தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக தலைசிறந்த தானைத் தளபதியாக மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக பேராற்றல் மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.
தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும் தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக கௌரவமாக பாதுகாப்பாக வாழ வேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.
வே.பிரபாகரன்
– தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள்.
தமிழர்கள் ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது.
என் தலைவனை இவனிடம் கண்டேன்…
தமிழீழ தேசத்தினதும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் அரசியல் விவகாரங்களையும், இராஐரீக விவகாரங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தி வந்த பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் இழப்பு புலம்பெயர் தமிழ் சமூகத்தினிடையே ஆழ்ந்த துயரத்தினை ஏற்படுத்தியிருந்தது.
மிக நீண்ட காலம் தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் தமிழீழ தேசிய விடுதலைப் போருக்கான அரசியல் –இராணுவ முனைகளிற் செயற்பட்டு, செழுமையுற்ற ஞானமும் – முதிர்ச்சியும் கொண்ட முதல் நிலைப் பேச்சுவார்த்தையாளராகச் செயற்பட்டு வந்த திரு.தமிழ்ச்செல்வன் அவர்களை இழந்தமை தமிழ் தேசியத்துக்கு ஏற்பட்ட மற்றுமொரு துன்பகரமான இழப்பாகும்.
நோர்வே ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதான முயற்சிகளின் ஒரு பகுதியாக பல்வேறு சர்வதேச நாடுகளுக்குப் பயணம் சென்ற தமிழ்ச்செல்வன் அவர்கள் தமது அரசியல்-இராஐரீகப் பணிகளுக்கு இடையே தமது தனிப்பட்ட பண்புகளால் புலத்தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள் பலரை ஈர்த்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டி வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி சபை தொடர்பான வரைவினை உருவாக்குவாற்காக புலத்துத் தமிழ் அறிஞர்களையுயம் ஈடுபடுத்தி ஒன்றுபட்ட தமிழ் தேசியத்தின் வீச்சை பலப்படுத்துவதில் தமிழ்செல்வன் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார்.
நமது பணிமனைக்குப் பலதடவை வருகை தந்தும், நம்மோடு தொடர்பு கொண்டும் அனைத்துத் தமிழ் கல்வியாளர்கள், சிந்தனையாளர்களை நாம் இணைத்து, தமிழ் தேசியத்தை ஒன்றுதிரண்ட சக்தியாக்கும் முயற்சியில், ஒன்றுபட்டுழைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தார்.
தமிழீழம் விடிவுபெறும் என்ற நம்பிக்கையினை அடித்தளமாகக் கொண்ட இராஐரீக அணுகு முறைகளைகளை பாதுகாத்தவாறு, சர்வதேச செல்நெறியினூடு உருவாகிவரும் தமிழீழத்தின் நலன்களைப் பொருத்திப் பார்த்து – சாத்தியங்களை செயற்படுத்தும் இராஐரீக பார்வையை கொண்டவராக தமிழ்செல்வன் அவர்கள் செயற்பட்டார் என்பதே அவருடனான எமது பணிசார் தொடர்பாடல்களில் நாம் பெற்ற அனுபவமாகும்.
மேலும், சிங்கள தேசியவாத அரசின் இராணுவ நிகழ்ச்சிநிரலை அப்பட்டமாக நிரூபிக்கும் விதத்தில் இந்தப் படுகொலையை சிறீலங்கா செய்துள்ளது. சமாதானத்தினை ஆதரிப்பதாகக் கூறிக்கொள்ளும் சில தரப்புக்களின் இராணுவ ஆதரவுடன் சிறீலங்கா நடாத்தும் இத்தகைய படுகொலை மற்றும் இராணுவ நடவடிக்கைகள் இலங்கைத் தீவினதும் – தென்னாசியாவினதும் உண்மையான அமைதிக்கும், உறுதித்தன்மைக்கும் நீண்டகால பின்னிடைவுகளை ஏற்படுத்த கூடிய திசையில் பயணிக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கப்படும் இராணுவ வன்முறைகள் மூலம் சமாதானமும், இணக்கமும் ஏற்படா என்பதை சமாதானத்தினை ஆதரிப்பதாகக் கூறியவாறு இராணுவ வழியில் உதவும் நாடுகள் உணர்வதே உண்மையான சமாதானத்தினை இலங்கைத்தீவில் ஏற்படுத்த வழிசமைக்கும்.
பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் விட்டுச்சென்ற பணிகளை, அவர் விரும்பியது போன்றே, நிறைவேற்ற, புலத்தமிழ்ச் சமூகம் உழைக்கும். சுப.தமிழ்செல்வனின் இழப்பால் துன்புறும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொது மக்களின் உணர்வுகளுடன் நாமும் இணைந்து கொள்கின்றோம்.
இவன் இழப்பிற்கு ஈடில்லை. நாம் அழுவதை அவன் தடுக்கமாட்டான் ஆனால் தளம்பினால் அவன் சகிக்கமாட்டான். எந்த உன்னதமான இலட்சியத்திற்காக தன் உயிரையும் காதலையும் ஈய்வதற்கு அவன் என்றுமே முன்னின்றானோ அந்த இலட்சியத்திற்காக நாம் பன்மடங்கான உறுதியோடு செயல்படுவதே நாம் தமிழ்ச்செல்வனுக்கு செலுத்தக்கூடிய வீர வணக்கமாகும்.
1984 ஆம் ஆண்டு முதல்…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.
1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.
தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார். 1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.
1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.
2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.
அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்…
1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும். 1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய – 02″ எதிர்ச்சமரிலும் முதன்மையானதாக இருந்தது.
மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்
காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்
ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.
1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.
ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண்பட்டார்.
பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண்பட்டார்.
“ஒயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.
தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.
தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.
அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.
மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.
மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்