×

மனிதனைத் தேடும் மனிதன்

ஆதி மனிதன், தனது உலகானுபவத்தை அர்த்தமுள்ள சப்தங்களாக வார்த்தைகளில் உருவகித்து, பேசும் ஆற்றல் பெற்று, சுயமாகச் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அவனிடம் அந்தக் கேள்வி பிறந்தது.

கேள்விகளுக்கு எல்லாம் மூலக் கேள்வியாக, வாழ்வியக்கத்தின் அர்த்தத்தையே தொட்டு நிற்கும் கேள்வியாக, ஆதி மனிதன் தன்னை நோக்கி அந்த வினாவை எழுப்பினான்.

“நான் யார்?”

எல்லையற்ற பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து திசைதெரியாது தவித்த மானிடத்தின் அவலக் குரலாக அந்தக் கேள்வி எழுந்தது.

அந்தக் கேள்வி பிறந்த கணத்திலிருந்து இன்றுவரை, ஒரு நீண்ட முடிவில்லாத சுயவிசாரணைத் தேடுதலாக மனிதன் தன்னைத் தானே தேடிக் கொண்டிருக்கிறான். அந்தத் தேடுதல் இன்னும் முடியவில்லை.

அன்றிலிருந்து இன்றுவரை, ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் காலநதி இந்தப் பூமியின் முகத்தையே மாற்றிவிட்டது. நாகரீகங்கள் தோன்றி, வளர்ந்து, சிதைந்து அவற்றின் புதைகுழியிலிருந்து ஒரு புதிய உலகம் பிறந்து விட்டது. படிப்படியாகப் பொருளுலகின் சூட்சும முடிச்சுகளை மனிதன் அவிழ்த்துவிட்டான். என்றுமில்லாவாறு மனித அறிவு வளர்ந்தது. விண்ணுலக அண்டத்தின் விசாலம் தொட்டு, நுண்ணுலக அணுவின் மூலம் வரை இயற்கையின் எண்ணில்லாப் புதிர்களை எல்லாம் மனிதன் அறிந்து கொண்டான். ஆனால் மனிதன் தன்னைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ளவில்லை. மனிதன் யார் என்ற கேள்வியைப் பின்தொடரும் தேடுதல் ஒரு முடிவில்லாத தொடர் கதையாக இன்னும் நீள்கிறது.

அன்றொரு காலம், கிரேக்க நாட்டில் ஒரு வயோதிப தத்துவஞானி இருந்தார். அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக மக்கள் கருதினர். அந்த மனிதர், இரவு வேளையில், ஒரு கையில் ஊன்றுகோலுடனும் மறு கையில் ஒரு விளக்குடனும் அதென்ஸ் நகர வீதிகளில் யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தார். தனக்கு எதிரே வரும் மனிதர்களை வழிமறித்து, கைவிளக்கை உயர்த்திப் பிடித்து அவர்களது முகத்தை உன்னிப்பாக நோட்டமிடுவார். இப்படியாகத் தினமும் இரவில் விளக்கு வெளிச்சத்தில், மாறி மாறி மனித முகங்களை தரிசிப்பதில் அவரது காலம் கழிந்தது. இவரது தொல்லை தாங்காது ஒரு நாள் அந்த நகரவாசிகள் அவரிடம் சென்று, “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டனர்.

“நான் ஒரு மனிதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.” என்று அந்தத் தத்துவஞானி பதில் சொன்னார்.

பொய்யான, போலியான மனிதர்கள் மத்தியில் ஒரு உண்மையான மனிதனை அந்த ஞானி தேடிக் கொண்டிருந்தாராம்.

இப்படியாக மனிதனை மனிதன் தேடிய விசித்திரமான வரலாறு நீண்ட காலத்திற்கு முன்னரே தொடங்கிவிட்டது.

ஆதியிலிருந்தே மனிதன் ஒரு கனவு கண்டான். இந்தப் பூவுலக வாழ்வின் நிர்ப்பந்தங்களுக்கு அப்பால், நிச்சயமற்ற தன்மைகளுக்கு அப்பால், துன்பத்தின் அழுத்தத்திற்கு அப்பால், காலத்தின் எல்லைக்கு அப்பால், சாவின் நியதிக்கு அப்பால், இல்லாமை என்ற சூன்யத்திற்கு அப்பால், ஒரு நித்திய சீவியத்தை, பேரானந்த பரவசத்தில் சதா லயித்திருக்கும் சிரஞ்சீவியான வாழ்வைக் கனவு கண்டான். மனிதனின் இந்தக் கனவிலிருந்து ஒரு கருத்துலகம் பிறந்தது. அழியாத ஆன்மா என்றும் ஆவி உலகம் என்றும் அடுத்த பிறவி என்றும் சுவர்க்கம் என்றும் நரகம் என்றும் இந்தப் பூவுலகத்திற்கு அப்பால், நாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மடியும் இந்த நிஜவுலகத்திற்கு அப்பால், நாம் தொட்டுணர்ந்து பட்டறிந்து கொள்ளும் இந்தப் புறவுலகத்திற்கு அப்பால், மனிதன் ஒரு பூடகமான உலகைக் கற்பிதம் செய்து கொண்டான். இந்தக் கற்பனாவாதம் இயற்கைக்குப் பதிலாக ஒரு இந்திரலோகத்தைப் படைத்தது. மனிதன் ஒரு அந்நிய உலகத்தின் அபூர்வப் பிறவியாக மாற்றப்பட்டான். இதனால் பூமியில் புதைந்து கிடந்த மனிதனின் பூர்வீக வேர் பிடுங்கி எறியப்பட்டது. மனிதனின் மனக்குகை இருளுக்குள், அடி மன பாதாளத்திற்குள், ஆதியும் அந்தமுமற்ற அழியாத ஆன்மா ஒன்று புகுந்து கொண்டது.

அந்த ஆன்மத்தின் இரகசியத்தை மனிதன் தேடத் தொடங்கினான். இதனால் புதிய கேள்விகள் பிறந்தன.

‘நான் யார்?’ என்ற மையக் கேள்வியுடன் ‘நான் எங்கிருந்து வந்தேன்?’ ‘நான் எதற்காக இங்கு வந்தேன்?’ என்ற புதிய புதிரான வினாக்களும் எழுப்பப்பட்டன.

இந்த வினாக்களும் அவற்றிற்கு அளிக்கப்பட்ட விளக்கங்களும் அதனால் எழுந்த கருத்துருவப் பொய்மைகளும் உண்மையான மனிதனை இந்த உண்மையான உலகத்திலிருந்து அந்நியமாக்கியது. மனித உலகத்திற்கும் மனித வாழ்விற்கும் விசித்திரமான வியாக்கியானங்கள் கொடுக்கப்பட்டன.

இந்த விசித்திரமான பார்வையில் இப்பூவுலகம் ஒரு மாயலோகம். ஒரு மானசீகத் தோற்றப்பாடு. எமக்குள்ளே இருந்து கொண்டு, எல்லாம் தெரிந்ததாக எண்ணிக் கொள்ளும் எமது மனம் பொய்களைக் கொண்டு உருவகிக்கும் ஒரு போலியான உலகம். சத்தியத்தின் இருப்பிடமாக இன்னொரு உலகம் இருக்கிறதாம். அந்த ஆன்ம உலகிலிருந்து நாம் இங்கு வந்து, வந்து, வாழ்ந்து விட்டுப் போகிறோம். விதி என்ற முடிவில்லாப் பெருங்கதையில் நாமெல்லாம் சிறு, சிறு நாடகப் பாத்திரங்கள். வந்து, வந்து நடித்துவிட்டுப் போகிறோம். எம்மைச் சாவு தீண்டுவதில்லை. உடல்களை உடையாக அணிந்து, பின் உரிந்து விட்டுச் செல்கிறோம். இந்தப் பூமி ஒரு தற்காலிக தங்குமிடம். பாவங்களைச் சுமப்பதற்கும் ஆசைகளைத் தீர்ப்பதற்கும் கர்மவினை கழிப்பதற்கும் நாம் இங்கு வந்து தங்கிச் செல்கிறோம். பிறப்பு, இறப்பு என்ற சூட்சுமச் சக்கரத்தில், முடிவில்லாத ஒரு சங்கிலித் தொடர்பில் பிணைபட்டு, இழுபட்டு, நசிபட்டு எமது வாழ்வு நகர்கிறது. இந்தப் பொய்யான பூவுலக மாயையிலிருந்து விடுபடும் வரை எமக்கு விடிவில்லை. இந்த உலகத்தைத் துறந்து, உறவுகளைத் துறந்து, உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து பரிபூரண துறவறத்தில் விமோசனத்திற்கு வழி இருக்கிறது. உள்ளேயுள்ள உள்ளொளியின் தரிசனத்தில், அந்த மெஞ்ஞான விழிப்புணர்வில், ‘நான்’ என்ற பொய்ப்பொருள் செத்துவிட மெய்ப்பொருள் புலனாகும். அந்த ஞானோதயத்தில் விதியின் விலங்குகள் உடைந்து விழும். பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்ற சங்கிலிப் பிணைப்பிலிருந்து விடுதலை கிட்டும்.

இந்த விபரீதமான ஆன்மீக விசாரணையில் ‘நான் யார்?’ என்ற தேடுதல் ‘நான் ஒரு பொய்’ என்ற கண்டுபிடிப்புடன் முடிவடைகிறது.

வேதகாலம். மணிபுரி என்ற நாட்டின் மன்னன் துறவறம் பூண்டு, அந்தக் குருஷேத்திரம் வருகிறான். மெஞ்ஞானம் பெற்ற அந்த முனிவனிடம் மண்டியிடுகிறான்.

“நான் மணிப்புரி நாட்டின் மன்னன். எனது வயோதிபத்தில் வாழ்க்கையைத் துறந்துவிட்ட நான், மெய்ப்பொருளைக் கண்டு கொள்ள விரும்புகிறேன். நீங்கள் தான் எனக்கு ஞானவொளி காட்டி, வழி காட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.

தியானத்திலிருந்து விழித்துக் கொண்ட முனிவர், மன்னனைப் பார்த்து, “நான் செத்துவிட்டதும் என்னிடம் வா” என்று சொல்லிவிட்டுக் கண்களை முடிக் கொண்டார்.

ஒன்றுமே புரியாது, குழப்பமடைந்தவனாக ஆச்சிரமத்திற்கு வெளியே வந்த மன்னன், முனிவனின் சீடனைப் அழைத்து, முனிவன் கூறிய வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டான்.

“நான் செத்துவிட்டதும் என்று முனிவர் தன்னைக் குறிப்பிடவில்லை. உனக்குள்ளே, உனது ஆசையின் வடிவமாக, உனது அகங்காரத்தின் இருப்பிடமாக இயங்கிக் கொண்டிருக்கும், உனது ‘நான்’ முதலில் இறக்க வேண்டும். உனது சுயத்தின் சாவுக்குப் பின்னரே தன்னிடம் வருமாறு குருநாதர் கூறியிருக்கிறார்.” என்று அந்தச் சீடன் அரசனுக்கு விளக்கம் கொடுத்தானாம்.

‘நான்’ என்ற பொய்யைச் சாகடிப்பதற்கு முன்னரே அந்த அரசன் செத்துப் போனான்.

‘நான்’ என்பது பொய் என்றால், எனது பிரக்ஞையின் பிரமை என்றால், எனது மனவுலகம் சிருஷ்டிக்கும் மாயை என்றால், ‘நான்’ என்று எனக்குள்ளிருந்து சிந்திப்பவனாக, உணர்பவனாக, உணர்ச்சிவசப்படுபவனாக, ஆசைப்படுபவனாக, நானாக என்னை இயக்கி வரும் அந்தப் பிரகிருதி யார்?

“நான் என்பது ஒரு எண்ணம். எண்ணவோட்டத்தின் நெற்றிக் கண்ணாக அமையப் பெறும் ஒரு எண்ணம்; மனவுலகம் உள்வாங்கிக் கொள்ளும் கோடானு கோடி எண்ணப் படிமங்களின் மையப் படிமமாக ‘நான்’ என்ற சுயம் எழுகிறது,” என்கிறார் ஒரு ஞானி.

அப்படியானால், நான் என்பது ஒரு மானசீகப் பொருளா? நினைவுகளின் நிழலாக, படிமங்களின் நடுவப்படிமமாக, எண்ணச் சிதைவுகளிலிருந்து உயிர்பெறும் ஒரு மானசீகப் பேய்த் தோற்றமாக மனிதனின் சுயத்தை, அவனது ஆளுமையைச் சித்தரிக்க முடியுமா?

‘நான்’ என்பது எனது மனநிலைக்கு அப்பால், எனது உயிர்நிலை சார்ந்த சுயவுணர்வாகவும் இயங்குகிறது அல்லவா? எனது உயிரின் இருப்பிடமாக, பொருளுருவம் பெற்றிருக்கும் உடற்கூறும் எனது சுயத்தின் திண்ணியமான பொருள் வடிவம் அல்லவா? உடலும் உயிருமாக, இரத்தமும் சதையுமாக, உணர்ச்சியின் பிண்டமாகவும் ‘நான்’ இருப்புற்று இருக்கிறேன் அல்லவா?

‘நான்’ என்பது அகவுலகத்துப் பிசாசு அல்ல. அன்றித் தெய்வலோகத்துப் பதுமையும் அல்ல.

மனிதன் என்பவன் இயற்கையின் குழந்தை. இயற்கை என்ற மாபெரும் கலைஞனால் படைக்கப்பட்ட ஒரு கலை வடிவம்; உயிர் வடிவம். இயற்கையின் கருவகத்துடன் மனிதனின் தொப்புள் கொடி பின்னிப் பிணைந்து கிடக்கிறது. ஒரு புறம், இயற்கையின் மடியில் வேர் பதிந்து நிற்பவனாகவும், மறுபுறம் சமூகப் பிறவியாகவும், சமூக வாழ்வியக்கத்தில் உருவாக்கம் பெறுபவனாகவும், இருமுகப் பரிமாணத்தில் மனித வாழ்வு அமைகிறது.

மனிதன் உணர்ச்சிமயமானவன். உணர்ச்சிப் பிண்டமாக இயற்கை மனிதனைப் படைத்திருக்கிறது. இயல்பூக்கங்களாக, இயல்புணர்ச்சிகளால் (instincts) அவை மனிதனை ஆட்டிப் படைக்கின்றன.

இயற்கை மனிதனைப் படைத்தது மட்டுமன்றி, மனிதன் தன்னைத்தானே படைத்துக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும், தனது இனத்தை விருத்தி செய்து கொள்ளவும் நிர்ப்பந்திக்கிறது. இந்த நிர்ப்பந்த சக்தியாக, உந்துதலாக, இயல்புணர்ச்சிகள் மனிதனை ஆட்கொள்கின்றன.

இந்த இயல்புணர்ச்சிகளின் மையமாகப் பாலுணர்ச்சி அமைகிறது. ஒரு ஜீவ சக்தியாக சகல ஜீவராசிகளையும் அது இயங்க வைக்கிறது. சகல உயிர்களையும் மீளாக்கம் செய்கிறது. அது என்னையும் உன்னையும் பற்றிக் கொள்கிறது. அதன் ஈர்ப்புச் சக்தியிலிருந்து நீயும் நானும் தப்பிவிட முடியாது. படைத்தலின் தவிர்க்க முடியாத நியதியாக அது எம்மைப் பணிய வைக்கிறது. இன்ப நுகர்ச்சியின் பரவசத்தைக் காட்டி அது எம்மை ஆகர்ஷித்துக் கொள்கிறது.

பாலெழுச்சியாக தோற்றப்பாடு கொள்ளும் இந்த ஜீவ சக்தியை, லிபிடோ (libido) என்றும், உயிரியக்க சக்தி (life force) என்றும், காதல் தெய்வம் (Eros) என்றும் பிரபல உளவியல் அறிஞரான சிக்மெண்ட் பிராய்ட் விபரிக்க முனைகிறார்.

பாலெழுச்சியின் திருவிளையாடல்களை மையக் கருவாகக் கொண்டே பிராய்டின் உளப்பகுப்பியல் (psychoanalysis) மனிதனையும், மனித வாழ்வையும் விசாரணை செய்கிறது.

மனிதன் விழிப்பு நிலையில் இருக்கும் பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் சாதாரண பிரக்ஞைக்கு (consciousness) அப்பால் நனவு அற்ற நிலையில், ஒரு மனவுலகம் உண்டு. இது மனிதனின் ஆழ்மனம்; நனவிலி மனம் (unconscious mind). இதுவே மனித மன இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கிறது; மூலமாக இருக்கிறது. இந்த நனவிலிமனம் என்ற கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டே பிராய்டின் உளவியல் தத்துவம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்த நனவிலி மனம் எப்படியானது? எப்படி இயங்குகிறது? மனிதனின் ஆழ்மனப் பாதாளத்திற்குள், செத்துப் போன நினைவுகளின் கல்லறைகளுக்கு அப்பால், என்ன ஒளிந்து கிடக்கிறது?

மனதின் ஆழத்தில், நனவிலி மனதில் புதினமான பொக்கிஷம் எதுவுமே இருக்கவில்லை. மனிதன் கனவு கண்ட அழியாத ஆன்மாவோ அன்றி அடுத்த உலகத்து அதிசயப் பொருட்களோ இருக்கவில்லை. பிராய்டின், மன அகழாய்வு தெய்வலோகத்துப் புதையல்கள் எதையும் தோண்டி எடுக்கவில்லை. அவரது உளப் பகுப்பியல் கண்டுபிடிப்பில், அடிமனதின் ஆழத்தில் ஒரு எரிமலை இருந்தது. உணர்ச்சிகளின் நெருப்பலைகளாக அது எரிந்து கொண்டிருந்தது. அடக்கப்பட்ட ஆசைகளின் அக்கினி நாக்குகள் நர்த்தனமாட அது குமுறிக் கொண்டிருந்தது. பிராய்டின் ஆழ்மனமானது கொதிக்கும் உணர்ச்சிகளின் கொப்பறை.

நனவு மனமானது மனித பண்பாட்டு உலகத்தால் வனையப்படுகிறது. பண்பாட்டுக் கருத்துலகம் வரிந்து விடும் நியமங்களையும் கட்டுப்பாடுகளையும் உள்வாங்கி உருவாக்கம் பெறுகிறது. தனி மனிதனின் சமூகப் பிரக்ஞையாகச் செயற்படுகிறது. இந்த நனவுமனமானது அடிமனதிலிருந்து ஆசைகளாக, அபிலாசைகளாக, உந்துதல்களாக மேலெழும் இயல்புணர்ச்சிகளை தணிக்கை செய்து ஒடுக்கி விடுகிறது. ஒடுக்கப்பட்ட உணர்வுகளும் ஆசைகளும் நனவிலி மனவுலகில் தஞ்சம் பெறுகின்றன. அங்கு, அவை தணிந்து அணைந்து போவதில்லை. மாறாக, சீற்றம் கொண்ட பாம்புகளாக அவை சீறி எழுகின்றன. எப்படியாவது, எந்த வழியிலாவது, எந்த வடிவத்திலாவது அடிமனப் புற்றிலிருந்து வெளியேற அவை சதா விழைந்து கொண்டிருக்கின்றன.

கனவுகளும் ஆழ் மனதின் ஒரு வெளிப்பாடு. புதிரான படிமங்களில் புனைக் கதைகள் பின்னி, குறியீட்டுச் சித்திரங்களாக மனத்திரையில் கட்டவிழும் கனவுக் காட்சிகளில் அடிமன ஆசைகள் ஒளிந்து கிடக்கின்றன. நனவுலகில், நிஜவுலகில் நிறைவு காண முடியாத ஆசைகள் கனவுலகில் நிறைவு கண்டு விடுகின்றன. கனவுலகத்தின் கதவுகளைத் திறந்து கொண்டே ஆழ்மனவுலகில் தான் நுழைய முடிந்ததாக பிராய்ட் கூறுகிறார்.

உணர்ச்சிகள் ஆசைகளாக, அடிமனத்திலிருந்து வெளியேற விழைவதும், அவை நனவு மனதில் மறுக்கப்படுவதும், மறுக்கப்பட்ட ஆசைகள் முக மூடிகள் அணிந்து, வேடங்கள் பூண்டு வேறு வழிகளில் வெளிப்பாடு காண விழைவதும், அதனால் எழும் நெருக்குவாரங்களும், முரண்பாடுகளும் உளச் சிக்கல்களாகவும், மனக் கோளாறுகளாகவும், ஆளுமைச் சிதைவுகளாகவும் விபரீத தோற்றப்பாடுகளை எடுப்பதுமாக பாலெழுச்சி என்ற ‘காதல் தெய்வத்தின்’ திருவிளையாடல்களை பிராய்டின் மனப்பகுப்பியல் விபரித்துக் கூறுகிறது. இந்த உளவியல் தத்துவம் மனித ஆழ்மனதின் அசைவியக்கத்துடன் நின்று விடாது, மனிதனின் கலை, பண்பாட்டு உலகத்திற்கும், மனித நாகரீகத்தின் தோற்றத்திற்கும் விசித்திரமான விளக்கங்களையும் கொடுக்க முனைகிறது. ஆழ் மனதில் முடங்கிக் கிடக்கும் ஆசைகள் கனவுலகத்தை சிருஷ்டித்து வெளிப்பாடு காண விளைவது போல, நனவு மனமும் விழிப்பு நிலையில், கற்பனா உலகில் பிரவேசிக்கிறது. கற்பனை வடிவில் மனிதன் விழித்துக் கொண்டு காணும் கனவுகள், புராணங்களாக, காவியங்களாக, இலக்கியங்களாக கலைவடிவம் பெறுவதாகவும், மனிதனின் அடக்கப்பட்ட பாலுணர்வு ஆசைகள் இன்பநுகர்ச்சி என்ற அதன் இயல்பான இலக்கிலிருந்து விடுபட்டு, கலா சிருஷ்டிப்பு என்ற உன்னத வெளிப்பாடாக உயர்நிலை மாற்றம் (sublimation) பெறுவதாகவும் பிராய்ட் கூறுகிறார்.

எல்லாமே அது. எல்லாவற்றிலும் அது. எல்லாவற்றையும் அசைப்பது அது. அதுவின்றி எதுவுமில்லை என்ற வகையில் பிராய்டின் உளப்பகுப்பியல் பாலுணர்ச்சிக்கு அலாதியான முக்கியத்துவம் கொடுத்து, அதன் மையத்திலிருந்தே மனித மனம், மனித வாழ்வு, மனிதப் பண்பாடு என சகலவற்றிற்கும் விளக்கமும் அளிக்கிறது. இந்த உளவியல் தத்துவம் மனிதனை ஆசையின் பிராணியாக, இன்பத்தின் பித்தனாகச் சித்தரிக்க முனைகிறது.

மனிதன் இயற்கையின் படைப்பு என்பதால் மனித உயிர்வாழ்வு இயற்கையின் நிர்ப்பந்த சக்திகளுக்கு உட்பட்டிருப்பதால் இயல்புணர்ச்சியாக எழும் பாலெழுச்சியின் அழுத்தத்தையும் வீச்சையும், மனித மனதிலும் மனித உறவுகளிலும் அது செலுத்தும் தாக்கத்தையும் நாம் குறைவாக மதிப்பிட முடியாது. ஆயினும் பாலுணர்ச்சி உந்துதலை மனிதத்தின் சாரமாகக் கற்பித்து, மனித வாழ்விற்கும், மனித பண்பாட்டு வரலாற்றிற்கும் ஒருமுகப் பரிமாணத்தில் விளக்கம் அளித்து விட முடியாது.

பிராய்ட், உணர்ச்சிமயமான மனிதனைக் கண்டார். மனிதன் இயற்கையோடு ஒன்றியிருப்பதைப் பார்த்தார். மனிதனின் பரிணாம வேர் இயற்கையில் புதைந்து கிடப்பதை அவதானித்தார். ஆயினும் அந்தக் கண்டுபிடிப்பை, நம்பமுடியாத கற்பனாவாத எல்லைகள் வரை விரிவுபடுத்தி, மிகைப்படுத்திவிட்டார். பிராய்டின் தேடுதல் மனிதனின் முழுமையான முகத்தைக் காட்டவில்லை. மனிதனை ஒரு சமூகப் பிறவியாக, சமூக உறவுகளால் பிணைக்கப்பட்டு, சமூக வாழ்வியக்கத்தால் உருவாக்கப்படுபவனாக அவர் பார்க்கவில்லை.

பாலுணர்வை மையமாக வைத்து சிக்மண்ட் பிராய்ட் சித்தரித்துக் காட்டும் ஆசை உலகத்தின் (realm of desire) நிர்ப்பந்தங்களைப் பார்க்கிலும் மனிதனின் உயிர்வாழ்வை நிர்ணயிக்கும் இன்னொரு உலகமும் இருக்கிறது. அது தான் தேவை உலகம் (realm of needs).

உண்பதற்கு உணவு, உடுத்துவதற்கு உடை, உறங்குவதற்கு உறைவிடம், காலூன்றி நிற்பதற்கு நிலம் என்ற வகையில் நாளாந்த சீவியத்திற்கு ஆதாரமாக எண்ணற்ற தேவைகளின் அழுத்தத்தால் மனிதப் பிறவிகள் ஒருவர் ஒருவருடன் இடர்பட்டு, முரண்டு, போராடி வாழும் ஒரு கொடுமையான உலகமாக இந்தத் தேவை உலகம் அசைகிறது.

இந்தத் தேவை உலகத்தில் பசியுணர்வு பிரதானமானது. பாலூணர்வின் உந்துதலைவிட பசியுணர்வின் உறுத்துதல் மிகவும் கொடியது. கனவிலோ கற்பனையிலோ மனவுலக மருட்சியிலோ பசியுணர்வின் வேட்கையைத் தணித்து விட முடியாது.

தினமும் அது என்னை வதைக்கிறது. வாட்டி எடுக்கிறது. எனது மடிக்குள்ளிருந்து நெருப்பாகச் சுடுகிறது. அதன் வேட்கையைத் தணிக்காது போனால் எனது வாழ்க்கையே அற்றுப் போகும். உயிரியக்கத்திற்கு அதுதான் எல்லாம். அதற்குப் பின்புதான் மற்றெல்லாம். இந்தப் பூவுலகிலுள்ள கோடானு கோடி வாய்களதும், வயிறுகளினதும் வாழ்நிலைத் தவிப்பாக, அன்றாட அவலமாக, பசியுணர்வு பூதாகாரத் தோற்றப்பாடு கொள்கிறது. தவிர்க்க முடியாத இந்தத் தேவையின் மையத்திலிருந்தே மனித முனைப்புகளின் அசைவியக்கமாக இருப்பின் சக்கரம் சுழல்கிறது.

மனிதனின் ஆணிவேர் இயற்கையில் ஆழப்பதிந்திருக்கிறது. தனது வயிற்றை நிரப்பிக் கொள்வதிலிருந்து தனது சீவியத்திற்கு ஆதாரமான தேவைகள் அனைத்தையும் இயற்கையிலிருந்தே மனிதன் பெற்றுக் கொள்கிறான். தேவை உலகத்து நிர்ப்பந்தங்கள் மனிதனை இயற்கையோடு பிணைத்து வைத்திருக்கிறது; விலங்கிட்டு வைத்திருக்கிறது. அனந்த காலமாக அகற்ற முடியாத இந்தச் சங்கிலிப் பிணைப்பில் கட்டுண்டு கிடக்கும் மனிதன், இயற்கையோடு போராடி, இயற்கையின் நிர்ப்பந்தப் பிடியிலிருந்து விடுதலை பெற எத்தனித்து வருகிறான். ஒருபுறம் தேவையின் கொடூர நிர்ப்பந்தமும், மறுபுறம் விடுதலையின் உந்துதலுமாக மானிடம் ஒரு சிக்கலான முரண்பாட்டில் சிக்குண்டு கிடக்கிறது.

இந்தத் தேவை உலகத்தின் முரண்பாட்டுக் களத்திலிருந்தே மனிதன் பற்றிய விசாரணையைத் தொடங்குகிறார் கார்ள் மாக்ஸ்.

“எல்லாவற்றிற்கும் முதற்படியாக மனிதர்கள் வாழவேண்டும். உண்டு, உடுத்தி, உறங்கி, உறவு கொண்டு வாழவேண்டும். வாழும் சூழ்நிலையை முதலில் உருவாக்கிக் கொண்ட பின்புதான் மனிதர்கள் வரலாற்றைப் படைக்க முடியும். தமது வாழ்நிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மனிதர்கள் என்று பொருளுற்பத்தியை ஆரம்பித்தார்களோ என்று பொருளுலகத்தைப் படைக்கத் தொடங்கினார்களோ அன்றிலிருந்தே மனித வரலாறு ஆரம்பமாகிறது.” என்கிறார் மாக்ஸ்.

தேவை உலகத்து அழுத்தத்தால் மனிதனுக்கும் இயற்கைக்கும் மத்தியில் தொடர்ச்சியாக, முடிவில்லாத நிகழ்வுப் போக்காக நடந்து வரும் போராட்டமே உழைப்பு ஆகிறது. இந்த உழைப்பானது மானிடரின் மாபெரும் ஆக்க சக்தியாக, செயற்பாட்டு சக்தியாகப் பொருளுலகத்தைப் படைக்கிறது.

உழைக்கும் மனிதனே இந்தப் பொருளிய உலகத்தின் சிருஷ்டி கர்த்தா. மானிடரின் பொருளிய வரலாற்றைத் தொடங்கி வைப்பவனும் அவனே.

உழைக்கும் மனிதனை மையப் புள்ளியாக வைத்தே கார்ள் மாக்ஸ் தனது சிந்தனைக் கோட்டையைக் கட்டி எழுப்புகிறார்.

உழைக்கும் மனிதன், அவனிடமிருந்து உழைப்பாக வெளிப்பாடு காணும் உழைப்பு சக்தி, அந்த உழைப்பு சக்தியிலிருந்து உருவாக்கம் பெறும் உற்பத்தி உலகம், அந்த உற்பத்தி உலகத்திலிருந்து உருப்பெறும் உற்பத்தி உறவுகள், அந்த உற்பத்தி உறவுகளிலிருந்து தோற்றம் கொள்ளும் வர்க்கப் பிரிவுகள், அந்த வர்க்கங்கள் மத்தியில் முனைப்புறும் முரண்பாடுகள், அந்த முரண்பாடுகளிலிருந்து வெடிக்கும் புரட்சிகள், அந்தப் புரட்சிகளால் தோன்றும் சமூக மாற்றங்கள், அந்தச் சமூக மாற்றங்களாக அசைந்து செல்லும் வரலாறு – இப்படியாக உழைக்கும் கரங்களில் இருந்து கட்டவிழ்கிறது மனித சரித்திரம்.

மனிதனே பொருளுலகத்தையும் படைக்கிறான்; சமூகத்தையும் படைக்கிறான்; தன்னையும் படைக்கிறான். மாக்சிய தரிசனம் மனிதனை இந்த உலகத்தின் கடவுளாகச் சித்தரிக்கிறது.

இந்த மாமனிதன் தனிமனிதனல்ல, அவன் சமூக மனிதன். சமூக உறவுகளால் உருவாக்கம் பெறும் மனிதன். சமூக உறவுகள் என்ற சிக்கலான சிலந்தி வலைக்குள் சிக்கப்பட்டிருக்கும் மனிதன்.

சமூகம் என்பது தனி மனிதர்களால் அமையப் பெற்ற ஒரு மக்கள் கூட்டம் அல்ல. அன்றி தனிமனிதர்களின் உறவு நிலையையும் அது குறித்து நிற்கவில்லை. சமூகம் என்பது ஒரு கட்டமைப்பாக இயங்குகிறது. பல்வேறு சமூகக் கூறுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக, ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததாக, ஒன்றோடு ஒன்று ஆதிக்கம் செலுத்துவதாக, ஒரு முழுமையான கட்டமைப்பாக சமூகம் செயற்படுகிறது.

இந்தச் சிக்கலான சமூக உறவுகளுக்கு மத்தியில் தனி மனிதன் இருப்புக் கொள்கிறான். தனது இருப்பு நிலையைத் தனிமனிதன் நிர்ணயித்து விடுவதல்ல. சமூக இயக்கமே தனி மனிதனின் தலைவிதியை நிர்ணயித்து விடுகிறது.

தேவை உலகத்து நிர்ப்பந்தங்கள் ஒரு புறமும், உற்பத்தி உறவுகளின் நிர்ணய சக்திகள் மறுபுறமுமாக, இயற்கையினதும் சமூகத்தினதும் அழுத்தங்கள் தனிமனிதனின் வாழ்நிலையை நிச்சயித்து விடுகின்றன.

கார்ள் மாக்ஸின் புகழ் பெற்ற அறிவியல் ஆய்வு நூலான ‘மூலதனம்’ முதலாளிய பொருளுற்பத்தி உலகத்தை அறுவை செய்து பார்க்கிறது. முதலாளித்துவத்தின் முரண்பாட்டுக் கோலங்களையும், அதன் அசைவியக்க விதிகளையும் விளக்க முனைகிறது.

‘மூலதனத்தில்’ திரைநீக்கம் செய்யப்படும் முதலாளிய சமூக அமைப்பில் தனித்துவமான, தனி இயல்புகளையுடைய தனி மனிதர்களைக் கண்டு கொள்ள முடியாது. இங்கு தனி மனிதர்கள், பொருண்மிய கருத்துருவங்களின் மனித வடிவங்களாக (personifications of economic categories) சித்தரிக்கப்படுகிறார்கள். உற்பத்தி உறவுகளின் சுமை தாங்கிகளாக உருவகம் பெறுகிறார்கள். வர்க்க உறவுகளால் வனையப்பட்ட, வர்க்க நலன்களைப் பிரதிபலிக்கும் வர்க்க மனிதர்களாக இனம் காணப்படுகிறார்கள்.

முதலாளித்துவம் என்ற பொருள் உற்பத்தி நாடகத்தில், முதலாளி என்றும் தொழிலாளி என்றும், விற்பவன் என்றும், வாங்குபவன் என்றும் எண்ணில்லாப் பாத்திரங்களைத் தாங்கி மனிதர்கள் மேடையேறுகிறார்கள். அந்தந்தப் பாத்திரங்களை அவனவன் தேர்ந்து கொள்வதில்லை. அந்தப் பாத்திரங்களில் அவனவன் அமர்த்தப்படுகிறான். முதலாளித்துவம் ஒரு ராட்சத இயந்திரமாக, மனிதனுக்குப் புறம்பான ஒரு அசுர சக்தியாக, மனிதனை அடிமை கொள்கிறது. தனி மனிதத்தைச் சிதைத்து விடுகிறது. மனித முகத்தை அழித்து விடுகிறது.

உழைக்கும் மனிதன், முதலாளியச் சந்தையில் ஒரு விலைப் பொருள் ஆகிறான். தனது வயிற்றை நிரப்ப தனது உழைப்பை விற்கிறான். தன்னை விற்கிறான். முதலாளிய ஆதிக்க சக்தி, தொழிலாளியின் ஆக்க சக்தியை விழுங்கிக் கொள்கிறது. அவனது உழைப்பு சக்தியைப் பிழிந்து எடுக்கிறது. தொழிலாளியின் உதிரத்திலிருந்து முதலாளி உபரி லாபத்தை எடுத்துக் கொள்கிறான்.

உழைக்கும் மனிதன் வியர்வை சிந்தி உழைக்கிறான். அவனது உழைப்பு சக்தி பொருள் வடிவம் எடுக்கிறது. மனிதனின் சாரம் பொருள்களில் பொதிந்து பொருள் மயமாகிறது. உழைப்பில் மனிதன் பொருளாக மாறும் விந்தை ஒன்று நிகழ்கிறது. அந்தப் பொருள்களிலிருந்து பண்ட உலகம் தோன்றுகிறது. உழைப்பு சக்தியால் உருவாக்கம் பெறும் இந்தப் பண்ட உலகம் உழைப்பவனுக்கே அந்நியமானதாக ஒரு புதிரான பொருளுலகமாகத் தோற்றப்பாடு கொள்கிறது. இந்த முதலாளியப் பொருளுலகில் உழைக்கும் மனிதன் தனது ஆக்கத்தின் அடையாளத்தை இனம் காண முடியாது. அவனது ஆக்கம், அவனது படைப்பு, அவனுக்கு அந்நியமாகி, அவனிடமிருந்து புறம்பாகி, பண்டமாகி, பணமாகி, லாபமாகி, இன்னொருவனின் செல்வமாகி, கூடுவிட்டுக் கூடு பாய்கிறது. முதலாளியப் பொருளுலகில் உழைக்கும் மனிதன் தன்னை இழந்து விடுகிறான். தனது மனிதத்தை இழந்து விடுகிறான்.

முதலாளியப் பொருள் உற்பத்தி முறைமையில் மனிதச் சிதைவு (dehumanisation) நிகழும் சூத்திரத்தை கார்ள் மாக்சின் ‘மூலதனம்’ பிட்டுக் காட்டுகிறது.

மாக்சிய தரிசனத்தில், சமூகத்திற்கு வெளியாக, சமூக இயக்கத்திற்குப் புறம்பாக மனிதனைக் கண்டு கொள்ள முடியாது. மனித வாழ்வு சமூக வாழ்வாக, சமூக உறவுகளால் பின்னப்பட்ட வாழ்வாக, சமூக முரண்பாடுகளால் சிக்குப்பட்ட வாழ்வாக, சமூக சக்திகளால் நிர்ணயிக்கப்பட்ட வாழ்வாக, சமூக இயக்கத்திற்கு உட்பட்ட வாழ்வாக இயங்குகிறது. தனி மனிதன், தனித்த ஒருவனாக, சமூகத்திற்கு வெளியாக நின்று, தனது வாழ்நிலையை நிர்ணயிக்க முடியாது. சமூகத்தை மாற்றியமைக்காமல் தன்னை மாற்றியமைக்க முடியாது. சமூகத்திற்கு உள்ளே நின்று, சமூகப் பிறவியாக நின்று, சமூக உறவுகள் ஊடாகவே மனிதன் தன்னை உருவாக்கிக் கொள்ள முடியும். காலம் காலமாக மனிதன் படைத்த சமூக உலகங்கள் மனித விடுதலைக்கு வழி கோலவில்லை. மனித முரண்பாடுகளைக் களைந்து விடவில்லை. பொருண்மிய சமத்துவத்தை உருவாக்கவில்லை. வரலாற்றுப் பிரக்ஞையின்றி, வரலாற்று அசைவியக்கம் பற்றிய விழிப்புணர்வு இன்றி, மனிதன் வரலாற்றைப் படைத்திருக்கிறான். வரலாற்றைப் படைக்கும் சக்தியாகிய உழைக்கும் மனிதன், ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, அடிமைப்படும் மனிதன், முதலாளித்துவத்தின் இரும்புப் பாதங்களால் மனித சருகுகளாக மிதிபடும் பாட்டாளி வர்க்க மனிதன் சுயவிழிப்புணர்வோடு, வரலாற்றுப் பிரக்ஞையோடு, வரலாற்றைப் படைக்க வேண்டும். அந்த வரலாற்றுப் படைப்பாக உருவாக்கம் பெறும் புதிய சமூகத்தில், பொருளிய பொதுமை நிலவும். அந்த சமத்துவ சமூகத்தில், யுகம் யுகமாக மனிதர்கள் மத்தியில் நிலவி வந்த முரண்பாடுகள் நீங்கிய சூழலில் ‘சோலிச மனிதன்’ பிறப்பு எடுப்பான். ஒரு புதிய யுகத்தின் புதிய மனிதனாக சோசலிச மனிதன் திகழ்வான். அகத்திலும், புறத்திலும் விடுதலை பெற்றவனாக, தனது ஆக்க சக்திக்கு ஆக்கபூர்வ வெளிப்பாடு காண்பவனாக, முழு மனிதனாக அவன் உருவாக்கம் பெறுவான். இந்த ‘சோசலிச மனிதனின்’ பிறப்புடன், வர்க்க முரண்பாட்டில் சுழலும் வரலாற்றுச் சக்கரம் தனது அசைவியக்கத்தை நிறுத்துக் கொள்ளும்.

முதலாளித்துவத்தின் கொடுமையை வெறுத்து, முழு மனித விடுதலையை விரும்பிய கார்ள் மாக்ஸ், இப்படியாக ஒரு தீர்க்கதரிசனம் சொன்னார்.

சோசலிச மனிதன் பிறப்பு எடுத்தானா? பொதுமையின் சமத்துவம் புது மனிதனை, முழு மனிதனை தோற்றுவித்ததா? என்ற கேள்வி பற்றி பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம். இங்கு இது ஆய்வுப் பொருள் அல்ல.

கார்ள் மாக்ஸ் கனவு கண்ட மனிதன் வேறு, கண்டு கொண்ட மனிதன் வேறு. அவர் கண்டு கொண்ட மனிதனைப் பற்றியே நாம் இங்கு கவனம் செலுத்துகிறோம்.

‘மனிதன் யார்?’ என்ற கேள்விக்கு மாக்சியத்தில் விடை காண முடியாது என்பது சில நவமாக்சிய தத்துவாசிரியர்களின் கருத்து. மாக்சியமானது சமூக உறவுகள் பற்றியும் சமூக அசைவியக்கம் பற்றியும் ஆழமாகப் பார்க்கிறதே தவிர மனிதம் பற்றியோ மனிதன் பற்றியோ தேடுதலை நடத்தவில்லை என்பது இவர்களது வாதம். இந்தக் கருத்தை முன் வைப்பவர்களில் அல்தூசர் முக்கியமானவர்.

கார்ள் மாக்சின் சிந்தனை உலகை இரு கூறுகளாக வகுத்துக் காட்ட முனைகிறார் அல்தூசர். ஒன்று இளம் பிராய தத்துவார்த்த எழுத்துக்கள். மற்றையது, முதிர்ந்த மாக்சின் ‘மூலதனம்’. இளம் பிராய எழுத்துக்கள் தத்துவ கருத்துநிலை சார்ந்தவை என்பதும், ‘மூலதனம்’ அறிவியற் கோட்பாடுகளைக் கொண்ட வரலாற்று விஞ்ஞானமாக அமையப் பெற்றிருக்கிறது என்பதும் அவரது கருத்து. இளம் பிராய தத்துவ எழுத்துக்களில் மனிதத்துவம் பற்றி (humanism) மாக்ஸ் கூறியவை எல்லாம் கருத்து நிலை சார்ந்த சித்தாந்தவாதம் என ஒதுக்கிவிடும் அவர், மூலதனத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்.

மாக்சின் சிந்தனை உலகை, சித்தாந்தம் என்றும் விஞ்ஞானம் என்றும் இரு வகைப்படுத்தி மனிதத்துவத்திற்கு சாவு மணி அடிக்கும் அல்தூசரின் வாதத்தை நிராகரிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். மாக்சின் எழுத்துக்களில் ஒரு தொடர்ச்சியான படிநிலை வளர்ச்சி இருக்கிறது என்பதும், முதிர்ந்த வயதில் நிகழ்ந்த சிந்தனை முறிவு (epistemological break) என்ற அல்தூசரின் கருத்து தவறானது என்பதும் இவர்களது நிலைப்பாடு. மாக்சின் தத்துவார்த்த எழுத்துக்கள் முற்று முழுதாக மனிதத்துவம் பற்றியே குறிப்பிடுகிறது என்பதும், ‘மூலதனத்திலும்’ முதலாளித்துவத்திற்கு எதிரான தார்மீகப் பிரகடனங்கள் நிறையவுண்டு என்பதும் இவர்களது வாதம். சர்ச்சைக்குரிய இந்த வாதப் பிரதிவாதங்களை இங்கு விபரித்துக் கூறுவது அவசியமில்லை.

கார்ள் மாக்ஸ் ஒரு மனிதாபிமானி. மானிடத்தின் விடுதலையை விரும்பியவர். முழு மனிதனைக் கனவு கண்டவர். மனித உலகத்தை மாற்றியமைக்க விரும்பியவர். மனித செயற்பாடு மூலம் அது சாத்தியமாகும் என நம்பியவர். அவரது தார்மீக இலட்சியம் நெருப்பு வரிகளாக அவரது எல்லா எழுத்துக்களிலும் சுடர்விடுகிறது.

மனிதன் யார்? என்ற விசாரணையை அவர் நடத்தவில்லை. அது அவரது ஆய்வுப் பொருளும் ( analytical object) அல்ல. ஆனால் மனிதம் பற்றியும், மனிதத்துவம் பற்றியும் மனித வளர்ச்சி பற்றியும் அவர் அக்கறையோடு எழுதியிருக்கிறார்.

மனிதா சாரம் (human essence) என்ற பதம் அவரது தத்துவார்த்த சிந்தனையின் மையமாக அமைகிறது. மனித ஆக்க சக்தியை, சிருஷ்டி சக்தியை, அந்தச் சொல் குறித்து நிற்கிறது. சாராம்சத்தில், மனிதனை ஒரு சிருஷ்டி கர்த்தாவாக, ஒரு படைப்பாளியாக அவர் பார்த்தார். பொருளுலகத்தைப் படைப்பவனாகவும் வரலாற்றை சிருஷ்டிப்பவனாகவும் மனிதனை அவர் சித்தரித்தார். இந்த மனித சிருஷ்டி சக்தியையே தொழிலாக்க சக்தியாக (labour power), பொருட் படைப்பின் மூல சக்தியாக ‘மூலதனத்தில்’ வர்ணிக்கிறார். இந்தத் தொழிலாக்க சக்தி மனிதனிடமிருந்து அந்நியமாதலையே மனிதச் சிதைவு எனக் குறிப்பிடுகிறார்.

முதலாளியம் மனித தொழிலாக்க சக்தியால் கட்டியெழுப்பப்படுகிறது. மனிதன் கட்டிய அக் கோட்டைக்குள் மனிதனே சிறைப்படுகிறான். படைப்பாளியை படைப்பே விழுங்கிக் கொள்கிறது. முதலாளியத்தின் அநீதியான சமூக உறவுகளால் விலங்கிடப்பட்டிருக்கும் மனிதனையே கார்ள் மாக்ஸ் கண்டார். எனவே ‘மூலதனத்தில்’ சித்தரிக்கப்படும் மனிதன் முழு மனிதன் அல்ல. அவன் தன்னையிழந்த, தனது சுயத்தை இழந்த, தனது சுதந்திரத்தை இழந்த மனிதன். பொருண்மிய குறியீடாக, பொருண்மிய சக்திகளால் ஆட்டிப்படைக்கப்படும் ஒரு பொம்மை மனிதன்.

பொருளிய வாழ்விற்கும் பொருண்மிய உறவுகளுக்குமே கார்ள் மாக்ஸ் முக்கியத்துவம் கொடுத்தார். மனித மனம், வாழ்க்கையை நிர்ணயிப்பதல்ல. பொருளிய வாழ்வே மனித மனதை நிர்ணயித்து விடுகிறது என்று அவர் எழுதினார். சமூக உறவுகள் என்பது, அவரது ஆய்வில் உற்பத்தி உறவுகளால் உருவாகும் வர்க்க உறவுகளையே குறிக்கிறது. இந்த வர்க்க உறவுகளைத் தாங்கி நிற்கும் வர்க்க மனிதனையே அவர் சமூக மனிதனாகக் கண்டார். எனவே, மாக்சின் சமூக மனிதன் பொருளாதாரக் கட்டுமானத்தின் வரம்பிற்குள் முடங்கிக் கிடக்கிறான்.

சமூக உறவுகள் என்பது சிலந்தி வலை போன்று சிக்கலானது. பல்முகப் பரிமாணங்களைக் கொண்டது. சமூக உறவுகள் அனைத்தையும் பொருளாதார உறவு என்ற வட்டத்திற்குள் வரையறுத்து விட முடியாது.

சமூக உறவுகள் என்ற முடிச்சுகள் பல. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. தாய் பிள்ளை உறவு, சகோதர உறவு, தாம்பத்திய உறவு, குடும்ப உறவு, நட்புறவு, காதலுறவு, கல்வியுறவு, கட்சி உறவு, சமய உறவு, சாதி உறவு, கலை உறவு, பண்பாட்டு உறவு என்பவையும், இன்னும் எண்ணில்லாதவையுமாக சமூக உறவுகளால் மனிதர்கள் பிணைந்து கிடக்கிறார்கள். இந்த சமூக உறவுகளும், அவை விளைவிக்கும் தாக்கங்களும் மனித சுயத்தின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் ஏதுவாகின்றன. மனித உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைகின்றன.

வர்க்க உறவுகளை மட்டும் பிரதிபலிக்கும் வெறும் பொருண்மிய மனிதனை முழுமையான சமூக மனிதனாகக் கொள்ள முடியாது.

மனிதன் வெறும் உழைக்கும் இயந்திரம் அல்ல. மனிதனின் சாரத்தை வெறும் உழைப்பு சக்தியாக, படைப்பாற்றல் சக்தியாக மட்டும் சித்தரித்து விட முடியாது. மனிதனிடம் உள்ளமுண்டு; உணர்வுகள் உண்டு; சமூகக் கலாச்சார வாழ்வில் பெறப்பட்ட பண்புகளுண்டு. இவை எல்லாம் ஒன்று திரண்ட மனிதமுண்டு, சுயமுண்டு, ஆளுமையுண்டு, ஆழ்மனமுண்டு.

மாக்சிய தத்துவம் தனி மனிதனை ஒதுக்கிவிட்டதால் முழு மனிதனைத் தரிசித்து நிற்கவில்லை.

சமூக அறிவியலுக்கு மனிதத்துவம் பற்றிய விசாரணைகள் அவசியமில்லை என்பது சில மாக்சியத் தத்துவாசிரியர்களின் கருத்து. மாக்சியம் சமூகவியலாக மட்டுமன்றி மனிதவியலாக முழுமை பெறுவதற்கு மனிதன் பற்றிய ஆழமான பார்வை தேவை என்பது வேறு சிலரது வாதம். மாக்சியத்தில் தனி மனிதனின் மனிதத்துவமும் உதாசீனம் செய்யப்பட்டதால்தான், மாக்சிய சித்தாந்தத்தை தழுவிக் கொண்ட சோசலிச அரசுகள் சர்வாதிகாரத்தை நிலை நிறுவி, தனி மனித சுதந்திரங்களை நசுக்க முயன்றன என்பதும் இவர்களது நிலைப்பாடு.

மாக்சியத்திலுள்ள இந்தக் குறைபாட்டை எப்படி நீக்குவது? மனிதனுக்கு முழுமையான விளக்கம் எவ்விதம் அளிப்பது?

மாக்சிய சமூகவியல் கோட்பாடுகளையும் பிராய்ட்டின் மனப் பகுப்பியல் கோட்பாடுகளையும் ஒன்றிணைத்துப் புதிதாக ஒரு அறிவியல் தத்துவத்தை உருவாக்கினால் மனிதன் பற்றி விஞ்ஞான பூர்வமான ஒரு ஆழமான தரிசனம் கிட்டலாம் என்பதும் சில அறிஞர்களது கருத்து. மாக்சிய சமூகவியலையும் பிராய்ட்டின் உளவியலையும் கோட்பாட்டு ரீதியாகத் திருமணம் செய்து வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இரண்டு, வெவ்வேறான ஆய்வு இலக்குகளைக் கொண்ட அறிவியல் உலகங்களை ஒன்றிணைப்பது சுலபமான காரியமல்ல. நவ பிராய்டிய சிந்தனையாளர்களான லக்கான் (Lacan) போன்றவர்கள் உளப் பகுப்பியலை மொழி அமைப்பியலாக (linguistic structuralism) உருமாற்றம் செய்ய முனைவதால் இந்த இணைப்பு முயற்சிகள் மேலும் சிக்கலடைந்துள்ளன. ஆயினும் மனிதனைத் தேடும் மனிதனின் முயற்சி தொடர்கின்றது.

இந்த உலகம் மாறி வருகிறது. மாறி வரும் இந்த உலகத்துடன் மனிதனும் மாறி வருகிறான். காலம் என்ற காற்று அடித்துச் செல்லும் மாற்றம் என்ற படகில், ஒரு முடிவில்லாப் பயணத்தைத் தொடரும் மனிதன், தன்னை நோக்கிப் பார்க்கிறான். அந்த சுய தரிசனத்தில், அவனது முகம் அவனுக்குப் புலப்படுவதில்லை. அது சதா மாறிக் கொண்டிருக்கிறது. இறந்த காலத்தின் சுவடுகளும் எதிர்காலத்தின் நம்பிக்கைகளுமே அவனுக்குத் தென்படுகிறது.

ஆனால் மனிதன் தன்னைத் தேடுகிறான். முடிவில்லாத் தொடர் கதையாக அந்தத் தேடுதல் தொடர்கிறது.

மனிதனைத் தேடும் மனிதன்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments