×

வேள் பாரி

ஒரு சிறிய ராஜ்யத்தின் ஆட்சியாளரான வேள் பாரி, சேர, சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் கூட்டுப் படைகளால் பல ஆண்டுகளாக முற்றுகையிடப்பட்டார்.

இறுதியில், பல ஆண்டுகள் போர் மற்றும் முற்றுகைக்குப் பிறகு, அவர் தோற்கடிக்கப்பட்டார். அவரது கவிஞர் கபிலர், பாரி மன்னனின் இழப்பை மிகவும் வருத்தினார், மேலும் பாரியின் இரண்டு மகள்களான அங்கவை மற்றும் சங்கவை ஆகியோரை காப்பாற்றிக் கவனித்துக்கொண்டார்.

வேள்பாரி பறம்பு மலையைத் தலைமை இடமாய்க் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர்.குறிஞ்சி முருகனின் வேடர்குலமும் குறவள்ளி கொடிக்குலமும் ஓரே இனமாகச் சேர்ந்த வேளிர் குல வழியில் வந்த வள்ளல் பாரி(மலையமான்). பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது ‘பிரான்மலை’ என்று அழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் பாண்டிய அரசின் எல்லைப் பகுதியாகச் சுட்டப் பெற்றது பறம்புமலை ஆகும். பக்தி இலக்கியக் காலத்தில் இம்மலை ‘கொடுங்குன்றம்’ என்று வழங்கப்பட்டது.. பிரான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி திருப்பத்தூர் வட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகில் உள்ளது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விடப் பெரும் புகழ் பெறக் காரணம் அவரது கொடைத்தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.

இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் கபிலர் பாரியின் நண்பர். திருச்சியிலிருந்துமதுரை செல்லும் வழியில் கொட்டாம்பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; ‘பொய்யாநாவிற்கபிலர்’ என்று புகழப்படுபவர். இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர்.

                                                                                              பறம்புமலை

மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு அரசர் வேள்பாரியின் புகழ் தென்னகம் முழுவதும் பரவி இருந்தது. பாரி மூவேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்டார். வேள்பாரிக்கு இருமகளிர் உண்டு. அங்கவை சங்கவை ஆகியோர் இவரின் மகள்கள் ஆவர். ஆதரவின்றிருந்த பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணி ஔவையார் முயன்றபோது அதனைத் தடுக்க மூவேந்தர்கள் முயன்றனர். மூவேந்தரையுமே ஔவையார் அழைத்து, அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் கரபுரநாதர் கோவிலில் மணம் செய்து வைத்தார். அந்தக் கோவில் தற்போது சேலத்தில் உத்தமசோழபுரம் (சோழன் இருந்த இடம்) என்ற பகுதியில் உள்ளது. மேலும் அருகில் வீரபாண்டி (பாண்டியன் இருந்த இடம்), சேலம் (சேரநிலம்-சேரன் இருந்த இடம்) உள்ளது. இவ்வாறு மூவேந்தர் முன்னிலையில் ஏற்பட்ட மண உறவின் காரணமாகவும், மூவேந்தரின் மக்களுடனும் உண்டான மண உறவின் காரணமாகவும் மலையமான் தெய்வீக ராஜனின் சந்ததியினர் பாரியின் வம்சம் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி,

“பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்” என்பதாக அமைகிறது, பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி. இவரின் மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார்.

என்றைக்கும் பாரியின் வம்சமாகக் கல்வெட்டு கூறும் பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு வம்சத்தோர் மலையமான்கள். மேலும் “

தெய்வக்கவிதைச்செஞ்சொற்கபிலன் மூரிவண்தடக்கை பாரிதனடைக்கலப் பெண்ணைமலையற் குதவிப்பெண்ணை அலைபுனல்அழுவத்து அந்தரிட்சம்செல மினல்புகும்விசும்பின் வீடுபேறெண்ணி கனல்புகும் கபிலக்கல்லது*.

” –என இராசராச சோழன் கல்வெட்டும் மலையமான் பாரி வம்ச உறவினை மெய்ப்படுத்தும் கல்வெட்டு மூலமும் இவ்விரு வேளிர் வம்சமாக அறியப்படுபவர்.

வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச்செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ்பெற்ற சுந்தரர் -‘திருத்தொண்டத்தொகை’ என்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவர் – பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் புறநானூறு என்னும் சங்கத்தொகை நூலுள் பல உள்ளன.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments