×

தமிழ் மணியின் கதை

நியூசிலாந்து நாட்டு வெல்லிங்டன் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள, தமிழ்  எழுத்துக்களுடன் கூடிய சிறியதொரு மணி  செல்லமாகத் ”தமிழ்மணி” என்று அறியப்படுகிறது.  இது பல்வேறு கதைகளுக்குக் கருவாகத் திகழ்கின்றது.

சமீபத்தில் இந்த மணியின் வரலாறு குறித்த முகநூல் பதிவு ஒன்றினைக் காண நேர்ந்தது. அதில் கண்ட வரலாற்றுப் பிழைகளை நான் சுட்டிக்காட்டியபோது, தான் இணையத் தளத்திலிருந்து இந்த செய்தியைப் பெற்றதாகவும், அதையே பதிவிட்டிருப்பதாகவும்” அந்த பதிவாளர் பின்னர் தெரிவித்தார். இந்த மணி குறித்த சில தரவுகளை எழுத வேண்டுமெனக் கருதி இது பதிவிடப்படுகிறது.

1900களில் தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு என்ற தலைப்பில் நான் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டிருந்தபோது இந்த மணி குறித்து  மாறுபட்ட  பல்வேறு செய்திகளைக் காண நேர்ந்தது. எனவே இது குறித்த தேடலில் ஈடுபடலானேன்.

அருங்காட்சியகத் துறையில் நான் பணியாற்றி வந்த காரணத்தால் இந்த மணி குறித்த விபரங்களைத் தெரிவிக்குமாறு நியூசிலாந்து வெல்லிங் தேசிய அருங்காட்சியகத்திற்கு எழுதினேன். மேற்படி மணி குறித்து இதுவரை எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், ஆய்வுரைகள், புகைப்படம் ஆகியவற்றுடன் 24.05.1990 அன்று மேற்படி அருங்காட்சியகத்திலிருந்து பதில் கிடைத்தது. அந்த செய்தியின் சாராம்சம் வருமாறு:

“வெங்கலத்தினாலான இந்த மணியின் உயரம் 3 ¾ அங்குலம். விட்டம் 5 ½ அங்குலம். மணியின் கீழ்ப்பகுதி உடைந்து விட்டது. மணியின் வெளிப்பக்கத்தில் நடுப்பகுதியில், சுற்றுவட்டத்தில் “முகைய்யத்தீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி” என்ற வாசகம் காணப்படுகிறது. இதில் மொத்தம் 23 எழுத்துக்கள் உள்ளன. எழுத்துக்கள் வழக்கமான முறையில் உளி கொண்டு பதிந்து வெட்டப்படாமல் (Cut or engrave) புடைப்பாக  (embossed) உள்ளன. ஆகவே இந்த வாசகம் ½ அங்குல உயரத்தில் புடைப்பாகப் பொறிக்கப்பட்டுள்ளது.”

“1865-ல் நியூசிலாந்தில் நடைபெற்ற சர்வதேசப் பொருட்காட்சியில் இந்த மணி முதன் முதலாக கிறிஸ்துவ மிஷனி – பாதிரியர் கோலன் சோ என்பவரால் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 1839-ல் நியூசிலாந்து தீவில் வங்கேரி என்னுமிடத்தில் வாழ்ந்த நியூசிலாந்து மோரி பழங்குடி மக்களிடமிருந்து இந்த மணியைப் பெற்றதாகவும், மேற்படி பழங்குடி மக்கள் இந்த மணியைக் கடற்கரை ஓரத்தில் சாய்ந்து கிடந்த ஒரு மரத்தடியிலிருந்து கண்டெடுத்ததாகவும், கோலன் சோ பாதிரியார், மணி குறித்த செய்தியாகக் குறிப்பிட்டிருந்தார். கோலன் சோ பாதிரியாரின் நன்கொடையாக 1890ல் இந்த மணி வெல்லிங்டன் தேசிய அருங்காட்சியத்திற்கு பெறப்பட்டதாக மேற்படி ஆண்டுக்கான அருங்காட்சியப் பதிவேடு கூறுகிறது.”

