
கி.மு.3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்பிருந்தே இலங்கையில் நிலவியதற்கு சிவ வழிபாட்டின் தொன்மையான ஆதாரங்கள் கட்டுக்கரையில்.
இலங்கையில் சைவ மதத்திற்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு. இம்மதம் பேராசிரியர் பரணவிதான பேராசிரியர் அதிகாரம் போன்ற அறிஞர்கள் பாளி இலக்கியங்கள் பிராமிக் கல்வெட்டுக்கள் என்பவற்றில் காணப்படும் சான்றாதாரங்களை உதாரணங்களாகக் காட்டுகின்றனர். ஆயினும் இம்மதத்தின் தோற்ற காலத்தை உறுதிப்படுத்தும் நம்பகரமான சான்றாதாரங்கள் இலங்கையில் கிடைக்கவில்லை என்ற குறைபாடுகளும் காணப்படுகின்றன. தமிழகத்தில் கீழடி, தொட்டு கொடுமணல, பொருந்தல், அழகன்குளம், ஆதிச்சநல்லூர் முதலான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கிடைத்த மட்பாண்டச் சாசனங்கள் வடஇந்தியாவில் எழுத்து மரபு தோன்றுவதற்கு முன்னரே, தமிழக மக்களிடையே இற்றைக்கு 2600 ஆண்டளவில் தமிழ் எழுத்தும், தமிழ் மொழியும் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டுடன் (பெருங்கற்காலப் பண்பாட்டுடன்) தோன்றியதை நவீன காலக்கணிப்புகள் உறுதிசெய்கின்றன.
ஆயினும் இப்பண்பாட்டு மக்களது சமய நம்பிக்களை உறுதிப்படும் சான்றாதாரங்கள் இங்கு மிக அரிதாகவே கிடைத்து வருகின்றன. அதிலும் சமககால தொல்லியல் அகழ்வாய்வில் பெரிதும் பேசப்படும் கீழடி அகழ்வாய்வில் சமயம் சார்ந்த சான்றுகள் கண்டுகிடிக்கப்படவில்லை என்றே கூறப்படுகின்றது. ஆனால் இலங்கையில் ஆதியிரும்புக்காலப் பண்பாட்டு மையங்களில் (பெருங்கற்கால மையங்களில்) மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் அம்மக்களின் சமய நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் பல சான்றாதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு அண்மையில் வடஇலங்கையில் கட்டுக்கரை, நாகபடுவான் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளைச் சிறப்பாகக் குறிப்பிடலாம் இவ்வாய்வுகளின் போது தமிழகத்தை ஒத்த பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களிடையே சிவன், முருகன், ஐயனார் முதலானகான தெய்வங்களின் சுடுமண்ணணாலான சிலைகள், சிற்பங்கள், குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை சான்றாகக் காணப்படுகின்றன.
அவற்றுள் சிவன் வழிபாடு பற்றி கட்டுக்கரை அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்துடன் கூடிய ஆடை, நந்தியின் உருவம், முத்தலைச் சூலம் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இவ்வாதாரங்கள் தமிழகத்தைக் காட்டிலும் இலங்கையில் சிவ வழிபாடு தொன்மையானது என்பதை உறுதிப்படுத்துவதாகக் கொள்வதற்கு இடமளிக்கின்றது.