
கோராவெளி, ஈச்சையடித்தீவுக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் இயற்கை வளம் நிறைந்த விவசாயக் கிராமங்களாகும். மக்கள் நெற்செய்கை மரக்கறிப் பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததுடன், தங்களது கிராமத்திற்குரிய தனித்துவமான கலைகளையும் வளர்த்து வந்தார்கள். கோராவெளிக் கிராமத்தில் இந்து மதத்தவர்களின் பிரசித்திபெற்ற கோராவெளி அம்மன் ஆலயமும்அமைந்துள்ளது.
1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. இராணுவத்தினரும் சிங்கள-முசுலிம் குழுக்களும் மக்கள் மீதான தாக்குலை நடத்திவந்தனர்.
1990.08.14 நண்பகல் செங்கலடி, கல்லடி இராணுவ முகாம்களிலிருந்து வந்த இராணுவத்தினர் கோராவெளி, பச்சையடித்தீவு கிராமங்களைச் சுற்றிவளைத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் வீடுகளிலிருந்தவர்கள், வீதிகளிற் சென்றவர்கள், வயல்களில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் எனப் பதினைந்து பேர் உயிரிழந்தார்கள். இருபத்தைந்து பேர் காயமடைந்தார்கள்.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.