மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பன்னிரண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது.
#”உண்டிமுதற்றே உணவின்பிண்டம்
#உணவெனப்படுவது நிலத்தொடு நீரே – புறநானூறு,18″
நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன.
நம் உடலில் வளி ,அழல் மற்றும் ஐயம் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் மிகுந்தாலும்,குறைந்தாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.
வாதம் சம்பந்த பிணிகள்
வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்கள் உள. நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும். கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
பித்தம் சம்பந்த பிணிகள்
பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்கள் உள. செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
சிலேத்துமம் சம்பந்த பிணிகள்
சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானவை. அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடிமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
நோய்களைத் தவிர்க்கும் முறை பற்றி திருக்குறள் கூறுவது,
‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்’
(நோய் விளைவிக்காதவை என்று கூறப்பட்டவைகளை மட்டும் உண்டு வந்தால் மருந்து என்று எதுவும் தேவையில்லை.).