×

உலக அளவில் தனக்கென கடற்பிரிவு வைத்திருந்த ஒரே இயக்கம்

உலக அளவில் தனக்கென கடற்பிரிவு வைத்திருந்த ஒரே இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான்.

உலகின் மிகவும் புகழ்வாய்ந்த இயக்கமான பாலஸ்தீன விடுதலை இயக்கம் கூட தனக்கென கடற்பிரிவு (Sea Wing) எதையும் வைத்திருந்ததில்லை. 833 மைல் நீள கடல்விளிம்பை கொண்ட நாடு இலங்கை. ஒப்பீட்டளவில் நோக்கினால் சிறீலங்காவை விட தமிழ்ஈழமே மிக நீண்ட கடற்கரையைக் கொண்டது.

இப்படி மிகப்பெரிய கடல்பரப்பையும், கடற்கரையையும் கொண்ட தமிழ்ஈழத்தில் நாளை கடல்பரப்பில் யார் செல்வாக்கு செலுத்துகிறார்களோ அவர்களது கையே ஓங்கும் என்ற முடிவுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வந்தார். இதற்காக கடற்புலிகள் என்ற பிரிவை அமைக்க அவர் முடிவு செய்தார். மிகத் தொலைநோக்கான பார்வை அது.

1990களில் கடற்புலிகள் என்ற பிரிவை தோற்றுவித்ததில் வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் என்ற கர்னல் சங்கர், தலையாய பங்கு வகித்தார். 3000 போராளிகளைக் கொண்ட கடற்புலிகள் பிரிவுக்கு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சூசை (தில்லையம்பலம் சிவனேசன்) தலைவராகப் பொறுப்பேற்றார். கங்கை அமரன் என்கிற அந்தோணி ஜான்சன் போன்றவர்கள் அவரது கரத்தை வலுப்படுத்தினார்கள்.

யாழ்ப்பாணம் ஊரிக்காடு பகுதியில் 300 கடற்புலிகளுக்கு கடலடியில் முக்குளித்து நீந்தும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய வள்ளங்கள், மீன்பிடிப் படகுகள் உதவியுடன் கடற்புலிகள் நடமாடி வந்தார்கள். கடற்படை போர்க்கலங்களைக் கண்டால் அவர்கள் தப்பி ஓட வேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில், கடற்புலிகளின் படகுகளில் மெல்ல மெல்ல வலிமையான கலிபர் சுடுகலன் ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டன. அதே 1990 ஆம் ஆண்டில் கடற்கரும்புலிகள் என்ற படையினர் தோற்றுவிக்கப்பட்டனர்.

1990ம் ஆண்டு, வல்வெட்டித்துறையில் இலங்கைக் கடற்படையின் எடிதாரா கப்பல் கடற் கரும்புலிகளால் தாக்கப்பட்டது.

1991ஆம் ஆண்டு மே மாதம் கடற்கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் அபிதா என்ற கட்டளைக் கப்பல் கடலின் அடியாழத்தில் அதன் முடிவைத் தேடிக் கொண்டது. ஜெயந்தன், சிதம்பரம் என்ற இரு கடற்கரும்புலிகள் அபிதா கப்பலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட படகால் மோதி அதை மூழ்கடித்து ஈகமானார்கள். (பின்னாளில் புலிகளின் ஒரு படையணிக்கு ஜெயந்தனின் பெயர் சூட்டப்பட்டது)

1991ல் கடற்புலிகள் முழு அளவில் வலிமை வாய்ந்த ஒரு பெருஞ்சக்தியாக உருவெடுத்தனர். நடுக்கடலில் கடற்படையினருடன் நேருக்கு நேர் அவர்கள் மோதத் தொடங்கினர்.

1992ஆம் ஆண்டில் கிளாலி கடலில் புலிகளும், மக்களும் தன்னிச்சையாக படகுகளில் சென்று வருவதை இலங்கை அரசு தடுக்க முயன்றது. இதற்காக, நாகதேவன்துறையில் அது கடற்படை தளத்தை அமைத்தது.

அது மட்டுமின்றி, ராணுவத்தினரின் துணையுடன், யாழ்ப்பாண தீபகற்பத்தின் வடமேற்கு முனையில் உள்ள மாதகல்லில் கடற்புலிகளின் முகாம் ஒன்றையும் அது தாக்கி அழித்தது. இப்போது புலிகளின் முறை. இதற்கு தக்க பதிலடி தர புலிகள் திட்டமிட்டனர். அதன் ஒருகட்டமாக, 1992ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம்தேதி, கொழும்பு காலிமுகத் திடல் பகுதியில், கடற்படை அட்மிரல் கிளென்சி பெர்னாண்டோ கொல்லப்பட்டார்.

அதன்பின் பருத்தித்துறை கடலில் கடற்கரும்புலிகள் குண்டு நிரப்பிய படகை மோத விட்டு, கடற்படையின் இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பான நவீன டோரா டோரா பீரங்கிப்படகைத் தகர்த்தனர்.

1993ல் கிளாலி கடல்ஏரியிலும் ஒரு டோரா பீரங்கிப் படகை கடற்புலிகள் தகர்த்ததும் ஆடிப் போன கடற்படை, கிளாலி கடற்பகுதியில் ரோந்து சுற்றுவதை நிறுத்திக் கொண்டது.

1993ஆம் ஆண்டு பூநகரி ராணுவ முகாம், நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை புலிகள் தாக்கி அழித்தபோது அதில், கடற்புலிகளின் பங்கு மகத்தானதாக இருந்தது. நாகதேவன்துறை இறங்குதளம், கறுக்காய்த்தீவு பகுதி ஆகியவற்றை கடற்புலிகள் கடல் வழியாக சூழ்ந்து தாக்கினர்.  இதற்குப் பரிசாக கடற்புலிகளுக்கு இலங்கைக் கடற்படையின் 2 அதிவேக நீருந்து படகுகள் (வாட்டர்ஜெட்கள்) கிடைத்தன.

இந்த வாட்டர்ஜெட் படகுகள் வந்தபின் கடற்புலிகளின் வலு இன்னும் கூடிப்போனது.  கடற் போர்களை நடத்துவது, எதிரியின் கலங்களைத் தாக்கி அழிப்பது மட்டுமின்றி, கடல்வழியே வரும் எதிரியை குறிப்பிட்ட பகுதியில் தரையிறங்க விடாமல் தடுப்பது, புலிகளை கடல் வழியாக அதிக அளவில் ஏற்றிச் சென்று உரிய இடத்தில் தாக்குதலுக்காக தரை இறக்குவது, கப்பல்கள் மூலம் வரும் ஆயுதங்களை நடுக்கடலுக்குச் சென்று படகுகளில் ஏற்றி வருவது என பலவித பணிகளில் கடற்புலிகள் ஈடுபடத் தொடங்கினார்கள்.

1994 செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி மன்னார் அருகே சாகரவர்த்தன என்ற கடற்படைக் கப்பலை புலிகள் மூழ்கடித்தனர். 43 பேர் இருந்த அந்தக் கப்பலில் உயர் அலுவலராக இருந்த கடற்படை லெப்டினன்ட் கமோடார் அஜித் போயாகொட உள்பட 18 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

புலிகளிடம் கைதியாகப் பிடிபட்ட அஜித் போயாகொட அதன்பின்னர் 8 ஆண்டுகாலம் புலிகள் வசம் கைதியாக இருந்தார். முல்லைத்தீவு முகாம் மீது புலிகள் நடத்திய ஓயாதஅலைகள் தாக்குதலின் போது, தரைவழியாக மூன்று புறம் புலிகள் தாக்குதல் நடத்திய நிலையில், நான்காவது பக்கமாக கடல்வழியாகவும் கடற்புலிகள் தரையிறங்கி தாக்குதல் தொடுத்தனர். நான்குபுறமும் முல்லைத் தீவு முகாம் சுற்றிவளைத்து வீழ்த்தப்பட்டது.

ஓயாத அலைகள் 3 இன் இரண்டாவது கட்டத்தின்போது மன்னார் தீவில், கோட்டைப் பகுதியில் நிலை கொண்டிருந்த மன்னார் ராணுவ முகாமைத் தாக்க, பெரிய படகில் ஆர்டிலரி பீரங்கியை ஏற்றிக் கொண்டுச் சென்ற புலிகள், தீவில் பீரங்கியை நிறுத்தி மன்னார் ராணுவ முகாமைத் தாக்கினர். நாச்சிக்குடா தளத்தில் இருந்து பல்லிமுனை கடற்கரை வழியாக கடற்புலிகள் புறப்பட்டுச் சென்று மன்னார் தீவைக் கைப்பற்ற முயன்றனர்.

கிளிநொச்சி நகரத்துக்குத் 7 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இரணைமடு குளத்தில் கடலில் வருவது போல கடற்புலிகள் படகுகள் மூலம் ரோந்து சுற்றிவந்த காலம் ஒன்று இருந்தது.

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் தெற்கே தென்கிழக்கு மூலையில் உள்ள சுண்டிகுளம் பகுதியில் ராடார் வசதியுடன் கூடிய தளத்தை கடற்புலிகள் வைத்திருந்தனர். புங்குடுத்தொடுவை, நல்ல தண்ணீர் தொடுவை, சாளை பகுதிகளிலும் கடற்புலிகள் தளங்கள் அமைத்திருந்தனர்.  பூநகரியை கைவிட்டுவிட்டு எதிரி நழுவியபோது கடற்புலிகள் அங்கும் தளம் அமைத்துக் கொண்டனர்.

இரண்டாம் உலகப்போரின்போது நடந்த நார்மண்டி தரையிறக்கம், கொரியப்போரின்போது நடந்த இஞ்சோன் தரையிறக்கம் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக பிரிகேடியர் பால்ராஜ் நடத்திய குடாரப்பு தரையிறக்கத்தின்போது அதற்கு படகுகள் மூலம் உதவி, உலக வரலாற்றில் அழியா இடம் பிடித்தனர் கடற்புலிகள்.

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

Kadalpulikal

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments