×

கொடுமணல் எனும் அமுதசுரபி!

கொடுமணல் எனும் அமுதசுரபி! – விக்னேஷ் சீனிவாசன் (தொல்லியல் ஆராய்ச்சி மாணவர்)

பண்டைய கொங்கு நாடான ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது கொடுமணல். இவ்வூர் சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை இதுவரை மேற்கொண்ட அகழாய்வுகளில் மிக முக்கியமான, உலகளவில் சிறப்புப் பெற்ற அகழாய்வாக, “கொடுமணல்” என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வு கருதப்படுகிறது. இவ்விடத்தின் வரலாற்றுச் சிறப்புகளை முதன் முதலில் ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என்ற அறிக்கையின் வாயிலாக வெளிக்கொணர்ந்தவர் பேராசிரியர் செ.இராசு அவர்களாவார். பின்னர், 1985 முதல் 1991 வரை பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தலைமையில் நான்கு கட்டங்களாக அகழாய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வூர் பெருங்கற்காலம் (Megalithic Age) இரும்புக் காலம் (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), சங்ககாலம் (Sangam Age) என வழங்கப்படும் காலக்கட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாக கருத பல்வேறு தொல்லியல் மற்றும் இலக்கிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

“#கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு

பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்

கடனறி மரபில் கைவல் பாண!

தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை” – பதிற்றுப்பத்து (7ஆம் பத்து, 7ஆம் செய்யுள்)

“#கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்

பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்” – பதிற்றுப்பத்து ( 8ஆம் பத்து, 4ஆம் செய்யுள்)

என்னும் சங்க இலக்கியக் குறிப்புகளிலிருந்து இப்பகுதி சங்ககாலத்தில் பல்வேறு வெளிநாட்டினர் வந்து சென்ற சிறப்புப் பெற்ற பன்னாட்டு வணிகத் தலமாக (பந்தர்) இருந்தது என்பதை அறிய முடிகிறது. யவனர் என இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கிரேக்கம், ரோம், எகிப்து நாடுகளைச் சேர்ந்த மக்கள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர். சங்ககாலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என வழங்கி வருகிறது.

கொடுமணலில் மக்கள் வாழ்ந்த பகுதி (Habitation) மற்றும் ஈமக்குழி (Burial Complex) என இரண்டு வகையான இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மக்கள் இரும்புக் காலத்தைச் சேர்ந்தவர்களாயினும் பெரிய கற்பலகைகள் மற்றும் பெரிய கற்களைப் பெருமளவில் பயன்படுத்தியமையால் இவர்களைத் தொல்லியலாளர்கள் பெருங்கற்படை (megalithic) பண்பாட்டுக்குரிய மக்கள் எனக் கருதுகின்றனர். எனினும் இது ஒரு கருதுகோளே!

இந்த அகழாய்வில் இரும்புக் கருவிகளான கத்தி, வாள், ஈட்டி, கேடயம், மணிகள் (beads), அங்கவடி (horse – stirrups) என ஏராளமாகக் கிடைத்துள்ளன. குதிரையின் அங்கவடி கிடைத்துள்ளது. குதிரை அக்கால வணிகத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்ததை இது வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே குதிரைகளின் பயன்பாடு தமிழக பாறை ஓவியங்களில் பயின்று வந்தாலும் கூட, மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து கடல்வழியாக (அரேபிய) குதிரைகள் ஏராளமாக தமிழகம் வந்திறங்கிய தரவுகளை,

“நீரின் வந்த நிமிர் பரிப் #புரவியும்” என பட்டினப்பாலை (185) குறிப்பிடுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

கார்னீலியன் (carnelian), அகேட் (agate) ஜாஸ்பர் (jasper) பெரில் (beryl), பளிங்கு (quartz), லாபியஸ் லசுலி (Lapius Lajuli), போன்ற அரிய கற்களால் செய்யப்பட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த மணிகள் (beads) ஆயிரக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கொடுமணல் அக்காலத்தில் ஒரு பெரிய தொழிற்கூட நகரமாக (industrial city) இருந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது.

அக்காலத்தில் ரோமானியர் பிரியமுடன் பயன்படுத்திய அரிய கல் வகைகளாக இ.எச்.வார்மிங்டன் அவர்தம் நூலில் (warmington, E.H., The commerce between the Roman Empire and India, 1948) குறிப்பிட்டுள்ளவையாவும் கொடுமணல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கருப்பு-சிவப்பு, கருப்பு நிறம் கொண்ட சங்ககால மண்கலங்களுடன் ரோமானிய மண்கலங்களான அரிட்டெய்ன் மற்றும் ரூலெட் பானை ஓடுகளும் கலந்து காணப்படுவது தமிழ்ப் பண்பாட்டுடன் யவனப் பண்பாடும் கலந்து காணப்படுவதைக் காட்டுகிறது.

கருப்பு – சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பானைகளில் பல்வேறு வகையான குறியீடுகள் (graffiti) காணப்படுகின்றன. இக்குறியீடுகள் எதற்காகப் பானைகளில் கீறப்பட்டன என்பதும், இக்குறியீடுகள் குழுக்குறியீடுகளா அல்லது எழுத்துகளின் தோற்ற நிலைகளின் முதல் கட்டமா? போன்றவை குறித்து ஆய்வாளர்களிடையே இன்று வரை விவாதங்கள் தொடர்கின்றன. எனினும் மேற்சுட்டிய கருப்பு-சிவப்பு, கருப்பு நிற மற்றும் வண்ணப்பூச்சு (russet coated) கொண்ட மண்கலங்கலில் எழுத்துப் ( தமிழ் பிராமி/தமிழி) பொறிப்புகள் காணப்படுகின்றன. இது கொடுமணல் அகழாய்வுச் சிறப்புகளில் ஒன்றாகும்.

இந்திய அளவில் மண்கலச் சில்லுகளில் பழம் எழுத்துகள் அதிகப்படியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கொடுமணல் அகழாய்வில் மட்டுமே என்பது பெருமைக்குரியதாகும். இங்கு மட்டும் 1000க்கும் மேற்பட்ட மண்கலச் சில்லுகளில் எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மண்கலங்களில் காணப்படும் பெயர்கள் பல (காட்டாக: ஆதன், சாத்தன், கோன், அந்தை, மகன்) சங்க இலக்கியப் பெயர்களுடன் ஒத்ததாகக் காணப்படுகின்றன. அக்காலத் தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியிருக்கின்றன என்றால் அது மிகையன்று.

அதேசமயம் அக்காலத் தமிழ்ப் பண்பாட்டோடு பிராகிருத மொழி பேசிய மக்களின் கலப்பும் இருந்ததற்கான பல சான்றுகளும் (காட்டாக: நிகம, விஸாகீ) பானை எழுத்துப் பொறிப்புகளின் வாயிலாக வெளிப்படுவதைக் காணமுடிகிறது. இது இப்பகுதியினுடன் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் வணிக நிமித்தமாகக் கலந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

24 காரட் மற்றும் 22 காரட் மதிப்புடனான பொன் ஆபரணங்கள், வெள்ளி மோதிரங்கள், ஈயத்தாலான வளையல்கள், வளையங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் (காட்டாக: அரிய கற்கள் பதிக்கப்பட்ட வெண்கலத்தாலான புலி), விளையாட்டுப் பொருள்கள், மக்கள் வாழ்ந்த பகுதி மற்றும் ஈமக்குழிகளில் மனித எலும்புக்கூடுகள், விலங்குகளின் எலும்புகள், உலைகள் (furnace), மரக்குச்சிகள் பூமியில் நடப்பட்டதற்கான அடையாளங்கள் என அக்காலப் பண்பாட்டு நாகரிகம் சார்ந்த எச்சங்கள் கொடுமணல் அகழாய்வில் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் யாவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் அகழ்வாய்வில் செங்கற் கட்டிடம் போன்ற கட்டுமானம் ஒன்றும் கூடவே மூன்று முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஒரு தாழியில் எலும்புகள் கிடைத்துள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இங்கு வாழ்வியல் பகுதி மட்டுமல்ல, ஈமக்குழி போன்ற Burial Site களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 250க்கும் மேற்பட்ட ஈமச்சின்னங்கள் கொடுமணல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் Dolmenoid cist மற்றும் Cairn Circle வகையை சேர்ந்தவை. அவற்றில் ஒன்று மிகப்பெரியது. அந்த ஒரு cist-ஐ சுற்றிலும் மிகப்பெரிய அளவிலான குத்துக்கற்கள் நடப்பட்டிருக்கின்றன. அங்கு அகழ்வாய்வு செய்ததில் சில பானைகளில் விலையுயர்ந்த கற்கள் கிடைத்துள்ளன. அந்த cist ஒரு அரசனுக்காகவோ அல்லது தலைவனுக்காகவோ அல்லது வேறு ஏதும் அக்காலத்தில் சிறப்புற்று இருந்த நபர்களுக்காகவோ தான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

பொதுவாக ஈமக்குழிகளில் 3-4 பானைகள் தான் பெரும்பாலும் கிடைத்திருக்கின்றன. ஆனால் வரலாற்றில் முதன்முறையாக 10 பானைகளும் கிண்ணங்களும் கொடுமணலில் மட்டும் தான் கிடைத்துள்ளது. இந்த ஈமக்குழி பானைகளில் பெரும்பாலும் தானியங்கள் நிரப்பப்பட்டிருக்கும். ஏனெனில் பெருங்கற்கால மனிதர்கள் மறுப்பிறப்பு குறித்து நம்பிக்கை கொண்டிருந்தார்கள். நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என நம்பினார்கள். இதுபோன்று மறுப்பிறப்பில் நம்பிக்கை கொண்டதன் விளைவாக எடுக்கப்பட்டதே ஈமச்சின்னங்கள். பெருங்கற்கால சின்னங்கள் பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே அதிகம் கிடைத்திருக்கின்றன. ஏறத்தாழ 2500 இடங்கள் தென்னந்தியாவில் மட்டும் இதுவரை Megalithic site ஆக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தென்னிந்தியாவுக்கு அடுத்ததாக வடக்கிழக்கு மாநிலங்களில் சில இடங்கள் கிடைக்கின்றன. இன்றுவரையிலும் இறந்தவர்களை போற்றும் மரபு தென்னிந்தியாவில் இருந்து வருவது நாம் அறிந்த ஒன்றே!

பதிற்றுப்பத்தின் இரண்டு பத்துகள் கொடுமணல் குறித்து பேசுவதால் அது சேரநாட்டுக்கு உட்பட்ட தொழிற்பேட்டையாக இருக்க அநேக வாய்ப்புண்டு. அதேசமயம் முசிறி, பட்டணம் போன்ற இடங்களில் இருந்து மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு வாணிபம் நடந்த தரவுகள் தொல்லியல் மற்றும் இலக்கிய ரீதியில் உறுதியாகியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

மணிமேகலைக்கு கிடைத்த அட்சயபாத்திரத்தை போன்று தமிழகத்துக்கு கிடைத்த அமுதசுரபி கொடுமணல்!!

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments