நாம் வாழும் இந்த உலகத்தைப் பல உலகங்களாக வகைப்படுத்தலாம். எல்லையற்ற பிரபஞ்சமாக எங்கும் வியாபித்து நிற்கும் பேருலகம். ஒன்பது கிரகங்களில் ஒரு கிரகமாக, சூரியன் என்ற நட்சத்திரத்தை சுற்றி உலா வரும் பூவுலகம். மனித உறவுகளால் பின்னப்பட்டிருக்கும் சமூக உலகம். மூளைய நரம்பு மண்டலமாக மண்டையின் ஓட்டுக்குள் மறைந்திருந்து செயற்படும் மனவுலகம். இப்படியாக பல உலகங்களுக்குள் எமது வாழ்க்கை ஓடுகிறது. இந்த வகையில் கருத்துலகம் என்ற ஒரு உலகமும் உண்டு.
கருத்துலகம் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? அது எப்படி இயங்குகிறது?
கருத்துலகம் என்றால் கருத்துக்களால் அமையப் பெற்ற உலகம். எண்ண உலகம். மனித சிந்தனைகள், நம்பிக்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள், வேதாந்தங்கள், தத்துவங்கள், இலக்கியங்கள் என்ற ரீதியில் கருத்துக் குவியல்களைக் கொண்ட உலகம். பலவகைப்பட்ட இந்தக் கருத்துருவங்களின் ஒட்டுமொத்தமான கட்டமைப்பையே இங்கு கருத்துலகமெனக் குறிப்பிடுகிறேன்.
கருத்துக்கள் என்றால் மனிதர்களின் மனக் குகைக்குள் வசிக்கும் அரூபமான நிழலுருவங்கள் அல்ல. அன்றி, அவை அனுபவத்திற்கு அகப்படாத பூடகமான மானசீகப் பொருட்களுமல்ல.
கருத்துக்களுக்கு இருப்புண்டு. திண்ணியமான பொருளிய வாழ்வுண்டு. கருத்துக்கள் மனித பண்பாட்டு உலகிலிருந்து பிறப்பெடுக்கின்றன. அவை மனிதர்களைப் பற்றிக் கொள்கின்றன. கருத்துக்களுக்கு அபார சக்தியுண்டு. அவை மனிதர்களைப் பற்றிக் கொண்டு அவர்களது வாழ்க்கையை நிர்ணயிக்கும் சக்தியுடையனவாக இயங்குகின்றன.
அது ஒரு பொது நூலகம். நகரப் புறத்தில் ஒரு அழகிய பூங்காவிற்கு அண்மையில், அமைதியான சூழலில் அமையப்பெற்றிருக்கிறது. அதனுள் ஆயிரமாயிரம் நூல்கள். நேர்த்தியாக, ஒழுங்கு வரிசையாக, அலமாரிகளிலும், நிலையடுக்குகளிலும் அவை அடுக்கப்பட்டிருந்தன. இலக்கியம், தத்துவம், சட்டம், அரசியல், சமூகவியல், இறையியல் என்ற ரீதியில் பல துறை சார்ந்த பல்லாயிரம் புத்தகங்கள். ஒரு பிரமாண்டமான கருத்துலகத்தின் பொருளியத் தோற்றப்பாடாக அந்நூலகம் விளங்கியது.
அந்த நூல்கள் அனைத்துமே உயிரற்ற சடப்பொருட்களாக, வெறும் அச்சிடப்பட்ட கடுதாசிப் பண்டங்களாக காட்சி தந்தபோதும், அப்புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு அதிசயமான இறவாப் பொருள் ஒளிந்து கிடந்தது. ஒவ்வொரு நூலிலும் ஒரு படைப்பாளியின் ஆன்மா குடிகொண்டிருந்தது. அந்தப் படைப்பாளி மரணித்து பல ஆண்டுகள் கழிந்திருக்கலாம். அல்லது பல நூற்றாண்டுகள் கழிந்திருக்கலாம். ஆயினும் அப்படைப்பாளியின் எண்ணங்கள், சிந்தனைகள், கருத்துக்கள், கோட்பாடுகள், அவன் ஆய்வு செய்து கண்ட உண்மைகள், அவனது கண்டுபிடிப்புகள், வாழ்வனுபவத்திலிருந்து அவன் பெற்ற தரிசனங்கள் – எல்லாமே எழுத்து வடிவத்தில் நூலாக, அவனது வாழ்வின் சாட்சியாக, காலத்தால் சாகாத அவனது சிருஷ்டியாக, ஒரு மனிதத்தின் பேருண்மையாக அங்கு இருப்புக் கொண்டு இருந்தது.
தினமும் அந்த நூலகத்திற்குப் பல வாசகர்கள் வருவார்கள். அவரவருக்குப் பிடித்தமான துறைகளில், அவரவருக்குப் பிடித்தமான நூல்களைத் தெரிந்தெடுத்துப் படிப்பார்கள். வாசிப்பில், வாசகனுக்கும் அந்த நூலைப் படைத்த படைப்பாளிக்கும் மத்தியில் ஒரு விசித்திரமான உறவு நிகழ்கிறது. மானசீகமான ஒரு சந்திப்பு நிகழ்கிறது. அகவயமான ஒரு சங்கமம் நிகழ்கிறது. படைப்பாளியின் எழுத்துலகில், அவனது கருத்துலகில், அவனது அனுபவக் களத்தில் பிரவேசிக்கும் வாசகன் படைப்பாளியுடன் இணைந்து ஒரு தேடுதலை நடத்துகிறான். ஒரு விசாரணையை நடத்துகிறான். அந்தத் தேடுதலில், அந்த விசாரணையில், படைப்பாளியின் தரிசனத்தை வாசகன் தரிசித்துக் கொள்கிறான். அவனது பார்வை இவனைப் பற்றிக் கொள்கிறது. கருத்துக்கள் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை நிகழ்கிறது.
அன்றொரு காலம், பல யுகங்களுக்கு முன்னர், இந்தப் பூமியில் ஒரு கருத்துப் பிறப்பு எடுத்தது. கருத்துக்களின் மையக் கருத்தாக அது புனிதம் பெற்றது. மனிதர்களை அது ஆழமாகப் பற்றிக் கொண்டது.
அந்தக் கருத்துக்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான். மலைகளைப் பெயர்த்து, பாறைகளைத் தகர்த்து கலைவடிவம் கொடுத்தான். ஆயிரமாயிரம் ஆலயங்கள் எழுந்தன.
அந்தக் கருத்துக்கு மனிதன் விளக்கங்களைக் கொடுத்தான். வியாக்கியானங்கள் அளித்தான். அர்த்தங்களைக் குவித்தான். வேதங்கள் தோன்றின. சித்தாந்தங்கள் பிறந்தன. கிரிகைகள், சடங்குகள் தோன்றின. நிறுவனங்கள், நிர்வாக பீடங்கள் தோன்றின. கோடானு கோடி அடியார்கள் தோன்றினர். ஆராதனைகள் நடத்தினர்.
அந்த மையக் கருத்திலிருந்து இப்பூவுலகில் பல நாகரீகங்கள் தோன்றின. கிறீஸ்தவ, இஸ்லாமிய, இந்து, பௌத்த நாகரீகங்களாக மானிடம் பிளவுபட்டது. போர்கள் நிகழ்ந்தன. நாடுகளும் இனங்களும் மோதின. பூமியில் இரத்த ஆறுகள் ஓடின. அந்தக் கருத்து மனிதர்களை ஆழமாகப் பற்றிப் பிடித்து அவர்களை ஆட்டிப் படைத்தது.
கருத்துலகம் மனிதர்களை இயந்திரமாக இயக்குகின்றது. மனிதர்களின் நம்பிக்கைகளுக்கும் அவர்களது சமூக செயற்பாடுகளுக்கும் ஆதாரமாக விளங்குகின்றது.
நாம் பிறந்த கணத்திலிருந்தே கருத்துலகம் எம்மை ஆட்கொண்டு விடுகிறது. நாம் விழிப்புணர்வு பெறுவதற்கு முன்னரே எமக்கு விலங்குகளை மாட்டிவிடுகிறது. விபரமறியாத பருவத்திலேயே எமது விதியை நிர்ணயித்து விடுகிறது.
நாம் பிறந்த கணத்திலிருந்து எமக்கொரு பெயர் என்றும், எமக்கொரு சாதி என்றும், எமக்கொரு மதம் என்றும், மரபு என்றும், சம்பிரதாயம் என்றும் கருத்துலகம் குத்திவிடும் சமூகக் குறிகள் சுடுகாடு வரை எம்மைப் பின்தொடர்கின்றன. நாம் வாழ்ந்த குடும்பம், நாம் படித்த பாடசாலை, நாம் வழிபட்ட கோவில், நாம் வாசித்த நூல்கள், நாம் பழகிய நண்பர்கள், நாம் வரித்துக் கொண்ட ஆசான்கள் என நாம் கொண்ட உறவுகளால் காலம் காலமாக எமது மூளையில் திணிக்கப்பட்ட எண்ணங்கள், நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், உலகப் பார்வைகளால் எமது மனமும் எமது சுயமும் தோற்றப்பாடு கொள்கிறது. எம் மீது திணிக்கப்பட்டதும் நாமாகப் பற்றிக் கொண்டதுமான கருத்துக்கள் எமக்கு உள்ளே இருப்புக் கொண்டு எம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன. நாம் கருத்துக்களால் வனையப்பெற்ற சமூகப் பொம்மைகள்.
கோவிலில் அந்தச் சடங்கு நடக்கிறது. குருவானவர் பூசை செய்கிறார். அப்பத்தையும் முந்திரிப் பழச்சாறுடைய கிண்ணத்தையும் உயர்த்திப் பிடித்தவாறு செபிக்கிறார். சிலுவையில் நிகழ்ந்த கடவுளின் மரணம் குறியீட்டுச் சடங்காக மேடையேறுகிறது. அவன் முழங்காலிட்டபடி தலைகுனிந்து, கைகூப்பியவாறு வணங்குகிறான். நம்பிக்கை என்ற கருத்தியக்கம் அவனை ஆட்கொண்டு இயக்கியது. அன்று காலை, ஒரு மணி நேரமாக அவனும் அவனுடன் சேர்ந்து மற்றவர்களுமாக அந்த மத பண்பாட்டுச் சடங்கில் பங்கு கொண்டனர்.
ஒருவனது நடத்தை, அவனது செயற்பாடு, அவன் நாளாந்தம் நடத்தும் வழிபாடுகள், மற்றவர்களுடன் சேர்ந்து அரங்கேற்றும் சம்பிரதாயச் சடங்குகள், உறவு முறைகள் – எல்லாமாக அவனது சமூகச் செயற்பாடுகள் அனைத்தையுமே கருத்துலகம் நிர்ணயித்து விடுகிறது.
மனிதர்கள் தம்மை அடையாளம் காணவும், சமூகப் பிறவிகளாக தம்மை உருவாக்கிக் கொள்ளவும், மற்றவர்களுடன் உறவுகொண்டு பண்பாட்டு வாழ்வில் பங்குகொள்ளவும் கருத்துலகம் வழிசெய்து கொடுக்கிறது. இந்த வகையில் தனிமனித வாழ்விற்கும், சமூக சீவியத்திற்கும் கருத்துலகம் ஆதாரமாக விளங்குகின்றது.
கருத்துக்கள் சமூக உலகம் சார்ந்தவை. கருத்துலகமானது சமூக உலகத்தின் ஒரு துணை உலகமாக, சமூகக் கட்டமைப்பின் ஒரு அமைப்பாக, மனித வாழ்வியக்கத்தை ஊடுருவி நிற்கிறது.
கருத்துலகத்தை சமூக உலகமே படைக்கிறது. சமூக நிறுவனங்களே கருத்துலகை உருவாக்கம் செய்கின்றன.
குடும்பம், பாடசாலை, பல்கலைக் கழகம், கோவில், கட்சி, ஊடகம் என்ற ரீதியில் கருத்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. குடும்பம் மொழியைக் கற்றுக் கொடுக்கிறது. பேசும் ஆற்றலைப் பெற்றுக் கொடுக்கிறது. எழுத்தறிவைப் பெற்றுக் கொடுக்கிறது பாடசாலை. பல்வேறு கலைகளையும் புலமைகளையும் பயிற்றுவித்து அறிவாற்றலை வளர்த்து விடுகிறது பல்கலைக் கழகம். அடுத்த உலகம் பற்றியும் அழியாத ஆன்மா பற்றியும், எல்லாம் வல்ல இறைசக்தி பற்றியும் போதனை செய்கிறது மதம். கருத்துப் பரப்புரை செய்கிறது கட்சி. தகவல்களைத் தந்து கருத்துகளை விதைக்கிறது ஊடகம். பேசும் மொழியாக, எழுத்தாக, பாடங்களாக, போதனைகளாக, பிரசங்கமாக, பிரச்சாரமாக, செய்தியாக, தகவலாக பல்வேறு வழிகளில் பல்வேறு வடிவங்களாக, பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக கருத்து உற்பத்தியும் கருத்துத் திணிப்பும் நிகழ்கிறது. நாம் பிறந்த கணத்திலிருந்தே எமது மனதின் நினைவுப் பசுமையில் கோடானு கோடி கருத்துருவங்கள் விதைக்கப்படுகின்றன. நாம் விசாரணை செய்யாது விழுங்கிக் கொள்ளும் கருத்துக்களிலிருந்தும் நாம் விரும்பிப் பற்றிக் கொள்ளும் எண்ணங்களிலிருந்தும் அவற்றின் தன்மைகளிலிருந்தும் எமது சுயம் வளர்கிறது; எமது ஆளுமை வனையப் பெறுகிறது; எமது சிந்தனையும் செயற்பாடும் சீவியமும் அமைந்து விடுகிறது.
கருத்துக்களைப் படைத்து, அந்தக் கருத்துக்களை வெகுசன அரங்கில் பரப்பி, சமூகக் கருத்தோட்டத்தை கட்டி வளர்த்து, சமூக சிந்தனைப் போக்கை நெறிப்படுத்தி, சமூகக் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கருத்து உற்பத்தி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. இன்றைய நவயுகத்தில் ஊடகங்களே பிரதான கருத்து உற்பத்தி நிறுவனமாகக் கொள்ளப்படுகின்றன. மனிதர்கள் மீது கருத்தாதிக்கம் செலுத்தி, அவர்களைக் கட்டுப்பாட்டுடன் ஆளுவதற்குக் கருத்துத் திணிப்பு அவசியம் என்பதால் உலகத்திலுள்ள பல அரசுகளும் அதிகார வர்க்கங்களும் கருத்து உற்பத்தி நிறுவனங்களாக ஊடகங்களைத் தமது அதிகாரக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றன. கருத்துக்களை மக்கள் மீது திணித்து, மக்களின் விழிப்புணர்வை மழுங்கடித்து, மக்களின் மனவரங்கில் ஒரு பொய்யான, போலியான சிந்தனையுலகைச் சிருஷ்டித்து, கருத்தாதிக்கம் மூலம் தமது ஆட்சியை வலுப்படுத்தி நிலைப்படுத்த முனைகின்றன. இந்த வகையில், கருத்துருவாக்கமானது மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு அடக்குமுறை வடிவமாகும்.
சமூகச் சிந்தனை உலகை மாற்றியமைக்கும் வகையில் கருத்துருவாக்கம் செய்வது ஒரு கலை. மிகவும் நுட்பமான ஒரு கலை. மெய்மையைத் திரிவுபடுத்தி, பொய்மையை மெய்மையாகக் காட்டும் ஒரு சூட்சுமமான கலை. படித்தவர்களும் சரி, பாமர மக்களும் சரி, இந்தக் கண்கட்டு வித்தையை இலகுவில் கண்டு கொள்ள முடியாது. இன்றைய உலகில் இந்தக் கருத்துருவாக்கக் கலை ஒரு பெரும் வர்த்தகமாக வளர்ந்து வருகிறது. இந்தக் கருத்துருவாக்க கலையில், அதன் வர்த்தக ரீதியான வளர்ச்சியில் அமெரிக்க ஊடகங்கள் உலகில் முன்னணி வகிக்கின்றன. அமெரிக்க ஊடக உரிமையாளர்கள் பெரும் முதலாளித்துவ முதலைகள். பெரும் செல்வந்தர்கள். இந்த ஊடகச் சொந்தக்காரர்களான வர்த்தகர்களுக்கும் அதிகார ஆதிக்கம் பெற்ற அரசியல்வாதிகளுக்கும் மத்தியில் ஒரு நெருங்கிய உறவுண்டு. இந்த உறவின் அடிப்படையில், பரஸ்பர நலன் பேணும் நோக்கில், ஊடகங்கள் ஆட்சியதிகாரத்திற்கு முண்டுகொடுத்து நிற்கின்றன. ஆட்சியாளரின் அநீதிகளை நியாயப்படுத்தி வருகின்றன.
சிந்தனைச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், அடிப்படையான மனித சுதந்திரம், சனநாயக சுதந்திரம் என்ற ரீதியில் சுதந்திர விழுமியத்தின் உன்னதத்தை உலகிற்குப் போதித்து வருகிறது அமெரிக்கா. சுதந்திரம் என்ற இக்கருத்துருவத்தின் தோற்றப்பாட்டிற்கு அப்பால், அந்தப் பொய்யான முகமூடிக்கு அப்பால், காலம் காலமாக அமெரிக்க அரசு புரிந்து வந்த அநீதிகளையும், அதனை நியாயப்படுத்த அமெரிக்க ஊடகங்கள் கையாண்ட யுக்திகளையும் தகுந்த ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பெருமை அமெரிக்கப் பேரறிஞரான நோம் சொம்ஸ்கியைச் சாரும். அமெரிக்காவின் சனநாயக முகமூடியை கிளித்தெறிகிறார் சொம்ஸ்கி. சுதந்திரம் என்றும் மனித உரிமை என்றும் அமெரிக்க அரசியலுலகில் பேசப்படுவது எல்லாமே அர்த்தமற்ற சொல்லாடல்கள். நடைமுறை நிதர்சனத்திற்கு மாறான வார்த்தைப் பிரயோகங்கள். ‘சுதந்திர உலகம்’ என்ற ஒரு போலியான கருத்துருவத் திரைக்குப் பின்னால் மறைந்து நின்று, மற்றைய நாடுகளதும் சமூகங்களதும் சுதந்திரங்களை நசுக்கி வருவதாக அமெரிக்கா மீது குற்றம் சுமத்துகிறார் சொம்ஸ்கி. சுதந்திர நாடுகள் மீது படையெடுப்பது, ஆக்கிரமிப்பது, மக்களின் ஆதரவுடைய ஆட்சியைக் கவிழ்ப்பது, ஆட்சி மாற்றங்களை அரங்கேற்றுவது, சர்வாதிகார ஆட்சிகளுக்கு முண்டுகொடுப்பது, பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி கொடுப்பது, இனவாத அரசுகளுக்கு ஆயுத உதவி வழங்குவது, மனித இனத்தை அழிக்கவல்ல அணுவாயுதங்களை உற்பத்தி செய்து குவிப்பது – இவ் விதமான அட்டூழியங்களை அமெரிக்க அரசு புரிந்து வர அதனையெல்லாம் சுதந்திரத்தின் பெயரால் நியாயப்படுத்தி வருகின்றன அமெரிக்க கருத்துருவாக்க நிறுவனங்களான ஊடகங்கள். இப்படியாக, அமெரிக்க அரசின் அசிங்கமான உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறார் சொம்ஸ்கி. எந்தவொரு காலத்திலும், எந்தவொரு சமூகத்திலும் அதிகார மேலாண்மையும் கருத்துநிலை மேலாதிக்கமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக, ஒன்றுக்கொன்று முண்டுகொடுத்து நிற்கின்றன.
அன்றொரு காலம், காலனித்துவப் பேரரசுகள் இந்தப் பூமியில் தமது வல்லாதிக்கத்தை விரிவுபடுத்தியபோது ஆயுத வன்முறையை மட்டும் அவை பாவிக்கவில்லை. கருத்து ஆதிக்கத்தையும் ஒரு அடக்குமுறைக் கருவியாக அவர்கள் பிரயோகிக்கத் தவறவில்லை. முதலில் தமது மொழியைத் திணித்தார்கள். தமது மொழியைப் பயின்றவர்களுக்குக் காலனித்துவ நிர்வாகத்தில் வேலை வாய்ப்பு அளித்தார்கள். அடுத்ததாக, தமது மதத்தைப் பரப்பினார்கள். தமது மொழியைப் பயின்று, தமது மதத்தையும் தழுவிக் கொண்ட சுதேசிய மக்களுக்கு எல்லா சலுகைகளையும் வழங்கினார்கள். பின்னர் தமது அரசியல் ஆட்சிமுறைக் கோட்பாடுகளைத் திணித்தார்கள். இறுதியாக, மேற்கத்தைய தார்மீக தத்துவங்களைப் பரப்பினார்கள். மேற்கத்தைய தார்மீக விழுமியங்களின் மகத்துவத்தைப் போதித்தார்கள். இப்படியாக மேற்குலக காலனித்துவவாதிகளின் மதம், மொழி, அரசியல், தார்மீகம் என்ற ரீதியில் அந்நியப் பண்பாட்டுக் கருத்துருவங்கள் சுதேசிய மக்கள் மீது திணிக்கப்பட்டன. காலனித்துவமானது தான் ஆக்கிரமித்த நாடுகளின் நிலத்தையும், அதன் வளங்களையும் சுரண்டுவதுடன் நின்றுவிடவில்லை. கருத்தாதிக்கத்தைத் திணித்து சுதேசிய மக்களின் மனவுலகத்தையும் அது ஆக்கிரமிக்க முயன்றது.
கருத்து விலங்கிட்டு மனித மனங்களைச் சிறை கொள்வது ஒரு நுட்பமான அடக்குமுறை யுக்தி. உலகெங்கும் அடக்குமுறையாளர்கள் இந்தக் கருத்தாதிக்க யுக்தியையே கடைப்பிடிக்கின்றார்கள். மனிதர்களை விழித்தெழச் செய்யாது அவர்களை அறியாமை உறக்கத்தில் ஆழ்த்துவதற்கு ஏகாதிபத்தியவாதிகளும் சரி, பேரினவாதிகளும் சரி, இந்தக் கருத்துப் போதையையே பாவித்து வருகின்றனர். அடிமை கொண்ட மக்களின் கிளர்ச்சியை நசுக்க, புரட்சியை முறியடிக்க, விடுதலை உணர்வைக் கொன்றுவிட கருத்தாதிக்கமானது ஒரு கனரக ஆயுதமாகப் பாவிக்கப்பட்டு வருகிறது.
கருத்துலகமானது எமது சமூக வாழ்வை ஊடுருவி நிற்கிறது. சமூக உறவுகளோடு பின்னிப் பிணைந்து நிற்கிறது. எமது சிந்தனையையும் செயற்பாட்டையும் நிர்ணயித்து வருகிறது. காலையில் எழுந்து பத்திரிகைகளை வாசிப்பதிலிருந்து அல்லது வானொலிச் செய்திகளைக் கேட்பதிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை, நாளாந்தம் பல்வகைப்பட்ட உறவு நிலைகளில் மற்றவர்களது எண்ணங்களை, கருத்துக்களை, அபிப்பிராயங்களை, பார்வைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். எமது மனவரங்கில் தொடர்ச்சியாக, முடிவில்லாது கொட்டப்படும் எண்ணங்களின் இயல்புகளை, கருத்துக்களின் தன்மைகளை, பார்வைகளின் அந்தரங்க நோக்குகளை நாம் விழிப்புணர்வுடன் விசாரணை செய்து பார்க்கத் தவறினால் கருத்தாதிக்கச் சிறையிலிருந்து நாம் விடுதலை பெறுவது சாத்தியமல்ல.