இதற்கமைய வண.பிதா லோங் அடிகளாரின் விடாமுயற்சியினால் இந்தியாவின் யாழ் நூலக எரிப்பின் வரலாற்றுப் பின்னணி
-தி.திபாகரன்
1950 களில் யாழ்பாணத்தில் உள்ள நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் யாழ்மக்களின் பேராவலை கருத்திற் கொண்டு தமிழ்க் கல்விமான்கள் 1952, ஆனி 14 ஆம் திகதி சாம்.ஏ.சபாபதியின் தலைமையில் ஒன்றுகூடி முடிவெடுத்தனர்.
இதற்கமைய வண.பிதா லோங் அடிகளாரின் விடாமுயற்சியினால் இந்தியாவின் நூலகர் எஸ்.ஆர் இரங்கநாதன் (நூலகவியலின் தந்தை என போற்றப்படுபவர்) அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்து நூலகத்துறையில் அவரது முகாமைத்துவத் திறனை பயன்படுத்தி நூலக அமைப்பிற்கான பூர்வாங்க திட்டவரைபுகள் வரையப்பட்டது. அவரது பரிந்துரைக்கமைய தமிழக அரசின் கட்டடக்கலை நிபுணர் கே.எஸ். நரசிம்மன் அவர்கள் யாழ்நூலக கட்டடக்கலை நிர்மானியாக நியமிக்கப்பட்டார்.
அன்றைய நாட்களில் அரசியல் தலையீட்டினாலும், இழுத்தடிப்புக்களாலும், கட்டடப்பணி ஆமைவேகத்திலேயே நகரமுடிந்தது. ஏழாண்டுகால இழுபறிக்கு மத்தியில் அரசியல் காரணங்களுக்காக நகரபிதாவின் உத்தரவின் பெயரில் இக்கட்டடத் தொகுதியின் எச் (H) வடிவத்தில் ஒரு சிறு பகுதியை திராவிட கட்டடச் சிற்பக்கலை மரபுக்கமைய அவசர அவசரமாக கட்டப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டதாக காண்பிக்கப்பட்டு 11 ஒக்டேபர் 1959 அன்று யாழ் முதல்வர் அ.த.துரையப்பாவினால் திறந்தும் வைக்கப்பட்டது.
1981ல் நூலகம் எரியுண்ட வேளையிற் கூட கட்டடக்கலை நிபுணர் நரசிம்மனின் வடிவமைப்பான நூலகத்தின் முழுமையான கட்டட திட்டவரைபு பூர்த்தியாக்கப்பட்டிருக்கவில்லை.
யாழ் நூலகம் தென்கிழக்காசியாவிலேயே பெரிய நூலகம் என்ற இன்றைய கால தவறான கருத்தியல் விதைப்பு தமிழர் தரப்பின் தகவல் திரட்டின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிட வல்லது. 1950 களில் இந்த யாழ்ப்பாணப் பொது நூலகம் அதன் எச் (H) வடிவிலான திட்ட வரைபின்படி பல மாடிக் கட்டடத்துடன் முழுமையாகக் கட்டப்பட்டிருந்தால் ஒருவேளை தென்னாசியாவின் சிறந்த நூலகமாகப் பரிணமித்திருக்கலாம்.
ஈழத்தமிழரது வரலாற்று ஆவணங்களையும், கிடைத்தற்கரிய அறிவுப்பொக்கிசங்களையும், அதிகளவான பொது மக்கள் பயன்படுத்தும் நூலகமாகவும், யாழ்மக்களின் கல்வியின் ஊற்றாகவும், தென்னாசியாவில் பிரபலம் வாய்ந்ததும், தமிழீழத்தில் அன்றையநாளில் இரண்டாவது பெரிய நூலகமாகவும் திகழ்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன.
யாழ் நூலக எரிப்பின் அரசியல் பின்னணியை அன்றைய யாழ் நிலவரத்தையும் நோக்கின் ஐக்கியதேசியக்கட்சி முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் கட்சியின் முக்கியஸ்த்தரும் காரைநகரைச்சேர்ந்த கலாநிதி தியாகராஜாவை 24-05-1981ல் வட்டுக்கோட்டை மேற்கு கண்ணகையம்மன் கோவிலடியில் மாவட்டசபைத் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் வைத்து PLOTஅமைப்பைபின் சுந்தரம் அவர்களால் (புதியபாதை) சுடப்பட்டு சிகிச்சை பயனின்றி 25ம் திகதி தியாகராஜா சாவடைந்தார்.
மாவட்டசபைத் தேர்தலைக் குழப்புவதற்காக அன்றைய விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் லெப்.சீலன் தலைமையில் உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோயிலடியில் வைத்து அரசபடைகள் மீது முதலாவது வீதி மறிப்புத் தாக்குதலை 28.05.81 அதிகாலை ஒருமணியளவில் நடத்தினர்.
இதேநேரம் மாவட்ட அபிவிருத்தி சபைத்தேர்தலுக்கான ஆயத்தங்கள் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றுக் கொட்டிருந்தது. அன்று காலை 28ம் திகதி நல்லூர் தொகுதி சிவசிதம்பரத்தின் திருநெல்வேலி செயலகத்தில் ஆயத்த வேலைகள் செய்துகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அரசபடைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
31-05–1981ல் நாச்சிமார்கோயில் முன்றலில் தமிழர் விடுதலை கூட்டணியினரின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில்நின்ற பொலிஸ்சார்மீது PLOT மாணிக்கதாசன் துப்பாக்கிபிரயோகம் செய்தமையால் ஆத்திரமடைந்த அரசபடையினர் நாச்சிமார் அம்மன் கோயில் தேரையும், கோபுரத்தையும் எரித்து வன்முறையில் ஈடுபட யாழில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.
இது இவ்வாறிருக்கையில் காமினிதிசநாயக்க, லலித் அத்துலத்முதலி, பிரேமதாசா ஆகியோருக்கு இடையேயான அதிகார முக்கோண போட்டியில் காமினி மற்றவர்களை வீழ்த்தி தான் முன்னணிக்கு வருவதற்காக இனவாதத்தை கையிலெடுத்தார்.
யார் தமிழர்களுக்கு எதிராகப் பலமாகச் செயற்படுகிறார்களோ அவர்களே சிங்களதேசத்தின் கதாநாயகர்கள் என்ற அன்றைய சிங்கள இனத்தின் கூட்டுமனநிலையை தனக்கு சாதகமாக காமினி கையாண்டார். ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி 31-05-1081 மதியம் யாழ்ப்பாணத்திற்கு மூன்று பஸ்களில் சுமார் 150 வரையான காடையர்களை சிங்களதேசத்திலிருந்து தருவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் விடுப்பில் இருந்த பொலிஸ், கடமையிலிருந்த பொலிஸ் ஆகியோரையும் பயன்படுத்தி 31-05-1981 அன்று பின்னிரவு 19:30 மணியளவில் காமினிதிசாநாயக்கா தானே முன்னின்று யாழ்நூலகத்தை தீயிட்டு எரியூட்டி நாசவேலை செய்தான்.
யாழ்நூலகத்தை எரித்து அறிவியல், பண்பாட்டு, இனவழிப்பை ஐக்கியதேசியக்கட்சி அரசாங்கம் செய்து முடித்தது. ஈழத்தமிழர்களின் விலை மதிக்க முடியாத பொக்கிசங்களான கையெழுத்துப்பிரதிகள், ஓலைச்சுவடிகள், சங்கிலியன் கால மருத்துவ நூல்களான வாகடங்கள் என விலைமதிப்பற்ற 97 ஆயிரம் வரையிலான நூல்கள் எரிந்து சாம்பலாயின. அத்தோடு யாழ்நகரின் கடைகளும், அலுவலகங்களும் எரிக்கப்பட்டதோடு பல பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டனர்
இவ் நாசம் நிகழ்ந்தது அறியாது 01-06-1981ன் காலை விடிந்தது. நூலகம் எரிக்கப்பட்ட செய்தி காட்டுத்தீயாக உலகெங்கும் பரவியது. தமிழினத்தின் சோகநாளாக, கரிநாளாக மாறாத வடுவை ஏற்படுத்திய நாளாக அன்றைய நாள் வரலாற்றில் பதிவாயிற்று.