‘விளையாட்டு என்பது தனி மனிதனின் வளர்ச்சியில் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியிலும் தங்கியுள்ளது‘
இலங்கையின் கராத்தே தந்தையும் எட்டாவது கறுப்புப்பட்டி பெற்றவருமான கிரான்ட் மாஸ்ரர் சீகான் பொனி றொபேட்ஸ் அவர்கள் கராத்தே கலையின் வளர்ச்சிக்கு ஆற்றிய சேவையையும், பங்களிப்பையும் பாராட்டி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் புலி இலச்சினை பொறிக்கப்பட்ட தேசிய விருதினையும், நினைவுப் பரிசினையும் வழங்கிக் கௌரவித்தார்.
எழுபத்துநான்கு வயது நிரம்பிய கிரான்ட் மாஸ்ரர் பொனி றொபேட்ஸ் அவர்கள் மட்டக்களப்பு கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சர்வதேச கராத்தே போட்டிகளில் முதன்முதலில் கலந்துகொண்ட தமிழ் மகன் என்ற பெருமைக்குரியவர். யாழ் மண்ணில் கராத்தே கலையை அறிமுகப்படுத்தியவரும் இவரே. பொனி றொபேட்ஸ் அவர்கள் சர்வதேச சோட்டோகான் கராத்தே சங்கத்தின் ஜப்பானால் அங்கீகரிக்கப்பட்ட ஏகப்பிரதிநிதியாக இலங்கையில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் இறுதியில் கிரான்ட் மாஸ்ரர் பொனி றொபேட்ஸ் அவர்கள் தமிழீழத்தில் கராத்தே கலையின் வளர்ச்சிக்கும் அதன் மேம்பாட்டிற்கும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி கௌரவ விருதாக ஆறாவது கறுப்புப் பட்டியையும், அதற்கான சான்றிதழையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கு வழங்கிக் கௌரவித்தார்.