மருது சகோதரர்களில் மூத்தவரான பெரியமருது அல்லது மருதுபாண்டியர் வேலுநாச்சியாரின் ஆற்றல் மிக்க படைத்தளபதியாகவும் இளையவரான சின்ன மருது அரசதந்திரம் மிக்க அமைச்சராகவும் (திவான்) விளங்கினர். பின்னர் 18 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவர்கள் சிவகங்கை அரசின் அதிகாரம் மிக்க ஆட்சியாளர்களாகவும் உயர்ந்தார்கள். 1800 – 1801 ஆகிய காலகட்டத்தில் நிகழ்ந்த தென்னிந்தியப் புரட்சியை நடத்திய பெரும் சக்தியாகத் திகழ்ந்தனர் .முதல் இந்திய விடுதலைப்போர் என்று பெருமையாக விவரிக்கப்படும் வட இந்திய சிப்பாய்க் கலகத்திற்கு (1857) 56 – ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற மக்களுக்கு அறைகூவல் விடுத்து ‘விடுதலைப் பிரகடனம் ‘ (10 சூன் 1801) ஒன்றை மருது சகோதரர்களே முதலில் வெளியிட்டார்கள்.
1772 – இல் இழந்த சிவகங்கையை அரசியார் வேலுநாச்சியார் மருது சகோதரர்களின் உதவியுடனும் மைசூர் ஆட்சியாளரான ஹைதர் அலியின் படை உதவியுடனும் மீட்டெடுத்தார் (1780). மருது சகோதரர்கள் நவாப் பகுதிகளைச் சூறையாடினர். பிரிட்டிஷ் படைகளைக் கொல்லங்குடியில் தோற்கடித்தனர் . ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ‘இராமநாதபுரம் கூட்டிணைவு ‘என்ற பாளையக்காரர் ஒருங்கிணைப்பின் மையமாக மருது பாண்டியன் விளங்கினார். பின்னர் அத்தகைய கூட்டிணைவுகளை ஒருங்கிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒன்றுபட்ட செயல்முயற்சிகளை மேற்கொள்ள ‘தீபகற்பக் கூட்டமைப்பு’ (1799) என்ற தென்னிந்தியக் கூட்டமைப்பு ஒன்றையும் மருது சகோதரர்கள் உருவாக்கினர்.
திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கத்திலும் ஒட்டப்பட்ட மருதுகளின் விடுதலைப்பிரகடணம் (10 சூன் 1801) தென்னிந்தியாவில் அனைத்து சாதிகளையும் ,இந்து, முஸ்லீம்களையும் இணைத்து, அந்நியராகிய ஐரோப்பியரை எதிர்த்துப் புரட்சி செய்ய அறைகூவல் விடுத்தது. மருது சகோதரர்கள் 1801 – இல் சிவகங்கையைத் தாக்கிய பிரிட்ஷ் படைகளைத் தோற்கடித்தனர். ஆங்கிலேயர், வேறு பகுதிகளில் இருந்தும் இலங்கையிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் புதிய படைகளைக் கொண்டு வந்தனர். லைப்டினன்ட் கர்னல் அக்னியு மற்றும் லெப் கர்னல் இன்னிஸ் மருது சகோதரர்களால் தோற்கடிக்கப்பட்டனர் .
1801 செப்டம்பர் 1 ஆம் நாள், லெப் . கர்னல் அக்னியூ, லெப் கர்னல் இன்ஸ் , லெப் கர்னல் ஸ்பிரை, மேஜர் ஷெப்பர்டு, மெக்காலே மற்றும் பிளாக்பர்ன் ஆகிய தளபதிகள் பல திசைகளிலிருந்தும் காளையர்கோயில் காட்டுப்பகுதிக்குள் புகுந்தனர். மருது சகோதர்கள் சிங்கம் புணரியின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குப் பின்வாங்கினர். தீபகற்பக் கூட்டமைப்பு திண்டுக்கல், சோழபுரம் ஆகிய களங்களில் தோற்றது. மருது பாண்டியர் சோழபுரம் போரில் காயமுற்று பிடிபட்டார் . சின்னமருது கடுமையாகத் தேடப்பட்டு பிடிக்கப்பட்டார். மருது சகோதர்களும் அவர்களுடைய குடுப்பத்தவர்களும் இடுபாடுகளாகிவிட்ட திருப்பத்தூர் கோட்டையில் ( இன்று சிவகங்கை மாவட்டம் , தமிழ்நாடு ) 1801 அக்டோபர் 24 – ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர் .