(ஒளிப்படம்: உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் இயங்கிய கிளிநொச்சி வைத்தியசாலை தாதியரான கஜேந்தினி காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் காட்சி.)
இறுதி யுத்தகாலப்பகுதியில் வைத்திய சேவையின் அளப்பரிய பணியினாலேயே இன்று பலர் உயிரோடு இருக்கின்றார்கள்.
மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்த வைத்தியசாலைகள் ஏனைய வைத்தியசாலைகளோடு இணைக்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்த வைத்தியர்கள் மற்றும் தாதிய, ஊழியர்களும் தொடர்ச்சியாக பணியாற்றி வந்திருந்தனர். கிளிநொச்சி இடப்பெயர்வுக்கு பின்னரே இடநெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே மருந்துக்கான பற்றாக்குறை நிலவியபோதும் கிளிநொச்சியிலிருந்து தருமபுரம் சென்றபோது ஓரளவு அமைவிடத்தினை பெறக்கூடியமாதிரி இருந்தது. தருமபுரம் வைத்தியசாலைக்கு அருகாமையில் தற்காலிக நோயாளர் விடுதிகளை அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருந்தது.
அதே நேரம் விசுவமடு மகாவித்தியாலயத்திலும் கிளிநொச்சி வைத்தியசாலையின் இன்னொரு பகுதி இயங்கி வந்திருந்தது. இது 2008 இறுதி காலம் வரைக்கும் செயற்படுத்தக்கூடிய மாதிரி இருந்த நிலையில் மீண்டும் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் இடம்பெயர்ந்து மூங்கிலாற்றில் மல்லாவி வைத்தியசாலையும், உடையாட்டு மருந்தகத்தில் நட்டாங்கண்டல் வைத்தியசாலையும் உடையார்கட்டு மகாவித்தியாலத்தில் கிளிநொச்சி வைத்தியசாலையும் சுதந்திரபுரம் கொலனியின் தற்காலிகமாக ஒரு வைத்தியசாலையும் வள்ளிபுனம் மகாவித்தியலாயத்தில் முல்லைத்தீவு வைத்தியசாலையும் இயங்கி வந்திருந்தது.
இதன் பின்னரான இடம்பெயர்வுகளில் புதுமாத்தளன் வைத்தியசாலை முள்ளிவாய்க்கால் பாடசாலையில் அமைக்க்கப்பட்டிருந்த வைத்தியசாலையும் இறுதி நாட்களில் முன்பள்ளி ஒன்றில் இயங்கிய வைத்தியசாலையோடு மே மாதம் 15 உடன் முற்றுப்பெற்று விட்டது.
தை மாதம் 2009 இறுதி வாரத்தில் உடையார்கட்டு சுதந்திரபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதல்கள் இடம்பெற்றுகொண்டு இருந்தன. அங்கு காயமடையும் பெரும்பாலானவர்கள் உடையார்கட்டு மகாவித்தியாலத்தில் இயங்கிய கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவர். காயமடையும் மக்களை உடனுடக்குடன் இரத்தப்போக்கினை கட்டுப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் என்றும் மதிக்கப்படவேண்டியர்கள். நான் உடையார்கட்டு வைத்தியசாலையில் நிற்கும் பொழுது வைத்தியசாலை மீதான தாக்குதல்கள் அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் தளபாடங்கள் பெரும்பாலும் சேதமடைந்து விட்டிருந்ததை நேரடியாகவே கண்டேன். தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பொழுது கூட தங்களையும் பொருட்படுத்தாது காயமடையும் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருந்த கிளிநொச்சி வைத்தியசாலை தாதியரான கஜேந்தினி 02.02.2009 அன்று எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார். கட்டடத்தின் முன்பக்கமாகவே காயமடைந்த ஒருவருக்கு மருந்து கட்டிக்கொண்டிருக்கும் கழுத்தில் எறிகணையின் துண்டு ஒன்று பட்டிருந்த நிலையில் கொல்லப்பட்டுவிட்டார். அவர்களின் கண்முன்னே கொல்லப்பட்டுவிட்டார் என்பதற்காக ஏனைய தாதியர்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதை நிறுத்தாமல் தொடர்ச்சியாக தங்கள் சேவையினை ஆற்றியமையை நினைவுபடுத்துகிறேன். (மீள் பதிவு)