×

எங்கே வரலாறு மவுனம் சாதிக்கத் தொடங்குகிறதோ  அங்கே இடப்பெயர்களும்,  ஊர்ப்பெயர்களும் தம் வாய் திறந்து

எங்கே வரலாறு மவுனம் சாதிக்கத் தொடங்குகிறதோ  அங்கே இடப்பெயர்களும்,  ஊர்ப்பெயர்களும் தம் வாய் திறந்து பேசத் தொடங்கும்.’

எல்.வி. இராமசாமி, இந்திய மொழியியலாளர் (L.V. Ramaswami, Indian linguist)

மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப்பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும் போது அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது பழமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு. ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. வரலாறுகள் மௌனமாகும்போது இடப்பெயர்கள் வாய் திறந்து பேசக்கூடும்.

அந்த வகையில் முந்து-தமிழர்களின் நாகரிகம் எப்படி இருந்தது என்பதற்கான சான்றுகள் பாகிசுதான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் இரவி ஆற்றங்கரையிலுள்ள அரப்பாவிலும், அங்கிருந்து 400 கி.மீ. தொலைவில் சிந்து ஆற்றங்கரையிலுள்ள மொகஞ்சதாரோ என்ற இடத்திலும், முப்பதாயிரம் மக்கள் வாழ்ந்ததற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கொண்ட ஊர்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்த நிலையில், கடந்த நூற்றாண்டில் நமக்கு கிடைத்துள்ளன. அதற்கு வலுசேர்க்கும் விதமாக ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகவும், வளர்ச்சி ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், அம்மாநிலத்தின் சிறப்புத் தலைமை ஆலோசகர் பொறுப்பிலுள்ளவருமான ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்களின் சிந்துவெளியில் அமைந்துள்ள ஊர்கள், மலைகளின் பெயர்கள், சங்க தமிழ் இலக்கியங்களிலுள்ள பெயர்களை இன்றளவும் தாங்கி நிற்கிறது என்ற அவரின் சிந்துவெளி மற்றும் அரப்பாவில் “கொற்கை-வஞ்சி-தொண்டி” ஆய்வு மேலும் வலுசேர்க்கிறது.

புலப் பெயர்வுகளும் – ஊர்ப் பெயர்களும்

நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள், புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில் ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.

சிந்துவெளி நாகரிகம் குறித்த தமிழர் நாகரீக கருதுகோளுக்கு வலு சேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ் [Allchins], சங்காலியா [Sangalia], அஸ்கோ பர்ப்போலா [Asko Parpola], ஐராவதம் மகாதேவன் [Iravatham Mahadevan] மற்றும் எப்.சி. சவுத் வொர்த் [F. C. Southworth] போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். அரப்பாவின் மொழியைக் கண்டறிய அரப்பா இடப்பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பின்லாந்து எல்சின்கி பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கின்ற, நிகழ்கின்ற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.

சிந்துவெளி மக்களுக்கும், சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும், வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.

சிந்துவெளியில் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் சங்க கால பெயர்கள்

பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை, வஞ்சி, தொண்டி, மதுரை, உறையூர், கூடல், கோழி, பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை, தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல், வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, அரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள்.

சிந்துவெளி கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு, சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar), தோட்டி(Toti), தோன்றி (Tonri), ஈழம் (Illam), கச்சி (Kachi), காக்கை (Kakai), கானம் (Kanam), களார் (Kalar), கொங் (Kong), நாலை (Nalai), நேரி (Neri) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர், தோட்டி, ஈழம், கச்சி, காக்கை, கானம், கழாஅர், கொங்கு, நாலை,நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

ஆறுகள், மலைகளின் பெயர்கள்

ஆறுகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கானிஸ்தானில் உள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி, ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி, கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பஃறுளியாற்றின் பெயரையும், வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கோட்வார் (கர்வால்) மாவட்டத்தில் ‘பக்ரோலி’ (Bakroli, Kotdwar [Garhwal]). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் ‘குமரி’ (Kumari, Rudraprayag) என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும், குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினைவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli, Bareilly District), குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கானிஸ்தானில் உள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பழனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh, Iran), பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய, அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல. கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல, சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன.

சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும், வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்” என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை. சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் [Yak] என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர் [Yak Tea]’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள்.

எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம். (வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். ‘மா’ என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி. 535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மஸ் இண்டிகோப்லூஸ்டஸ் [Cosmas Indicopleustes] என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.

தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல் மழை பாலைவனத்தில் தான் சாத்தியம். “பொன்படு கொங்கானம்” கொங்கணம் அதாவது கோவா, மராட்டியப் பகுதி. இப்போதைய கொங்கண் (Konkan) பகுதியில் பிரவரா (Pravara) ஆற்றின் இடது கரையில் உள்ள டைமாபாத் (Daimabad) என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒடிசா மாநிலத்தில் கோராபுட் மற்றும் ராயகட (Koraput and Rayagada) மாவட்டங்களில் ‘தமிழி’ என்ற பெயரில் ஊர்கள் உள்ளன.

தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப் பிரதேசம் மற்றும் வட மாநிலங்களில் காணப்படுகிறது.

மேலும் கிழவன் (Kilavan), களமர் (Kalamar), பழனி (Palani), பாண்டியன் (Pandian), குரில் (Kuril), மதுர (Madura), ஊர் (Ur), கண்ணூர் (Kannur), பர்கூர் (Bargur), குவி (Kuwi, Kuvi), போடி (Bodi), தேனி (Teni), குமுளி (Kumulli), கடலன் (Catalan), குரல் (Kural), சோழ (Chola), சேரன் (Cheran), சேர (Chera), முசுறி (Musuri), முசிறி (Musiri), தொண்டி (Tondi), நாடு (Nadu), கரிகால (Karikala), கொற்கை (Korkai), கொற்காய் (Gorkhai), காஞ்சி (Kanchi), கோவில் (Kovil), குமரி (Kumari) உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பெயர்கள் ஆசியா, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகின்றன.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments