
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்களில் அனைத்துலகத் தொடர்பகத்தின் முதன்மையான செயற்பாடுகளாக கொள்கை பரப்புதல், நிதி திரட்டல், புலம்பெயர்வாழ் தமிழ்மக்களின் நலன் பேணல் மற்றும் ஆயுதக் கொள்வனவும் நாட்டிற்கான வழங்கலும் குறிப்பிடத்தக்கது.
தமிழீழ அரசு நடைமுறையில் இருந்த போது, அனைத்துலகத் தொடர்பகத்தின் கீழ் உலகம் பூராவும் 42 கிளை அலுவலகங்கள் இயங்கி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கேபி ( திரு குமரன் பத்மநாதன்)
கேபி அல்லது செல்வராசா பத்மநாதன் என்கின்ற குமரன் பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மையான ஆயுதக்கொள்வனவுக்கு பொறுப்பாளராக 1993 முதல் 2002 நோர்வேயின் தலையீட்டுடனான போர் நிறுத்தக்காலம் வரை செயற்பட்டார்.
முதலாம், இரண்டாம், மூன்றாம் கட்டப் போரிற்கான தொடர்ச்சியான ஆயுத வழங்கல்கள் இவரது செயற்பாட்டினாலே கிடைக்கப்பெற்றது. இதில் 1994 இல் வெடிமருந்துகள் உக்ரைனிலிருந்து வங்காளதேச பாதுகாப்பு அமைச்சரின் பயனர் சான்றிதழை கையகப்படுத்தி கொண்டுவரப்பட்டது. மேலும் இலங்கை இராணுவத்திற்காக தன்சானியாவில் வாங்கப்பட்ட 81 மிமீ சிறு பீரங்கிக்கான குண்டுகளைக் கையகப்படுத்தி ஈழத்திற்கு கொண்டுவந்தது என்பவற்றைக் குறிப்பிடலாம்.