தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். “தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதிலிருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்” என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றிலிருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.