விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் முயற்சியில், ‘மானுடத்தின் தமிழ்க் கூடல்’ என்ற மகுடத்தின் கீழ், ஒரு மாநாடு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது.
அங்கு இடம்பெற்ற ஊடகவியல் அமர்வில், காட்சி ஊடகங்கள் குறித்துக் கட்டுரை வாசித்திருக்கிறேன். அதில், தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்த சிங்களக் கலைஞர்களும், சிங்கள ஊடகர்களும் கலந்துகொண்டனர். பின்னர், தென்னிலங்கைச் சிங்கள ஊடகர்களின் முயற்சியில், ‘சிங்கள- தமிழ்க் கலைக்கூடல்’ என்ற மகுடத்தின் கீழ் கொழும்பில் நடாத்தப்பட்ட மாநாட்டிலும் சினி மா அமர்வில் கட்டுரை வாசித்தேன்.
கிளிநொச்சியில் ‘ஊடக அறிவியற் கல்லூரி’ இயங்கியபோது, அக் கல்லூரி சார்ந்த சில முன்னெடுப்புகளில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.
சினிமா சார்ந்தும், ஒளிப்படக்கலை மற்றும் ஒளிப்பட ஊடகவியல் சார்ந்தும் வன்னியிலே பயிற்சிப்பட்டறைகளை நடாத்தியிருக்கிறேன். ஊடகவியலையும் ஏனைய கலைசாரா விடயங்களையும் நடைமுறை அனுபவங்களின் வழியாகவோ, சுயாதீனமாகவோ தான் அதிகமதிகம் கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது.
இறுதி யுத்தகாலத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கிலான ஒளிப்படங்களை எடுத்திருக்கிறேன். அந்தக் கொடிய காலத்தின் பல்வேறு மோசமான அனுபவங்களும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த அப்பாவி மக்களின் அவலங்களைப் பதிவுசெய்து வெளிக்கொண்டு வரவேண்டியிருந்த தேவைகளும், சுயாதீன ஊடகராக என்னை ஓர்மத்துடன் இயங்கச் செய்தன என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
அமரதாஸ்