×

வடமராட்சி- லிபரேசன் ஒப்பரேசன்  நடந்து முடிந்த சில நாட்கள்

வடமராட்சி- லிபரேசன் ஒப்பரேசன்  நடந்து முடிந்த சில நாட்கள்
சின்னனும் பெரிசுமாக – கடற்காற்றுக்குச் சரசரத்துக் கொண்டிருந்த-பனங்கூடலுக்கு நடுவில் ரஞ்சன் நின்றான். இனி ஓட முடியாது. நாலுபக்கத்திலும் பச்சை உடைப்பேய்கள் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த பனங்கூடலிற்குள் நின்ற மக்கள் மேஐர் ரஞ்சனை நடுவில் இருத்திவிட்டுச், சுற்றி நின்றனர்.

வழமையான விசாரணைகள்-சித்திவதைகளை நடாத்தி விட்டு, இராணுவத்தினர் விலகிச் சென்றார்கள். அன்று ரஞ்சன் அங்கிருந்து தெரிந்திருந்தால், அந்தப் பனங்கூடலிலும் பல உயிர்கள் பலியாகியிருக்கக்கூடும். அந்த மக்கள் தமது உயிரைவிட ஒரு போராளியின் உயிரைப் பெறுமதியாகக் கருதியதால், ரஞ்சன் அன்று காப்பாற்றப்பட்டான். அன்றே இது மக்கள் தந்த உயிர்: இந்த மக்களின்ர விடுதலைக்காகத்தான் நான் வாழ்வதும்-சாவதும்… என, உறுதி எடுத்துக்கொண்டான் ரஞ்சன். அவனது முடிவைக் கேட்டுக் கடலில் எழுந்த அலைகள் சிலவும், கரையில் மோதி ஆமோதித்தன.

(லிபரேசன் ஒப்பரேசன்) காலத்திலும், இந்தியப்படை இம் மண்ணை ஆக்கிரமித்திருந்த நேரத்திலும், வடமராட்சிப் பகுதியிலேயே ரஞ்சன் நின்றான். பகற்பொழுதுகளிலும், பயங்கரமான இரவு நேரங்களிலும் ரஞ்சனையும் அவனது தோழர்களையும் மக்கள் தான் மூடிக்காத்தனர்.
இந்தியப்படை வெளியேறி-சிறீலங்காவுடனான யுத்தம் தொடங்கியதன் பின்பு, வடமராட்சிப்பகுதியில் பலம் வாய்ந்ததொரு படையணியை உருவாக்க, ரஞ்சன் இரவு பகலாகப் பாடுபட்டான். அதன்பின்பு அவனும் அவன் வளர்த்தெடுத்த தோழர்களும் வடமராட்சிப் பகுதி மக்களைச் சுற்றிநின்று காத்தனர். ரஞ்சன் ஒரு திறமையான போர்வீரன்: அதே நேரம் இளகிய மனம் படைத்த போராளி – சின்னஞ் சிறுசுகளைக் கண்டால் எப்பவுமே மயங்கிவிடுவான்.

மழைநீர் தேங்கி ஈரமாக இருக்கும் வீதிகளில், சில நேரம் இவனது வண்டி தயங்கும். உடனேயே சித்தப்பா என்றபடி சில் வண்டுகள் ஓடிவரும். அவர்களுடன் கதைப்பதா – புதைந்த வண்டியை எடுப்பதா? அவன் தயங்கி நிற்பான்.
வண்டி உறுமிவிட்டு ஓடமறுத்து நிற்கும். வீதியில் செல்லும் கிளவிகள் (என்ர ராசா) என்று கட்டி அனைத்து முத்தமிட்டுச் செல்வார்கள்: வெற்றிலை எச்சிலால் சிவந்த நெற்றியையும், கன்னத்தையும் அவன் சிரித்தபடியே துடைப்பான். (சீ எச்சில்) என்ற படி சின்னஞ்சிறுசுகளும் சிரிப்பார்கள்.

