
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை – 10.01.1974
1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதை அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் விரும்பவில்லை. அரசாங்கம் இதனை ஏற்றுக்கொள்ளாது கொழும்பில் நேரடியாகவும், யாழ்ப்பாணத்தில் மாநகர மேயர் ஊடாகவும் தொடர்ச்சியான தடைகளை ஏற்படுத்தியது. அத்துடன் மாநாடு நடைபெறுவதற்கான முக்கிய அரங்குகளின் அனுமதி இறுதி நேரம் வரை மறுக்கப்பட்டிருந்தது. மாநாட்டில் கலந்து கொள்ள பல வெளிநாட்டு அறிஞர்களுக்கு விசா மறுக்கப்பட்டது.
இவைகள் எவ்வாறு இருந்தாலும், மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற மனவெழுச்சி அமைப்பாளர்களிடமும், மக்களிடமும் இருந்தது. மக்கள் அலை அலையாகத் திரண்டதைக் கண்ட அரசாங்கம் சற்றுக் கீழிறங்கி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளிநாட்டு அறிஞர்களுக்கு விசா வழங்கியது.
மாநாட்டுக் குழுத்தலைவர் நீதியாளர் தம்பையா மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு விரும்பவில்லை. ஆகையால் அவர் தலைவர் பதவியிலிருந்து விலகப் பேராசிரியர் சு.வித்தியானந்தன் தலைமையில் தமிழாராய்ச்சி மாநாடு மூன்றாம் திகதி ஆரம்பமாகி பத்தாம் திகதிவரை யாழ். முற்றவெளி திறநத் வெளியரங்கில் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் யாழ். நகரம் வந்தார்கள். அதுவரை நடைபெற்ற எந்தவொரு மாநாடும் இதுபோல சிறப்பாக நடைபெறவில்லை. அன்றைய தினம் குடாநாடு விழாக்கோலம் பூண்டிருந்தது.
1974ஆம் ஆண்டு சனவரி பத்தாம் திகதி இறுதி நாளாகக் கொண்டாடப்பட்டது. இறுதி நிகழ்வாக அறிஞர்கள் தமிழின் பெருமைகளையும், பண்பாட்டின் பெருமையையும் பற்றிப் பேசினார்கள். மக்கள் உணர்வோடு கைதட்டி உற்சாகப்படுத்தினர். இறுதியாகத் தமிழகப் பேராசிரியர் “நைனா முகமது” பேசிக் கொண்டிருக்கும் போது யாழ். உதவிக்கு காவற்துறைமா அதிபர் சந்திரசேகரா தலைமையிலான காவற்துறை மாநாட்டில் கலந்து கொண்டிருந்த மக்களைத் தாக்கியதுடன், துப்பாக்கியாலும் சுட்டார்கள். இச் சம்பவத்தில் ஒன்பது பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தனர். அரங்குகள் சேதமடைந்தன. இம்மாநாட்டினைக் குழப்பிய யாழ் உதவிக் காவற்றுறை அத்தியட்சகர் சந்திரசேகரா பின்னர் சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் காவற்றுறை அத்தியட்சகராகப் பதவி உயர்த்தப்பட்டார்.
10.01.1974 அன்று தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோர் விபரம்:
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.