கள்ளீச்சையிலிருந்து வெலிகந்த நோக்கிக் காவல் உலாப்போகும் சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில போராளிகளைக்கொண்ட குழுவின் தலைவி யாக மேஜர் வளர்மதி, குழுவில் ஒருவராக 2ம் லெப். நிலா.
நிலாவும் வளர்மதியும் உயிர் நண்பிகள். இருவரின் உரையாடலிலும் நகைச்சுவை இழையோடும்.
இருநாள் பயணம். தேவையான உணவுப் பொருட்கள், ஆயுத தளபாடங்களோடு பயணம் தொடர்ந்தது. அருவிகள், மலைகள் கடந்து நீண்ட பயணத்தின் முடிவில், தாக்குவதற்காக நிலையெடுத்தனர். ஊர்திகளில் வந்த சிறிலங்காப் படையினர் மீது இருபது நிமிடங்கள்வரை நீடித்த தாக்குதலில், கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களைக் கைவிட்டு ஏனையோர் காடுகளுக்குள் தப்பியோடினர். படையினரின் ஜீப் ஒன்றும், உழவு இயந்திரம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. எல்.எம்.ஜி உட்பட கைப்பற்றப்பட்ட ஆயுதங்களோடு மாவீராங்கணையான 2ம் லெப்.நிலாவின் வித்துடலையும் சுமந்தபடி, மறுபடி மலைகள், அருவிகள் கடந்து தொடர்ந்தது பயணம்.
காரிருளில் தம்மை உருமறைத்த படி இருளோடு இருளாக வயல் வரம்புகளுடன் சில உருவங்கள் ஊர்ந்தன. பூநகரியிலிருந்த சிறிலங்கா படையினரின் தேடொளிகள் உயிர் பெற்றதும் அவை மண்ணோடு ஒன்றின. தேடொளி வேறுதிசை திரும்பியதும் மறுபடி ஊர்ந்தன. எனினும் ஐயங்கொண்ட படையினர் ரவைமழை பொழிந்தனர்.
ஓசையேதும் எழுப்பாமல், காயப்பட்ட தோழிகளைத் தமது தங்ககம்வரை சுமந்துவந்த வேவுப்புலிகள் அவசர முதலுதவிச் சிகிச்சையில் இறங்கினர்.
நீர் தேங்கி நிற்கும் வயல்களில், இரவுகளில் ஊர்ந்து போவதால் உடல் முழுவதும் சேறு அப்பும். சென்றபணி முடித்துத் திரும்பும்வரை சேறுதான் அவர்களுக்குப் போர்வை.
நல்ல குளிர் இரவுகளில் பூநகரிக் கடலை நீந்திக் கடந்து படையினரின் கண்களில் படாமல் கரையேறி, நாகதேவன்துறை கடற்படைத் தளத்தைக்கூட தம் வேவுக் கண்களிலிருந்து விட்டுவைக்க வில்லை இவர்கள்.
தனித்த வேவுப்பாதை. கப்டன் தேனுஜாவின் கனவு அது. அவர் விழிமூடி ஒரு வருடத்தில் நனவானது. பூநகரிப் படைத்தளம் மீது ||தவளைகளெனப் || புலிகள் பாய்ந்தபோது தனித்தனியாக தாம் எடுத்த வேவுப் பாதைகளால் கப்டன் துளசிராமும் லெப்.கேணல் முகுந்தாவும் அணிகளை வழி நடத்தி களம் புகுந்தனர்.