சத்யராஜ் சுப்பையன் (பிறப்பு: ஐப்பசி 3, 1954) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார்.
வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர் பித்தன்
ரங்கராஜ் என்ற இயற்பெயர் கொண்ட சத்யராஜ் என்று எம். ஜி. ஆர் 1967 ஆம் ஆண்டு துப்பாக்கி சுட்டினால் தமிழக மக்களிடையே ஏற்பட்ட அனுதாப அலையால் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் அன்றைய திமுக தலைவரும் முதல்வருமான அறிஞர் அண்ணா திமுகவின் பிரச்சார பீரங்கி என்றும் பிரச்சார ராஜா என்றும் பெயர் இட்டார். துப்பாக்கி சுட்டிற்க்கு பிறகு திரையுலகில் வெற்றி நடை போட்ட அரசக்கட்டளை திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை தனது தாயார் சத்யபாமா அவர்களின் பெயரையும் அண்ணா அவர்கள் அன்புடன் அழைத்த பிரச்சார ராஜா என்று பெயரை சேர்த்து அந்த நிறுவனத்திற்க்கு சத்யராஜா என்று பெயர் இட்டார். அதை ரசிகராக கருத்தில் கொண்டு சத்யராஜ் என்று தனது பெயரை திரையுலகில் வைத்து கொண்டார்.
1987இல் சத்யராஜின் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரைப் பத்திரிகை வைத்து அழைத்தனர். அதன்படி எம்.ஜி.ஆரும் தன் துணைவியாருடனும், அமைச்சர் முத்துசாமியுடனும் சென்றார். அதன்பின் திருமணத்திற்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தனது ஞாபகமாக தான் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையைப் பரிசாகக் கேட்டு வாங்கிக் கொண்டார் சத்யராஜ்.
பெரியார் திரைப்படம்
சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காகப் பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு ஜோடியாக மணியம்மை வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழுணர்வு
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். இதில் இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.