(இந்தச் சிரிப்பு நிரந்தரமாகி விட வேண்டும் என்பதற்காகத்தான் இண்டைக்கு நாங்கள் சாகிறம்) என்று சொல்வான் ரஞ்சன்.
உண்மைதான், சாவை இவர்கள் தினமும் வரவேற்றதால்தான் இவர்கள் சாவில் வாழ்வு பெற்றார்கள் – இவர்கள் வாழ்வதற்காக மரணித்தவர்கள்.

கோட்டை இராணுவ முகாம்மீதான இரண்டாவது தாக்குதல் முயற்சி.
கோட்டையின் வாசல் பக்கமாக உள்ளே செல்ல வேண்டிய அணியின் தலைவன் ரஞ்சன் தான். தாக்குதல் தொடங்கியது. ரஞ்சனும் அவனது தோழர்களும் முன்னேறினார்கள். ஒரு நிலையில் ரஞ்சனின் துப்பாக்கியை ரவை ஒன்று உடைத்தது. விழுந்த தோழனொருவனின் துப்பாக்கியை ஏந்தியபடி, ரஞ்சன் கோட்டை மதிற்சுவரில் ஏறினான். ஆனால் அவனுடன் வருவதற்கு எவருமே இல்லை, முன்னேறி வந்த வழியெங்கும், அவனுடன் வந்தவர்களெல்லாம்
மரணத்தை தழுவியும், காயமடைந்தும் விழுந்து கிடந்தனர்: அன்று புலிகள் பின்வாங்கினார்கள்.

சில நாட்களின் பின் கோட்டை முற்றுகை வெற்றி அடைந்தது. ரஞ்சன் தனது முகாமில் ஒரு கோட்டையை எழுப்பினான். அதில் கோட்டையி;ல் விழுந்த ஒவ்வொரு போராளியையும் படமாகப் பதித்தான். ஒவ்வொரு நாள் உதயத்தின் பொழுதும் அவர்களில் தான் கண்விழிக்க வேண்டும் என நினைத்தான். மனது மேலும் மேலும் உறுதி பெற்றது. (தாக்குதலை நாடாத்த வேண்டும்: ஆயுதங்களை எடுக்கவேண்டும்) அந்த நினைவே இரவிலும் வந்து போனது,

சிலாவத்துறை இராணுவ முகாம் தாக்குதல் சிறிய இராணுவ முகாமைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டவர்களில் ரஞ்சனும் ஒருவன். தாக்குதல் தொடங்கிச் சில நிமிடங்கள் சென்றன. இரண்டு இராணுவ முகாமிற்கும் மத்தியில் இருந்த காவலரண் புலிகளால் கைப்பற்றப்படுகிறது. அக் காவலரணில் இருந்த இலகு இயந்திரத் துப்பாக்கியை எடுத்தான் ரஞ்சன். அத்துப்பாக்கி இராணுவத்தினரை நோக்கி ரவைகளைக் கக்கத்தொடங்கியது. அதே நேரம், சிப்பாய் ஒருவனின் துப்பாக்கி ரவைகள் ரஞ்சனின் உடலிலும் விழுந்தன.

இன்று, ரஞ்சன் போராளியாக வாழ்ந்த மண்ணிலேயே அவன் பெயரைச் சொல்லும் சிறுவர் பூங்கா ஒன்று, அதில் அவனும் அவனது தோழர்களும் நிழற்படமாக நினைவுகளைச் சொல்லியபடியே நிற்கிறார்கள். ஒளிக்கதிர் தெறிக்கும் உதயங்களின் போதும், மழை இருள் கூடும் அந்தி நேரங்களிலும், சின்னஞ்சிறுசுகளெல்லாம் தாங்கள் நேசித்த சித்தப்பாவைப் பார்த்து, அவருடன் கதைத்து, அவரின் இலட்சியத்தில் கதைக்கிறார்கள். சித்தப்பாவின் கனவைப் போல, நாளைய தேசத்தின் ஆயுதமேந்திய காவல்காரர்களாக அவர்கள் வருவார்களாம்.

https://telibrary.com/wp-content/uploads/2021/03/V_P_22.pdf

விடுதலைப் புலிகள் இதழிலிருந்து
குரல் -22 சித்திரை- வைகாசி 1991

-கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை-

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments