×

யாழ் பொதுநூலகம்

யாழ் பொது நூலகம், தென் ஆசியாவின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாக, தமிழர்களின் வரலாற்றுத் தொன்மங்களின் சாட்சியங்களாக விளங்கிய பல அரிய நூல்களை தன்னகத்தே வைத்திருந்த, மிகவும் புகழ்பெற்று செயல்பட்டுக்கொண்டிருந்தது. தொல்பொருள், வரலாற்று ஆராய்ச்சிகளுக்கான தரமிகு தரவுகளின் சாட்சியமாகவும் விளங்கியது எனலாம்.

இந்நூலகம், உலகத் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாகக் கருதப்பட்டது. உலகில் வேறு எங்கும் கிடைக்கமுடியாத ஆவனங்கள் மற்றும் அரிதான நூல்கள் பல யாழ் பொது நூலகத்தில் சேகரித்தும் பாதுகாத்தும் வந்தனர். தமிழரின் மேன்மையை உயர்த்தி, பெரும் விரூட்சமடைந்து பல அறிஞர்களை உருவாக்கிய பெருமையும் இந்நூலகத்தையே சாரும்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால், ‘அதன் சுவடுகளை அழித்தால் போதும்’ என்பர். அதற்கேற்றவகையில், உலகத் தமிழ் மக்களின் புலமைச் சொத்தான இந்நூலகம், தமிழரின் அறிவுப்பசிக்கு உணவாக அமைந்த நூலகம், இலங்கை இனவாத காடையர்களால் 1981 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் நாள் எரித்து சாம்பலாக்கப்பட்டது.

அதுவே, அரைநூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்றுவந்த இனவாதத்தை வேறு ஒரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றது. சுதந்திர இலங்கைக்கு முன்னரே ஆரம்பித்த சிங்கள இனவாத அரசியல் பிணக்கங்கள், ஆயுத போரட்டமாக உருவெடுக்க, யாழ் நூலகத்தின் மீது இலங்கை அரசு தமது காடையர்களூடாக வன்முறையைத் தூண்டிவிட்டு நூலகத்தை தீக்கிரை ஆக்கப்பட்டதும் ஒரு முக்கிய காரணியமாயிற்று.

யாழ் நூலகத்தின் உருவாக்கம்

யாழ் நூலகத்தின் உருவாக்கத்திற்கு மூல காரணமாக இருந்தவர் அச்சுவேலியைச் சேர்ந்த கே.எம்.செல்லப்பா. இவர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் காரியதரிசியாக பணிபுரிந்தவர். 1933 ஆம் ஆண்டில் அவர் தனது வீட்டிலேயே தன்னிடம் இருந்த சில நூல்களை வைத்து நூல்நிலையம் ஆரம்பித்து வைத்து, சான்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் புதிய திறவுகோலை வழங்கினார் எனலாம்.

இந்த நூலகம் பலருக்கும் பயன்பட வேண்டும் என்று எண்ணி, 09/06/1934 அன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் ஜசாப் தம்பையா அவர்களின் தலைமையில் கூட்டம் வைத்தார்கள். அன்று நூலகத்திற்கென சேர்த்த காசு மொத்தம் 182.22ரூ/- மட்டுமே. அன்றைய காலகட்டத்தில் இந்தக்காசு பெரும் மூலதனமாக அமைந்துள்ளது. ஆசுப்பத்திரி வீதியில் ஒரு வாடகை அறையில், 01/08/1934 அன்று, 844 நூல்கள் மற்றும் 36 பருவ வெளியீடுகளுடன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நூலகம் தயாராகிற்று.

அடிப்படை வசதிகளின்றி நூலகம் இடர்பட்டுக்கொண்டிந்த வேளையில், யாழ்ப்பாணப் கட்டிட சபை பொறுப்பேற்று 1935 இல் இடமாற்றம் செய்தது. 1952 ஆம் ஆண்டு, ஆனி 14ஆம் நாள் சாமி சபாபதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டினை அடுத்து நவீன கட்டிடம் அமைக்க ஆரம்பித்தனர். புதிய நூலகக் கட்டிடத்தை கட்டியெழுப்புவதற்கு அதிவனபிதா லாங் அவர்கள் பக்கத்துணையாக இருந்து ஆதரவு அளித்துவந்தார். நூலகத்துறையில் நிபணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ் ஆர் ரங்கநாதன் ஆதரவு கொடுத்தார். சென்னை மாகாண அரசின் கட்டிடக்கலை நிபுனர் கே.எஸ்.நரசிம்மன் அவர்கள், நூலகத்தின் வடிவமைப்பிற்கான திட்டங்களை வகுத்து, வரைபடங்களை தயாரித்துக் கொடுத்தார்.

29-03-1953 அன்று கட்டிட அடிக்கல் நாட்டுவிழா இடம்பெற்றது. 1959 ஆம் ஆண்டில் முதல்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு, அப்போது யாழ் முதல்வராக இருந்த ஆல்பிரட் துரையப்பா அவர்களால் பெரும் விமர்சையாக திறக்கப்பட்டது. முழுமை பெற்று இயங்கிவந்த நூலகத்தில் அன்று 33 நூலகர்கள் பணிபுரிந்தனர்.

யாழ் நூலக எரிப்பு

பல கட்டங்களைத் தாண்டி, படிப்படியாக உருவெடுத்து பெரும்புகழ் பெற்ற அறிவுக் களஞ்சியம் என யாழ் நூலகம் திகழ்ந்துவந்தது. அத்தகைய பெருமைகளையும் சிறப்பையும் இல்லாதொழிக்க, தீக்கிரையாக்கி பொசுக்கிய நாளாக, தமிழரின் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக, மே மாதம் 31ஆம் நாள் துயர் மிகு வரலாற்று பக்கங்களில் இடம்பெற்றது; அன்றைய சம்பவம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு செல்ல ஒரு முக்கிய கரணியமாயிற்று என்றும் கூறலாம். தமிழ்மக்களிடையே உறுதியடைந்து வந்த தமிழ்த் தேசிய நிலைப்பாடு, பௌத்த சிங்கள இனவாதிகளுக்கு மிகவும் வெறுப்பூட்டியது- அதுவே தமிழ் மக்கள் மீதும் தமிழ் மக்களின் அடையாளங்கள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து அவர்களது உடைமைகளை சூரையாடத் தூண்டிவிட்டது. அந்த வகையில், தமிழ் மக்களின் வரலாற்றை அழித்தால் தமிழினத்திற்கென்றே அடையாளம் இல்லாமல் போய்விடும் எனச் சதித்திட்டம் தீட்டிய இனவாத அரசு தமிழ் மக்களின் கருவூலமான யாழ்நூலகத்தை சாம்பலாக்கினர்.

1981 மே 31 ஆம் திகதி நள்ளிரவு சுமார் 12:00 மணிக்குப் பின்னர் தீமூட்டப்பட்ட யாழ்நூலகம் இரவிரவாக எரிந்தது. கட்டிடத்தோடு, 1800களில் இருந்து யாழில் வெளியாகிய செய்தி ஏடுகள், தொன்மை வாய்ந்த வரலாற்று ஆவணங்களுடன், எம்மவரின் எழுத்துருவாய் திகழ்ந்த நூலகத்தில் சுமார் 97,000 த்திற்கும் மேற்பட்ட, கிடைப்பதற்கு அரிய பல தமிழ், ஆங்கில நூல்களும், பல ஓலைச்சுவடுகளும் உருகுலைந்து சாம்பலாகின.

தீக்கிரையாகிய பலவற்றில், இலக்கியம், இலக்கணம், தத்துவம், மொழியியல் பிரிவுகளின் கீழ் 6000 நுல்களும், 1585 இல் கத்தோலிக்க மதத்தலைவர்களால் தமிழில் எழுதப்பட்ட பல நூல்களும் இதில் அடங்கும். அரிய புத்தகங்களுள் 1660 இல் றோபேட் நொக்ச் (Robert Knox) அவர்களால் எழுதப்பட்ட “கிசுட்டரி ஆப் சிலோன்” (History of Ceylon), யாழ்ப்பாண வரலாற்று நூலாகிய முதலியார் நாயகத்தின் “பண்டைய யாழ்ப்பாணம்”, தமிழில் முதல்முதல் வெளிவந்த முத்துத்தம்பிப்பிள்ளையின் இலக்கிய கலைக் களஞ்சியமான “அபிதான கோசம்”, அதன் பின்னர் வந்த சிங்கார முதலியாரால் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியமான “அபிதான சிந்தாமணி” சித்த வைத்தியம் கூறும் பனை ஓலைகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டது.

இச்சம்பவம், இலங்கை பேரினவாதத்தின் மீதிருந்த இறுதி நம்பிக்கையையும் சிதைத்து, தமிழ் மக்களின் போராட்டத்திற்கு விதையானது.

கட்டிட மீளமைப்பு

யாழ் நூலம் 1984 ஜூன் மாதம் மீளமைப்பு செய்யப்பட்டது. ஆனால், 1988 இன் யுத்ததில் ஏற்கனவே சேதமடைந்த கட்டிடம் மீண்டும் சேதமானது. மேலும், 1996 இல் மீண்டும் இரானுவத்தால் மேலும் அழிக்கப்பட்டது. பின்னர் 1997 ஆம் ஆண்டு வெள்ளைத் தாமரை என்ற அமைப்பால் மங்கள சமரவீரவின் தலைமையில் “Book & Brick” என்ற பெயருடன் மீளமைப்பு வேலைத்திட்டம் தொடங்கியது. இதற்கு இலக்‌ஷ்மன் கதிர்காமர் அவர்கள் இந்த மீளமைப்புப் பொறுப்பை ஏற்ற்றுக்கொண்டு, பழைய வடிவத்தில் அதே இடத்தில் உருவாக்க ஆதரித்தார்.

யாழ்நூலகத்தை கண்துடைப்பிற்காக மீளமைத்து தந்துவிட்டு கைகழுவியது சிங்கள அரசு. ஆனால், பொசுங்கிப்போன தமிழனின் அரிய வராற்றுப் பதிவுகள் மற்றும் அடையாளங்கள், சாம்பலான தமிழ் மருத்துவ சான்றுகள், உருகுலைந்துபோன தமிழனின் கற்பனை நிரம்பிய இலக்கியங்கள், என்ன செய்தாலும் மீண்டும் வரப்போவதில்லை.

மறைக்கப்பட்ட பல உண்மைகளுடன் தப்பியிருந்த எழுத்துச் சான்றுகளும் தடமின்றி எரிந்தன. புதைத்தாலும், எரித்தாலும் உண்மைத்தன்மை அடங்கிய தமிழரின் வரலாறானது சமகாலத்திற்கேற்ப உயிர்த்துக்கொண்டே இருக்கும்.

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

Rising from the Ashes E-Book-1

எரிந்தது நூலகமா இல்லை தாயகம்

மிண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது

J.P.L

 

guest
2 Comments
Inline Feedbacks
View all comments