×

நடுகற்கள் என்றால் என்ன..?

மனிதன் காடுகளில் வாழ்ந்த ஆதி காலம் தொட்டே இயற்கையை வணங்கியும் ,மரணத்தை கண்டு பயந்தும் வாழ்ந்துள்ளான். அப்படி இறந்து போகும் மனிதன் எங்கு செல்வான் என்ற கேள்வி அவன் மனதை குடைந்து கொண்டே இருந்தது.இறந்தவர்களுக்காக ஈமச்சின்னங்களை ஏற்படுத்தவும் பழகிக்கொண்டான், அவற்றில் ஒன்று கல்திட்டைகள் .இவை ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இந்த கல்திட்டைக்குள் வேட்டை காட்சிகளும் , மனிதன் மற்றும் விலங்குகளின் உருவங்களும் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்த பாறை ஓவியங்களே நடுகற்களின் முன்னோடியாக இருக்கலாம்..சங்க இலக்கியங்களில் நடுகற்களை பற்றி குறிப்பு இருந்தாலும் அவை இப்போது நம்மிடையே இல்லை. கால வெள்ளத்தில் அழிந்து பட்டன. விலங்குகளுடன் போரிட்டு இறந்த வீரனுக்காக வரையப்பட்ட ஓவியங்கள் தொன்மை வாய்ந்தவை.பெருங்கற்காலம் தொடங்கி இறந்தவர்களுக்கு உலகமெங்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டாலும் போரில் இறந்தவர்களுக்கு வீரக்கல் எனப்படும் நடுகல் எடுப்பது சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது.விலங்குகளுக்கும் , கோழிக்கும் கூட நடுகல் எடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஆநிரைப்போரில் இறந்தவர்களுக்கு பல்லவர்,பாணர், கங்கர்களின் காலத்தில் நிறைய நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.

நடுகற்களின் வகைகள்:
நடுகற்களின் அமைப்பு, உருவங்கள், கருவிகள் கொண்டு அவற்றை சிலவாராக நாம் வகைப்படுத்தலாம்.

1. நினைவு கற்கள்
2. வீரக்கல்
3. நவ கண்டம்
4. அரிகண்டம்
5. சதிகல்
6. புலிக்குத்திப்பட்டான் கல்
7.யானைகுத்திப்பட்டான் கல்
8.காட்டுப்பன்றி குத்திபட்டான் கல்
9. கோழிக்கற்கள்
10. ஏறுதழுவல் வீரக்கல்
என்றவாறாக வகைப்படுத்தலாம்.

நினைவுக்கற்கள்
ஆதிமனிதன் தன் கூட்டத்தில் இறந்தவர்களை புதைத்த இடத்தை அடையாளப்படுத்த அந்த இடத்தில் கற்களை நட்டுவைத்தான். அதுவே உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் குத்துக்கற்கள்,கற்பதுகை,கல்வட்டம்,கற்குவை,கற்திட்டை , என பல வகைகளில் மாற்றமடைந்து வந்தது. போரில், மற்றும் விலங்களை வேட்டையாடி இறந்தவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. தற்போதும் கூட கிராமங்களில் உள்ள அய்யனார், செல்லியம்மன், கருப்பையா கோயில்களில் இறந்தவர்களிக்கான நினைவு கற்களை காணலாம். பிரசவத்தில் இறந்த பெண்கள் கைகுழந்தையுடன் காட்டப்பட்டுள்ளனர். இன்று கூட இந்த பழக்கம் வழக்கத்தில் உள்ளது.

வீரக்கல்
போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களை நாம் வீரக்கல் என கூறலாம்.
பல்லவர் காலம் துவங்கி நாயக்கர் காலம் வரை இது போன்ற வீரக்கற்கள் தமிழகம் முழுக்க காணப்படுகிறது.

நவகண்டம்
இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும் போது தன்னுடைய நாடு வெற்றியடைய தன் உயிரை கொற்றவைக்கு பலி கொடுப்பது நவகண்டம் எனப்படும். தன்னுடைய உடலில் எட்டு பாகங்களை அரிந்து கொற்றவைக்கு படையல் இட்டு கடைசியாக தன் தலையை தானே அரிந்து கொற்றவைக்கு பலி கொடுத்து கொள்வது நவகண்டம் எனப்படும். இத்தகைய சிற்பங்களை அடையாளப்படுத்த சிற்பத்தில் உள்ள வீரன் கையில் உள்ள கத்தியானது வீரனின் கழுத்துக்கு நடுவே காட்டப்பட்டிருக்கும். நோய்வாய்பட்ட தன் மன்னன் நலமடையவும்,நீண்ட நாட்களாய் நின்றிருந்த திருவிழா நடை பெறவும் இது போன்று நவ கண்டம் கொடுத்து கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டம் ஆறகழூரில் இது போன்று 5 நவகண்ட சிற்பங்கள் உள்ளன.

அரிகண்டம்
நவகண்டத்துக்கும் அரிகண்டத்துக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. அரி கண்டத்தில் ஒரே வெட்டில் தலை துண்டாகும்படி வெட்டிக்கொள்வார்கள்.தலை முடியை வளைவான ஓர் மூங்கிலில் இணைத்து தன் தலையை தானே வெட்டிக்கொள்வார்கள். தமிழகம் முழுக்க இது போன்ற அரிகண்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.தன் தலைமுடியை தானே பிடித்திருப்பது போல் இச்சிற்பங்கள் காட்டப்பட்டிருக்கும் கொற்றவைக்கு தன்னை தானே பலி கொடுத்து கொள்ளும் நிகழ்வு இது. ஆரம்ப காலகட்டத்தில் தானே விரும்பி இச்செயலை செய்தாலும் பிற்காலத்தில் வற்புறுத்தி பலி கொடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதிரப்பட்டி நிலம் தானமாக கொடுக்கப்பட்டதை கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆறகழூரில் இதே போன்ற உதிரப்பட்டி கல்வெட்டு ஒன்று உண்டு
சதிகல் போரிலோ அல்லது வேறு காரணங்களாலோ கணவன் இறந்தவுடன் மனவி உடன் கட்டை ஏறுதல் அல்லது சில வாரங்கள் கழித்து சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு தீயில் புகும் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நடுகற்கள் சதிகற்கள் எனப்பட்டன. இவர்கள் தீப்பாஞ்சாயி என்ற பெயரில் அவரின் வம்சத்தால் வழிபட பட்டு வருகின்றன. தமிழகத்தில் தீப்பாஞ்சாயி கோயிகள் பரவலாக உள்ளன.ஆறகழூரில் உள்ள அய்யனார் கோயிலில் தீப்பாஞ்சாயிக்கு சிறு கோயில் உள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் விரும்பி மேற்கொள்ளப்பட்ட உடன் கட்டை ஏறுதல் பிற்காலத்தில் வற்புறுத்தி செய்துவிக்கப்பட்டது.சுதந்திர இந்தியாவில் ராஜாராம் மோகன்ராய் அவர்களின் முயற்சியின் பேரில் அரசியல் சட்டத்தின் மூலம் உடன்கட்டை ஏறுதல் தடை செய்யப்பட்டது.

புலிக்குத்திப்பட்டான் கல்
மனிதன் காடுகளை ஒட்டி கிராமங்களில் வாழ்ந்த போது அவனையும் அவன் வளர்க்கும் கால்நடைகளையும் புலிகள் தாக்கி கொன்று வந்தது. அத்தகைய கிராமங்களில் வசிக்கும் இளைஞன் ஒருவன் புலி வேட்டைக்கு சென்று அந்த புலியை கொன்று தானும் வீர மரணம் அடைந்திருப்பான். அந்த இளைஞனின் வீரத்தை போற்றி வைக்கப்பட்ட நடுகற்களே புலி குத்தி நடுகல். சேலம் அருங்காட்சியகத்தில் சேந்த மங்கலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட இரு புலிக்குத்தி நடுகற்கள் உள்ளன. தமிழகம் முழுக்க இது போன்ற புலிக்குத்தி நடுகற்கள் உள்ளன. சேலம் குகையில் புலிக்குத்தி தெரு என ஒரு தெருவின் பெயரே உள்ளது.

யானை குத்திப்பட்டான் கல்
வரலாற்று காலம் துவங்கியே போரில் யானைகளை பயன்படுத்தும் வழக்கம் தமிழ் மன்னர்களிடையே இருந்து வந்தது. காட்டு யானைகளை பிடித்து போர் பயிற்சி கொடுத்து போரில் பயன்படுத்தினர். காடுகளின் அருகே உள்ள கிராமங்களில் காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்தும் மனிதர் அவர் வளர்க்கும் விலங்குகளையும் கொன்று வந்தது.இப்படி போரில் அல்லது யானை வேட்டையின் போது இறந்த வீரர்களுக்கு வைக்கப்பட்ட நடுகற்களே யானைகுத்திபட்டான் கல்

காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல்
விளை நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகளை வேட்டையாடி தானும் இறந்த வீரனுக்காக வைக்கப்படும் நடுகல் காட்டுப்பன்றி குத்தி பட்டான் கல். நாம் பார்க்கப்போகும் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வராயன் மரபுநடையில் இத்தகைய நடு கல் ஒன்று உண்டு அது பற்றி விரிவான தகவல்கள் அடுத்து வரும் அத்தியாங்களில்.

கோழிக்கற்கள்
மனிதனுக்கு மட்டும் அல்லாமல் மனிதன் தான் வளர்க்கும் நாய், கோழி போன்றவற்றுக்கும் நடுகல் எடுத்துள்ளான்.
அரசலாபுரம் என்ற ஊரில் கோழிக்கான நடுகல் கல்வெட்டை நம் சேலம் வரலாற்று ஆய்வுமைத்தின் குருவான திரு விழுப்புரம் வீரராகவன் அய்யா கண்டறிந்துள்ளார்
இந்தளூர் என்ற ஊரில் கோழிக்கான நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. அச்சிறுபாக்கம் தாமரைக்கண்ணன் அய்யா இதை கண்டறிந்துள்ளார். கோழிச்சண்டையில் இறந்த கோழிக்காக இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம்

ஏறுதழுவதல் வீரக்கல்
ஏறுதழுவுதல் என்பது தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று .கருமந்துறையில் கிடைத்த இந்த ஏறுதழுவல் நடுகல் தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments