ஈழ தேசத்தின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊர். கொக்கட்டி மரங்கள் இங்கே சோலை போன்று காட்சி தருவதால் இதற்கு கொக்கட்டிச்சோலை என்று பெயர் வந்தது. இங்குள்ள மக்களின் வாழ்வாதார தொழிலாக விவசாயம் விளங்குகிறது.
கொக்கட்டி மரத்தின் கீழ் சுயம்பு வடிவமாக சிவன் எழுந்தருளியிருந்த மையினாலும், கொக்கட்டிச் சோலையில் தலம் அமைந்தமையினாலும் கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் என இவ் ஆலையம் பெயர் கொள்ளலாயிற்று. இவ்வாலயம் மட்டுமே சிவன் கோயிலாக தனியிடச் சிறப்பை பெறுகின்றது.
கலிங்க தேசத்திலிருந்து வந்து மண்முனைப் பிரதேசத்தை அரசாட்சி செய்து வந்தவளான கலிங்க தேசத்தரசன் குகசேனனுடைய புத்திரி உலக நாச்சியின் ஆட்சிக்காலத்தில் காடுகளை அழித்து களனிகளாக மாற்றும் வேலைத்திட்டம் நடைபெற்றது. காடுகளை அழித்து கொண்டிருக்கும் அவ்வேளையில் வேடர்குல திடகன் என்பவன் கொக்கட்டி மரப்பொந்தொன்றில் தேன் இருப்பதைக் கண்டு கொக்கட்டி மரத்தை வெட்டியவேளை அதிலிருந்து குருதி பெருக, அதைக் கண்ட அவன் தனது உடையினால் வெட்டு வாயைக் கட்டிவிட்டு உலக நாச்சியிடம் செய்தியைக் கூறினான். உலக நாச்சியும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்த போது மரத்தடியில் ஒரு லிங்கம் இருந்தது. உலக நாச்சியார் அதனை சிவலிங்கம் என உணர்ந்து ஆலயம் அமைத்ததோடு வட நாட்டு கொல்லடத்திலிருந்து பட்டர் மூவரை வரவழைத்துப் பூசை நிகழ்தினாள் என ஆலைய வரலாறு கூறப்படுகின்றது.
இவ்வாலய வரலாற்றுச் சிறப்பினை கல்வெட்டுக்கள், புராண வரலாற்று ஏடுகள், வரலாற்று நூல்கள், கர்ண பரம்பரைக் கதைகள், ஆகியன சிறப்புற எடுத்தியம்புகின்றன. இவ்வாலையத்திலுள்ள சிவலிங்கம் பல நூற் றாண்டுகளுக்கு முன்னரே வழிபட்டு வந்த லிங்கம் எனவும் அது கால ஓட்டத்தினால் மண்ணால் மூடப்பட்டதாகவும், இவ்வாலயம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் இவ்வாலயம் குளக்கோட்டன், கலிங்கமாகன், விமலதர்மசூரியன், விக்கிரம இராஜசிங்கன் முதலிய மன்னர் களால் பரிபாலிக்கப்பெற்ற ஆலயமென்பதையும் வரலாற்று ஏடுகளில் அறிய முடிகின்றது.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்த அப்பாவி பொதுமக்கள் 152 பேரை கைது செய்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.
ஈழ விடுதலை போரில் கொக்கட்டிச்சோலை தனது மகத்தான தியாகத்தையும் வீரத்தையும் மண்ணில் நிலைநிறுத்தியது பல அறிஞர்கள் படைப்பாளிகள் போராளிகள் மாவீரர்கள் என ஈழ மண்ணுக்கு தந்து நிமிர்ந்து சிவ பூமியாக நிற்கின்றது கொக்கட்டிச்சோலை.
வட்டக்கச்சி வினோத்