×

“தவளைப் பாய்ச்சல்”

பூநகரி கூட்டுப்படைத்தளம்
அமைப்பு – பலம் – வரலாற்றுப் பின்னணி

கூட்டுப்படைத்தளம் (Millitary Complex) என்ற சொற்பதத்தின் இராணுவ பரிமாணம் மிக உயர்ந்தது.
தரைப்படை, கடற்படை, வான்படை என்ற முப்படைகளில் இரண்டை அல்லது முன்றையும் சேர்த்து ஒன்றாக நிறுவப்படும் ஒரு பலமான இராணுவ நிலையையே, கூட்டுப்படைத்தளம் என அழைக்கப்பர்.

சாதாரணமாக ஒரு முகாம் (Camp) அல்லது இதைவிட இராணுவ பரிமாணத்தில் உயர்ந்த ஒரு தளம் (Base) என்பவற்றைவிடக் கூட்டுப்படைத்தளம் (Military Complex), ஆட்தொகையிலும் அது அமைந்திருக்கும் பரப்பளவிலும் பிரமாண்டமானதாக இருக்கும்.

பூநகரி கூட்டுத்தளமானது தரைப்படையினரையும், கடற்படையினரையும் சேர்த்து 2560 பேரைக்கொண்டு விளங்கியதுடன், 33 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவிலும் அமைக்கப்பட்டிருந்தது. நாகதேவன்துறையிலிருந்து கௌதாரிமுனைவரை 16 கிலோ மீற்றர் தூரத்தில் இக்கூட்டுத்தளம் நீண்டு கிடந்தது.

350இற்கும் மேற்பட்ட கடற்படையினர் நாகதேவன்துறை – ஞானிமடம் பகுதியில் தளமமைத்திருந்தனர். நவீன ரக ‘றாடர்’கள் மற்றும் கண்காணிப்புக் கருவிகளுடன் நீருந்து விசைப்படகுகள், சக்தி வாய்ந்த வெளிச்சம் பாய்ச்சிகளையும் தம்வசம் வைத்திருந்த கடற்படையினர், இவற்றின் துணையுடன் பூநகரி கூட்டுத்தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதுடன், கிளாலிக் கடல்நீரேரியையும் கட்டுப்படுத்த விழைந்தனர்.

இதேபோல கவசவாகனப் படைப்பிரிவு, பீரங்கிப் படைப்பிரிவு, காலாட்படைப்பிரிவு, விசேட பயிற்சி பெற்ற சிறப்புப் படைப்பிரிவு என்று ஏறக்குறைய 2200 இராணுவத்தினர், 5 முகாம்களையும் பல்வேறு மினிமுகாம்களையும் காவல் அரண்களையும் அமைத்து, இப்படைத்தளத்தைப் பாதுகாத்தனர்.

இப்கூட்டுப்படைத்தளத்தின் பிரதான முகாம்களாக,
1. வில்லடி கட்டளை முகாம்.
2. நாகதேவன்துறை படகுத்தளம்.
3. ஞானிமடம் கடற்படைத்தளம்.
4. கூமர் எனும் பகுதியில், இறங்குதுறை வசதியுடன் இருந்த பகுதியைச் சுற்றி ஒரு முகாம்.
5. பள்ளிக்குடாவுக்கும் கூமருக்கும் இடையிலிருந்த களஞ்சிய முகாம்.
6. ஆலடி முகாம்.
7. பள்ளக்குடா முகாம். (இலக்கங்கள் வரைபடத்தின்படி)

ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சுpல மினி முகாம்களையும் பல அவதானிப்பு நிலைகளையும், நூற்றுக்கணக்கான காவல் அரண்களையும் கொண்டு விளங்கிய இந்த இராணுவ காவல்நிலைகளைச் சூழ கம்பிச் சுருள்கள், மிதிவெடிகள், மண் அணைகள் என்று பலமான தற்காப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டிருந்தன.

இக்கூட்டுப்படைத் தளத்திற்கான உணவு மற்றும் அனைத்து விநியோகங்களும் கௌதாரிமுனைக்கருகில் இருந்த பெருங்கடலுடன் தொடர்புடைய கூமர் என்ற கடற்கரைப் பகுதியூடாகவே நடைபெற்றன.

ஆழங்குறைந்த நீர்ப்பரப்பால் மூன்று புறத்திலும் சூழப்பட்டிருக்கும் இந்தக் கூட்டுப்படைத்தளத்தில், கூமர் பகுதி மட்டும்தான் கடல்வழித் தரையிறக்கத்துக்கு ஏற்;றவாறு சற்று ஆழங்கூடிய ஒரு பகுதியாக இருக்கின்றது. இந்த இறங்குதுறையைச் சுற்றி பலமானதொரு இராணுவ முகாம் அமைக்கப்பட்டு, அப்பகுதி நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டுப்படைத் தளத்தின் ஒட்டுமொத்த பலத்தை அல்லது அதன் பாதுகாப்பை எடைபோட்டுப் பார்க்கவேண்டுமாயின் அதை உட்பலம், வெளிப்பலம் என இரண்டாக வகுத்து ஆராய்ந்து பார்ப்பதே சிறந்தது.

வெளிப்பலத்தைப் பொறுத்தளவில் கடல்தான் எதிரியின் பிரதான பலம். நீண்டு பரந்தபடி படைத்தளத்தை அரவணைத்துச் செல்லும் கிளாலி கடல்நீரேரியும், தேவை ஏற்படும்போது மன்னார்ப் பெருங்கடலூடாக ‘டோறா’ மற்றும் பீரங்கிப் படகுகளின் துணையுடன் துருப்புக்களைத் தரையிறக்கக்கூடிய ஒரு தரையிறங்கு துறையும் (கூமர்) இந்தக் கடற் பலத்திற்கு ஆதாரமாகவும் அதேவேளை, இக் கூட்டுத்தளத்திற்கு மிகவும் அருகாமையில் இரு முனைகளிலும் இருக்கும்; ஆனையிறவு, மண்டைதீவு தளங்களும் ஒரு துணைவலுவாகவே விளங்குகின்றன.

ஆபத்து வேளைகளில் இந்த இரு படைத்தளங்களும் வெளியிலிருந்து பூநகரிக்குக் கைகொடுக்கக்கூடியவை. இவற்றுடன் வயல்களையும், சிறு பற்றைகளையும் கொண்ட பூநகரி பிரதேசத்தின் தரை அமைப்பு, வானிலிருந்தபடி கட்டுப்படுத்தக்கூடிய தன்மையையே கொண்டுள்ளது. இவ்விதமாக பூநகரி கூட்டுத்தளத்தின் வெளிப்பலம் சிறப்பாக அமைந்திருந்தது.

உட்பலத்தை, அதாவது அதன் சொந்தப் பலத்தைப் பொறுத்தளவில் 2560 படையினரைக் கொண்ட அதன் ஆட்பலம்தான் பிரமாண்டமானது. டாங்கிகள், 120 மி.மீ மோட்டார் பீரங்கிகளுடன் நாகதேவன்துறை படகுத்தளமும் இந்த சொந்தப் பலத்திற்கு மேலும் வலுவூட்டுகின்றது.

இக் கூட்டுப்படைத் தளத்தில் தாக்குதலுக்கு உட்படக்கூடிய வாய்புகளுடன் இருந்த பகுதி, ஞானிமடத்திலிருந்து பள்ளிக்குடா வரையிலான சுமார் 7 கி. மீ நீள நிலப்பகுதிதான். இந்த பகுதிதான் இக் கூட்டுத் தளத்தின் தரைத் தொடர்புடைய பகுதியாகும்.

இந்த 16 கி.மீ நீளத்திற்கும் காவல் அரண்கள் அமைக்கப்பட்டு, அவற்றிற்கு முன்னால் ஏறக்குறைய ஜந்துஅடி உயரமான மண் அணை அமைக்கப்பட்டு, அந்த அணைக்கு முன்னால் இரண்டு அல்லது மூன்று வரிசைகளில் முட்கம்பிச் சுருளிட்டுப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதேவேளை நீரேரி ஒரமாக நாகதேவன்துறையிலிருந்து சங்குப்பிட்டி வரையும், அதற்கு அப்பாலும் மறுபுறத்தில் பெருங்கடலுடன் தொடர்புடைய பள்ளிக்குடாவிலிருந்து கூமர்முனை வரையும், அதற்கு அப்பாலும் கரையோரமாகத் தண்ணீருக்குள்ளேயே முட்கம்பிச் சுருள்கள் இட்டு முள்வேலி அமைத்து, தற்பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த மண் அணைகள், முட்கம்பிச் சுருள்கள், முள்வேலிகளையும்விட தேவையான இடங்களிலெல்லாம் மிதிவெடிகள் பல்லாயிரக்கணக்கில் புதைத்து வைக்கப்பட்டும், ஞானிமடம் – சங்குப்பிட்டி ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த பாரிய வெளிச்சம் பாய்ச்சிகளால் (Search Light) நீரேரி சதா கண்காணிக்கப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தன.

இன்று உலகெங்கும் பேசப்படும் ஊராகிய பூநகரிப் பகுதியானது, 1980களில் தொல்பொருள் ஆய்வாளர்களின் இலக்காக மாறிப் பிரபல்யம் அடையத் தொடங்கியது. ஈழத்தமிழர்களின் தொன்மையான குடியிருப்புகளில் பூநகரிப் பகுதியும் ஒன்று என்று அவர்கள் கண்டறிந்தார்கள்; அந்தத் தொல்குடித் தமிழர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களின் சிதைவுகளை அதற்கு ஆதாரமாகக்காட்டி, தமது தொல்லியல் முடிவுகளை வெளிப்படுத்தினர்.

பூநகரியானது ஈழத் தழிழர்களின் தொன்மையை மட்டுமல்ல, காலத்திற்கு காலம் அந்நியப் படையெடுப்பாளர்களின் ஆக்கிரமிப்பையும் கண்டுள்ளது. யாழ். தீபகற்பத்தினுள் புகும் பிரதான வாயில்களில் ஒன்றாகப் பூநகரிப் பகுதி இருப்பதுதான் இதற்குரியி காரணம்.
பண்டைத் தமிழர்களாகிய எமது முன்னோர்கள் பூநகரிப் பிரதேசத்திலிருக்கும் மண்ணித்தலைப் பகுதியிலிருந்து கிழக்கு அரியாலை வழியாகவும், நாகதேவன்துறையிலிருந்து கச்சாய் வழியூடாகவும் போக்குவரத்துக்களைச் செய்திருந்தனர்.

மன்னாரைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் அங்கிருந்து தரைவழியாக பூநகரி வந்து, பூநகரியிலிருந்து நாகதேவன்துறை வந்து, அங்கிருந்து நேர் வடதிசையில் இருக்கும் கச்சாயை அடைந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.

வன்னிப் பெருநிலமானது அன்றைய யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லைக்குள் அடங்கியிருந்த போதும், வன்னியின் குறுநில மன்னர்கள் ஒல்லாந்தருக்கு அடிபணிய மறுத்தனர். இதனால் அச்சமுற்ற ஒல்லாந்தர்கள் பூநகரியில் ஒரு கோட்டையை அமைத்து, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய தமது பிரயாணப் பாதையைப் பாதுகாக்க முயன்றனர்.

16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒல்லாந்தர் கட்டிய பூநகரி கோட்டை, பிரிட்டிஸ்காரரின் ஆட்சிக்காலத்திலிருந்து வெள்ளைத்துரைமாரினதும் பின்னர் அரசாங்க மேலாளர்களினதும் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டது.

இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரம் சிங்களவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டபின், தமிழினத்திற்கெதிரான இன ஒடுக்கல் முனைப்புற்றது. இந்த இன ஒடுக்குமுறைக்கெதிராக தமிழ் மக்களிடம் எழுந்த எதிர்ப்புணர்வானது ஆயுதப் போராக வடிவமெடுத்தது. இந்த ஆயுதப் போராளிகளின் அசைவியக்கத்தைத் தடுத்து நிறுத்த, வன்னி நிலப்பகுதியை குடாநாட்டுடன் இணைத்திருந்த பிரதான பாதைகளான ஆனையிறவும், பூநகரியும் ஆயுதப் படைகளின் இராணுவ கேந்திரங்களாக மாறின.

1981ம் ஆண்டு செப். 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பூநகரிக் கோட்டை சிங்களப் படைமுகாமாக மாற்றப்பட்டது. பூநகரிப் பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்க்கையைக் கழிக்கத்தொடங்கினர்.

1987ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி, பூநகரிக் கோட்டை முகாம் மீது புலிவீரர்கள் ஒரு பாரிய தாக்குதலைத் தொடுத்தனர்.
இத்தாக்குதல் நடந்த தினத்திற்குச் சில நாட்கள் முன்னர்தான் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்த இந்திய அரசு, எமது போராட்டத்தை ஒடுக்கவென இந்திய – சிங்கள அரசுகளால் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்குமாறு வற்புறுத்தியது.

ஒரு பாரிய இராணுவத் தாக்குதல் ஒன்றின் மூலம் எமது இயக்கத்தின் இராணுவ பலத்தை வெளிப்படுத்தி, தலைவர் மீது இந்திய அரசு திணித்த அழுத்தத்தை வலுவிழக்கச் செய்ய முயற்சி எடுக்கப்பட்டது.

இத்தகையதொரு அரசியல் இலக்குடன் பூநகரி முகாம் தாக்கப்பட்டது.

ஆனால் அருகிலிருந்த இன்னொரு இராணுவ முகாமிலிருந்து (4ம் கட்டை) படை உதவியைப் பெற்றுக்கொண்ட கோட்டை, வீழ்ந்து விடாது தப்பிக்கொண்டது. இருந்தாலும் புலிகளின் இராணுவ பலத்தை அம்முகாம் தாக்குதல் வெளிப்படுத்தியிருந்தது.

இத் தாக்குதல் நடந்த இரண்டாம் நாள் (29ம் திகதி) அமுலுக்கு வந்த இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், சிங்களப் படைக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில், பலவீனமான தம்மால் பாதுகாக்க முடியாத படைமுகாம்களை சிங்கள அரசு விலக்கிக்கொண்டது.

பூநகரிக் கோட்டையிலிருந்தும் அருகிலிருந்த 4ம் கட்டை முகாமிலிருந்தும் சிங்களப் படைகள் விலகிக்கொண்டன.
சில வாரங்களின் பின் இந்தியப் படைகள் பூநகரியில் குடிகொண்டன.

தழிழீழத்தின் அனைத்துப் பகுதிகளைப் போலவும் பூநகரியையும் அசிங்கம் செய்து அக்கிரமங்கள் புரிந்த இந்திய ஆக்கிரமிப்புப் படைகள், 1989 இன் இறுதியில் அங்கிருந்து வெளியெறின.

மீண்டும் 1991 ஒக்ரோபர் 17ம் நாளன்று, ஊர்காவற்துறையிலிருந்து மண்டைதீவையும் ஆக்கிரமித்தபடி புறப்பட்ட சிங்களப் படைகள், பூநகரிப் பகுதியை ஆக்கிரமித்து, நாகதேவன்துறை – ஞானிமடம் பகுதியில் ஒரு கடற் தளத்தையும் அமைத்து, பிரமாண்டமான பூநகரி கூட்டுத்தளத்தை நிறுவினர்.

இந்த கூட்டுத்தளம், 11.11.1993 இலிருந்து 3 நாட்களாக நடாத்தப்பட்ட ‘ஒப்பறேசன் தவளை’ தாக்குதல் நடவடிக்கை மூலம் விடுதலைப்புலி வீரர்களால் தகர்த்தழிக்கப்பட்டது.

டாங்கிகள், பீரங்கிகள், விசைப்படகுகள், ‘றாடர்’களுடன் நவீன ஆயத கருவிகள் சகிதம் 2560 துரப்புக்களைக் கொண்ட 6 முகாம்களை உள்ளடக்கிய, பாரிய கூட்டுப்படைத்தளம் அது.

நன்றி – விடுதலைப்புலிகள் குரல்: 45

 

 

070. Poonakari Kooddupadaiththalam

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments