும், கிராமங்களும் இராணுவ ஆக்கிரமிப்பில் விழுங்கப்பட்டிருப்பதால் இடம் பெயர்ந்த பல்லாயிரம் மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாது அவதிப்படுகிறார்கள். இப் பிரச்சினைக்குத் தீர்வு காணாத வரை யாழ்ப்பாணத்தில் சமூக அமைதியும் இயல்பு நிலையும் தோன்றுவது சாத்தியமில்லை.

போரை முடிவுக்கு கொண்டு வந்து, போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவசர, அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை பேச்சுக்களின் ஆரம்ப கட்டத்தில் தீர்த்து வைக்க வேண்டும் என்பதே அன்றும் சரி இன்றும் சரி எமது நிலைப்பாடாக இருந்து வருகின்றது. எமது நிலைப்பாட்டை முன்னைய அரசு நிராகரித்ததன் காரணமாகவே அன்றைய சமாதான முயற்சி தோல்வி கண்டது.

ஏதோ நாம் தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தொடுவதற்குப் பயந்து, அன்றாடப் பிரச்சினைகளை வலியுறுத்துவதாக முன்னாள் அரசு தவறாகக் கருதியது. ஆயினும் இன்றைய அரசாங்கம், பேச்சுக்களின் ஆரம்பக் கட்டத்தில் எமது மக்களின் அவசரமான வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வந்து நடவடிக்கைகளை எடுத்து வருவது ஆக்கபூர்வமான அறிகுறியாகும்.

பேச்சுவார்த்;தையின்போது, எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் வரை, சகல விடயங்களையும் பேசுவதற்கு நாம் தயார். ஆயினும் பேச்சுக்கள் எவ்வித நிபந்தனைகளும் நிர்ப்பந்தங்களும் இன்றி, வரம்புகள் வரையறைகள் இன்றி, காலக் கட்டாயமின்றி, சுதந்திரமாக நடைபெறுவதையே நாம் விரும்புகின்றோம். ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டு எல்லைக்குள் பேச்சுக்கள் நிகழ்த்தப்பட வேண்டுமென வற்புறுத்துவதோ, அன்றி நிர்ப்பந்திப்பதோ எமது மக்களின் அடிப்படை அரசியற் சுதந்திரத்தையும், தேர்வையும் மீறுவதாக அமையும். தமது அரசியல் தகைமையையும், தமது சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வையும் நிர்ணயிப்பது எமது மக்களின் அடிப்படையான அரசியல் உரிமையாகும். சுயநிர்ணய உரிமையின் சாராம்சமும் இதுதான்.

ஐ.நா. சாசனத்திலும், பிரகடனங்களிலும் குறிப்பிடப்படும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை மையப் பொருளாகக் கொண்டே எமது போராட்ட இலட்சியம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. அன்றும் சரி, இன்றும் சரி, சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்ட இலட்சியத்தில் நாம் உறுதி பூண்டு நிற்கின்றோம். தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழரின் சுயநிர்ணய உரிமை ஆகியனவையே எமது அரசியல் இலட்சியத்தின் அடிப்படைகள். திம்புவிலிருந்து தாய்லாந்து வரை இந்த அடிப்படைகளையே நாம் வலியுறுத்தி வருகின்றோம். இம் மூலக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.

தனித்துவமான ஒரு மொழி, பண்பாடு, வரலாறு, நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு தாயக நிலம், இன அடையாள உணர்வு போன்ற பண்புகளை உடையவர்கள் என்பதால், எமது மக்கள் ஒரு தேசிய இனமாக, ஒரு மக்கள் சமூகமாக அமைந்துள்ளனர். ஒரு தனித்துவமான மக்கள் சமூகம் என்ற ரீதியில் எமது மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள். சுயநிர்ணய உரிமை என்பது உள்ளான, புறமான இரு அம்சங்களைக் கொண்டது. உள்ளான சுயநிர்ணயம் என்பது ஒரு மக்கள் சமூகத்தின் பிரதேச சுயாட்சி உரிமையை வலியுறுத்துகின்றது.

தமிழ் மக்கள், தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை.

உள்ளான சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது. உள்ளான சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத்திட்;டத்;தை சாதகமாக பரிசீலனை செய்வோம். ஆனால், அதேவேளை, எமது மக்களுக்கு உரித்தான உள்ளான சுயநிர்ணயம் மறுக்கப்பட்டு, பிரதேச சுயாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால் நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.

இனவாதமும், இனவாத ஒடுக்குமுறையுமே பிரிவினைவாத அரசியலுக்கும் கிளர்ச்சிகளுக்கும் மூல காரணமாக அமைகின்றன. நிலையான சமாதானத்தையும், இன ஒருமைப்பாட்டையும், பொருளாதார மேம்பாட்டையும் சிங்கள மக்கள் விரும்புவார்களானால் இனவாத சக்திகளை இனம் கண்டு ஒதுக்க வேண்டும். தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வு காண முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது தாயகத்தில் சுயாட்சி அதிகாரமுடைய ஆட்சியை நிறுவி, தம்மைத் தாமே ஆளுவதற்கு சிங்கள மக்கள் தடையாக இருக்கக் கூடாது. தமிழர்களுடன் சமாதான சகவாழ்வை நடத்துவதா அன்றி தமிழர்களை பிரிந்து செல்ல நிர்ப்பந்திப்பதா என்பது சிங்கள தேசத்தின் அரசியற் போக்கில்தான் தங்கியிருக்கிறது.

நம்பிக்கையூட்டும் நல்லெண்ண சூழ்நிலையில், அரசு-புலிகள் மத்தியிலான பேச்சுக்கள் முன்னேற்றமடைந்து செல்வது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சமரசப் பேச்சுக்களில் உலக நாடுகள் காட்டும் ஆர்வமும், யுத்தத்தால் சிதைந்து கிடக்கும் தமிழர் தேசத்தை மீளக் கட்டியெழுப்பி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வளிக்க முன்வந்திருப்பதும் எமக்கு உற்சாகத்தைத் தருகிறது. நோர்வே அரசின் அனுசரணையுடன் நடைபெறும் சமாதான முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதும், இத் தீவில் வதியும் சகல சமூகத்தினரும் ஒற்றுமையாக, ஒத்திசைவாக ஒன்று கூடி வாழ வேண்டும் என்பதுமே எமது ஆழமான அவா. பெரும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் உலகத்தின் நல்லாசியுடனும் நிகழ்ந்து வரும் சமாதானப் பேச்சுக்களை, தமது சுயநல அரசியல் நோக்கங்களுக்காகச் சிங்களப் பேரினவாத சக்திகள் குழப்பிவிட்டால், அது தமிழ் மக்களைத் தனியரசுப் பாதையில் இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.

அமைதி வழியில், மென்முறை தழுவி, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைய முயன்று வருகின்றோம். காலத்திற்கு ஏற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை.

சத்தியத்தின் சாட்சியாக நின்று, எமது மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்த சத்தியத்தின் வழியில் சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments