வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747)[சான்று தேவை][1] இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.
இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.
தமிழகத்தில்
சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்லத் திட்டமிட்டு, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; மதுரையில்காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டியுள்ளார். குறிப்பாக புனித பெரியநாயகி அன்னைக்கு தமிழ் கலாச்சாரப்படி அன்னை மாமரிக்கு புடவை உடுத்திய படி மரத்தாலான சுரூபங்களை செய்து அன்னைக்கு பெருமையும் புகழும் உலகறியச் செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள தவளப்பள்ளம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், ஆவூர் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், கடலூர் மாவட்டம் கோனான்குப்பம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னைக்கு ஆலயம், ஏலாக்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம் ஆகியவற்றைக் கட்டிள்ளார். இவர் கட்டியுள்ள அனைத்து ஆலயங்களும் ஒரே வடிவில் இருக்கிறது. இவர் கட்டி எழுப்பியுள்ள ஆலயத்திற்குல் ஐம்பது பேர் மட்டுமே அமரலாம்.
1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.
முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840இல் வெளியிட்டார். அவர் 1840இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843இல் அப்பாவுபிள்ளை பதிப்பித்தார். எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றி அச்சான முதல் நூல் இதுவே. ஆனால், இதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார்.
வீரமாமுனிவரின் வரலாற்றை எழுதிய முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை வீரமாமுனிவர் தொண்டும் புலமையும் என்னும் ஆய்வுநூலில் ச. இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார் முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் தத்துவ போதகர் என்று சிறப்புப்பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி என்னும் மறைபரப்பாளர் பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு ஏற்றியுரைத்ததே என்று இராசமாணிக்கம் ஆய்வினடிப்படையில் நிறுவியுள்ளார். தத்துவ போதகர் 1606இல் மதுரை வந்து ஐம்பது ஆண்டுகளாக உழைத்தபின் 1656 சனவரி 16ஆம் நாள் மயிலாப்பூரில் உயிர்துறந்தார். அவருக்குத்தான் தத்துவ போதகர் என்ற பெயர் இருந்தது.
வீரமாமுனிவரையும் தத்துவ போதகரையும் பிரித்தறியாமல் எழுந்த குழப்பத்தை இராசமாணிக்கம் பின்வருமாறு விவரிக்கிறார்:
வீரமாமுனிவரே தமிழ் நாட்டில் செல்வாக்கோடு வழங்கி வருவதாலும், தத்துவ போதகர் யார் என்றுகூடப் பொதுமக்கள் அறியாததாலும், தத்துவபோதகர் ஆற்றிய தொண்டு முதலிய எல்லாம் வீரமாமுனிவர் மீது ஏற்றிக் கூறுவதோடு வீரமாமுனிவரையும் தத்துவ போதகர் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சைவ உணவையே கையாண்டது, அன்றாட நோன்பு இருந்தது, உயர்ந்த ஆடைகளையே அணிந்தது, பூணூல் போட்டது, கொடியுடைய கோல் ஏந்திச் சென்றது, பல்லக்கில் சென்றது, வடமொழியிலும் தெலுங்கிலும் தமிழில்போல் பாண்டித்தியம் பெற்றது, முதல் முதலாகத் தமிழிலும் தெலுங்கிலும் உரைநடை நூல்கள்.இயற்றியது, இவைபோன்ற பலவற்றைக் கையாண்டவர் தத்துவ போதகர். இவற்றை எல்லாம் வீரமாமுனிவர் செய்ததாக முத்துச்சாமிப் பிள்ளையும் அவரைப் பின்பற்றிய பல ஆசிரியர்களும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது…கொடியுடைய கோலோ, பூணூலோ வீரமாமுனிவர் மேற்கொள்ளவில்லை. அவற்றை அணிந்தவர் தத்துவ போதகரே. தத்துவ போதகர் வேறு, வீரமாமுனிவர் வேறு. ஆகவே வீரமாமுனிவரைத் தத்துவ போதகர் என்று அழைப்பதோ, தத்துவ போதகர் படத்தை வீரமாமுனிவரின் உருவமாகக் காட்டுவதோ பொருத்தமற்றது.
மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்
இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.
இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; “சுவடி தேடும் சாமியார்” எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிசங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம் திருப்புகழ் , நன்னூல் ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.
தமிழ் கற்க ஏதுவாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.
அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று “ாாா” சேர்த்தேழுதுவது வழக்கம். “ஆ” என எழுத “அர” என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி “ஆ, ஏ” என மாறுதல் செய்தவர் இவர்.
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை உணர்ந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.