×

தமிழீழ தேசிய தொலைக்காட்சி

2005 மார்ச் 26 ம் திகதி துவங்கப்பட்ட இத் தொலைக்காட்சிச் சேவையின் தலைமை நிலையம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இச்சேவையே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும்.

தினமும் இரண்டு மணிநேரம் ஓளிபரப்பான இந்த தொலைக்காட்சி சேவையை. இலங்கை, இந்தியா, மாலைதீவு, பாக்கிஸ்தான், ஐரோப்பா போன்ற நாடுகளில் செய்மதித் தொடர்பு மூலம் இதனைப் பார்க்க முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலைகளில் மட்டுமல்ல தமிழுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஊடகத்துறைக்கும் தமிழீழ தேசம் எந்த ஒரு தேசத்திற்கும் பின் நிற்காமல் முன் நின்ற பொற்காலம் தமிழர் நாம் எம்மை ஆண்ட விடுதலை புலிகள் காலம்.

போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது மட்டும் போதாது ,தமது நோக்கங்கள்,கொள்கைகள்,அக்கால சமாதான காலசெயற்பாடுகள்,தமது நிர்வாக கட்டமைப்புகள்,மற்றும் மக்களின் வாழ்வியல் ,இப்படி பலவற்றை உலகெங்கும் கொண்டு செல்வதும் உலகெங்கினும் அறியச்செய்வதும் அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்பதனையும் புரிந்து கொண்டு உலகில் ஊடகங்களின் வலிமை உணர்ந்து எமக்கான ஊடகம் மட்டுமே எம் தரப்பு உண்மைகளை சொல்லும் என உருவாக்கப்பட்டது.

ஊடகங்கள் என்னதான் நடுநிலமை வேடம் போட்டாலும் தாம் சார்ந்த நாடுகளின் நலன்களையே அவை முன்னிலைப்படுத்தும்.அவற்றுக்கு எதிரானசெய்திகளை அல்லது கருத்துக்களை எத்துணை உண்மையாக இருந்தாலும் அவை வெளிப்படுத்த மறுப்பதுடன் சில வேளைகளில் தமக்கு சார்பாக செய்திகளை திரிப்பதும் உண்டு. இதில் உலகின் புகழ்பூத்த சில ஊடகங்களும் விதிவிலக்கில்லை.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைப்பெற்ற பல சம்பவங்கள் இலங்கை ஊடகங்களால் மறைக்கப்பட்டன அத்துடன் சிலவற்றை திரித்தும் வெளியிட்டனர்.இதில் அரச ,தனியார் ஊடகங்களென்ற பேதங்கள் இருக்கவில்லை.அப்படியும் சில செய்திகள் வெளிவந்தநிலையில் போட்டதுதான் பத்திரிகைதணிக்கை என்ற பெரியதொரு பூட்டு.

ஆரம்ப நாட்களில் புலிகளின் கையில் இருந்தது பத்திரிகை ஒன்றுதான்.அதுகூட யாழப்பாணம் மற்றும் வன்னியின் சில பகுதிகளுடன் முடங்கவேண்டிய நிலை. இப்படியான நிலையில் பரந்து பட்ட அளவில் செய்திகளை கொண்டு போகவேண்டிய தேவை ஏற்பட்ட போது வந்துதான்”புலிகளின் குரல்” வானொலி.ஆரம்பத்தில் யாழப்பாணத்தில் மட்டும் கேட்க முடிந்த புலிகளின் குரல் வானொலி பின்பு வன்னியில் இருந்து ஒலிபரப்பாகிறது.

அத்துடன் 2000ம் ஆண்டிலிருந்து “தேதுன்ன” என்ற பெயரில் புலிகளின் குரல் வானொலி தனது சிங்கள மொழி ஒலிபரப்பினையும் ஆரம்பித்து சிங்கள மக்களுக்கு தமது நோக்கங்கள்,கொள்கைகள்,செய்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ள வசதிசெய்ததுடன் இலங்கையின் அரச,சிங்களஆங்கில ஊடகங்களின் முகத்திரையினை கிழிக்க ஆரம்பித்தது.பல சிங்கள மக்கள் மட்டும் அல்ல இராணுவத்தினர் கூட இதன் மூலம் சரியான களநிலவரங்களை அறிந்து கொண்டனர்.

1900 ஆம் ஆண்டுக்கு முன்னர் “நிதர்சனம்”என்ற பெயரில் சிலமணிநேர தொலைக்காட்சி ஒலிபரப்பினை புலிகள்நடத்தியதும் பின்னர் இலங்கைக்கு வந்த இந்திய ஆக்கிரமிப்பு படையினரால் அவை அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பல தடைகளை வென்று போராட்டத்தோடு ஊடக போராட்டத்தையும் வெற்றிகரமாக முன்னகர்த்திய பெருமை தமிழீழ விடுதலை புலிகளுக்கே உரித்தானது.

இன்று ஈழ மண்ணில் எங்கள் ஆயுத போராட்டமும் ஊடக சேவைகளும் முடக்கப்பட்டு இருக்கலாம். இணையதளங்கள் வாயிலாக ஒவ்வொரு தமிழனும் ஊடகவியலாளனாக மாறி இருக்கும் எழுச்சியும் உலகெங்கும் தமிழ் ஊடகங்கள் பல்கி வருகின்ற பேராற்றலும் எங்கள் தாய் மண்ணின் ஊடக எழுச்சி விதைத்த விதைப்புகளில் இருந்து முளைத்தவையே என்றால் மிகை இல்லை.

களத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் போல் இன்று எழுத்தோடு ஆயுதம் ஏந்தும் போராளிகளால் எங்கள் போராட்டம் முன்னகர்ந்தே செல்கிறது!

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments