×

தியாகி சிவகுமாரன் தனது இறப்பிற்குச் சிலநாட்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு..

தியாகி சிவகுமாரன் தனது இறப்பிற்குச் சிலநாட்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக இலங்கையின் பிரதமர், இந்தியத்தலைவர்கள்,அமெரிக்கத் தூதர், மற்றும் பத்திரிகையாளர்களுக்குக் கடிதமொன்றை எழுதி தனது நண்பர்களிடம் சேர்த்திருந்தார். தமிழரின் நிலைபற்றித் தெளிவாக எழுதப்பட்ட கடிதம் இதுவாகும்,

15.01.1974
அன்புமிகு நண்பா,
எனது கண்ணீர் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்.
10.01.1974 இல் நடந்த சம்பவமும் பொலீஸ் அட்டூழியமும், அதனால் ஏற்பட்ட தாக்கமும் நெஞ்சை விட்டகலவில்லை. காங்கேசன்துறை இடைத்தேர்தல் நடக்கவேண்டுமென்பதற்காகப் பொறுமையுடன் இருக்கச்சொல்லிச் சொன்னீர்கள். இருந்தும் என்ன பயன் ? பொலீசார் தாங்களாகவே குழப்பத்தை உண்டுபண்ணுகின்றனர். அடுத்த பொங்கல்வரை நான் உயிருடன் இருப்பது நிச்சயமில்லை. அதற்கிடையில் நான் இறக்கநேரிடின் தயவுசெய்து இக்கடிதத்தைப் போதிய பிரதிகள் எடுத்து முக்கியமானவர்களுக்கு அனுப்பிவைக்கவும்.

இங்ஙனம் தங்கள் இனிய நண்பன்
பொன்னுத்துரை சிவகுமாரன்,

முக்கியமானவர்கள் பார்வைக்கு அனுப்பவேண்டிய கடிதம்…

இதை எழுதும் சிவகுமாரனாகிய நான் எச்சந்தர்ப்பத்திலும் உயிர்விடலாம். அமைதியாக இருந்தால் காங்கேசன்துறை இடைத்தேர்தலை நடத்துவோம் என பிரதமமந்திரி வாக்குறுதியளித்ததால் அமைதியாக இருந்தோம். என்னால் மேலும் பொறுக்கமுடியவில்லை.

தமிழர் ஒருபோதும் வேறுமொழி பேசும் இனத்தினால் ஆளப்படுவதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பிரிட்டிஷ்காரரே காலமறிந்து எல்லாநாடுகளுக்கும் சுதந்திரம் கொடுத்தனர். அப்போது சுந்தரலிங்கம் போன்ற தலைவர்கள் விட்ட பிழையால் எமது தலைவிதியை சிங்கள அரசு நிர்ணயிக்கும் தவறு ஏற்பட்டது, தற்செயலாக ஏற்பட்ட தவறுக்காகத் தமிழினம் நீண்டகாலம் அடிமையாக இருக்க வேண்டுமா ? சிங்கள இனத்துக்கு இருக்கும் ஆசை எங்களுக்கு இருக்கக்கூடாதா ? போராடி அழிவேற்படுத்திய பின்னர்தான் சுயநிர்ணய உரிமை கிடைக்குமா ? அல்லது நிலமை அறிந்து அரசே நம்தலைவர்களுடன் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளுமா ?

வாழு, வாழவிடு என்பதே எமது கொள்கை. சிங்கள மக்களை ஏமாற்றி அவர்களது மனதில் வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு ஆட்சியில் நீடிக்க எண்ணுகிறது அரசு. அதனால்தான் தமிழர்களது பிரச்சனைகளைத் தீர்க்க அரசு முயலவில்லை. தமிழர்களைச் சுதந்திரத்துடன் வாழவிடுங்கள், பின்னர் பாருங்கள், உங்கள் பொருளாதாரப் பிரச்சனைகளையும் நாமே தீர்த்துவைப்போம்

#சிவகுமாரன்

 

 

Sivakumar latter – அன்புமிகு நண்பா

தியாகி பொன்.சிவகுமாரன் அண்ணா அவர்களின் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

guest


0 Comments
Inline Feedbacks
View all comments