முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசம் அமைந்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யும் மக்கள் வாழ்கின்றனர். கூடுதலானவர்கள் விவசாயத்தையே தொழிலாக மேற்கொள்கிறார்கள்.
இக்கிராமம் அடிக்கடி இராணுவச் சுற்றிவளைப்புக்கு உட்படுவதுண்டு. 21.04.1985 அன்று இக்கிராமம் அதிகாலை சுற்றிவளைக்கப்பட்டு பல பொதுமக்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சிலர் அரச உத்தியோகத்தர்களென அடையாளம் காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்படாத அனைவரும் அன்று மாலை மூன்று மணியளவில் புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
கைதுசெய்து கொண்டு சென்றவர்களில் இருபத்துநான்கு பேரை இராணுவம் காட்டுக்குள் வரிசையாக நிற்கவைத்துச் சுட்டது. இவர்களில் இராமநாதன், துரைரட்ணம் ஆகிய இருவரும் காயப்பட்ட நிலையிலும், செபஸ்ரியாம்பிள்ளை நடனசபாபதி ஆகியோர் காயம் எதுவுமின்றியும் தப்பினார்கள்.
இராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு உட்பட்டவர்கள் அனைவரையும் இராணுவ ரக் வண்டியில் ஏற்றி ஒட்டுசுட்டான் நோக்கிக் கொண்டு செல்லும் வழியில் காயாமோட்டை என்னுமிடத்தில் தோட்டத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களையும் கைது செய்துகொண்டு இடையில் இறக்கிவிட்டுச் சென்றனர். காயப்பட்டு குற்றுயிராகக் கிடந்தவர்களும் தண்ணீர், தண்ணீர் என்று கத்தியபடி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
அடுத்தநாள் கற்சிலைமடுவில் வைத்து மக்களைக் கொண்டு ரயர்களைச் சேகரித்து இராணுவ வாகனத்தில் ஏற்றிச்சென்று ஒட்டுசுட்டான் காவற்றுறை நிலையத்தின் பின்புறத்தில் வைத்து ரயர்கள் மீது இறந்தவர்களின் உடல்களை அடுக்கி தீமூட்டி எரித்தார்கள்.
புதுக்குடியிருப்பு ப.நோ.கூ.சங்க முன்னால் தலைவர் துரைரட்ணம் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில்:
“அதிகாலையில் நகரைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் பலரைக் கைது செய்தனர். அதில் அரசாங்க ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர். விசாரணை முடிந்த பின்னர் எல்லோரையும் 3.00 மணிளவில் ஏற்றி ஒட்டுசுட்டான் வீதி நோக்கி கொண்டு சென்றனர். பின் காட்டுப்பகுதியில் வைத்து எல்லோரையும் இறக்கி அவ்வீதியிலிருந்த சிறு வீதியில் வைத்து வரிசையாக நிறுத்திச் சுட்டனர். இதில் நானும் நடனசபாபதியும் படுகாயத்துடன் உயிர்தப்பினோம்.”
21.04.1985 அன்று புதுக்குடியிருப்பு ஐயன் கோயிலடிப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.