“1867-ல் முதன் முதலில் இந்த மணி குறித்து எழுதியுள்ள கிராபோர்டு ஜான் என்பவர், மணியில் காணப்படும் எழுத்து ஜாவா மொழி என்று கூறினார். எனினும் அதனைப் படித்து அறிய இயலவில்லை.

மணி குறித்து சரியான தகவல்களைப்பெற மேற்படி அருங்காட்சியகம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது. அருங்காட்சியகத்தின் வேண்டுகோளுக்கிணங்க 1940ம் ஆண்டு டென்மார்க் கோப்பன்ஹேகன் ஆசிய ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ்நாட்டுக்காரர் பேராசிரியர் செல்வம் மற்றும் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி பேராசிரியர் டி. ஏசுதாஸ் ஆகியோர் இதனைத் தமிழ் எழுத்து எனக்கூறி ஏற்புடைய வாசகத்தையும் படித்து அளித்தனர். அதில் முகைய்யத்தின் வக்குசு என்பாருக்கு சொந்தமான கப்பலிலிருந்து கிடைத்த மணியாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் மணி நியூசிலாந்து நாட்டுக் கடற்கரைப்பகுதிக்கு எப்படி வந்து சேர்ந்தது என்பதை அறிய இயலாமலே இருந்தது.”

“1975ம் ஆண்டு ராபர்ட் லாங்டன் மற்றும் ப்ரெட் ஹில்டர் ஆகியோர் இந்த மணியின் வரலாறு குறித்த செய்திகளைப் பிரபல்யமான ஆய்வு இதழ்களில் எழுதி வெளியிட்டனர். இந்த மணி முஸ்லிம் வணிகர் ஒருவருடைய கப்பலில் இருந்து கிடைத்திருக்க வேண்டுமெனவும், அரேபியா, இந்தியா, இலங்கை, தூரக்கிழக்கு நாடுகள் ஆகிய ஏதாவது ஒரு பகுதியிலிருந்து ஆஸ்திரேலிய கடற் பகுதித் துறைமுகங்களுக்கு வணிக நிமித்தம் வந்த ஒரு கப்பலின் மணியாக இருக்க வேண்டும் எனவும், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்த கப்பல் புயல் காற்றினால் விபத்துக்குள்ளாகி நியூசிலாந்து தீவுப்பகுதியில் ஒதுங்கியிருக்கலாம் எனவும், மேலும் நியூசிலாந்து தீவுப்பகுதி வெளி உலகத் தொடர்புக்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் கழித்து இந்த மணி இங்கு கிடைத்துள்ளது எனவும் அவர்கள் தங்களது கட்டுரைகளில் எழுதினர். எனினும் இவற்றில் மேற்படி மணி குறித்த ஏற்புடையதொரு முழுமையான செய்தி கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த கட்டுரைகளின் மூலம் மணி குறித்த செய்தி உலகம் முழுதும் தெரிய வாய்ப்பானது”

ஆய்வாளர்களும் தமிழார்வலர்களும் இந்த மணி குறித்து பல் வேறு கருத்துகளைக் கூறலாலாயினர்.

மணியின் வாசகத்தை ஆய்வு செய்த இலங்கை தனிநாயகம் அடிகளார் தமிழ் வாசகத்திற்கு மிகவும் ஏற்புடையதொரு வாசிப்பை அளித்தார். அதாவது “முகைய்யத்தீன் வக்கசு உடைய கப்பல் உடைய மணி” எனப் படித்ததோடு, எழுத்தமைதியைக் கொண்டு இந்த எழுத்துகள் கி.பி.17-18ம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இருக்க வேண்டுமெனவும், தமிழ்நாட்டு கடற்கரைப் பகுதியிலிருந்து இந்தியப்பெருங்கடல் வெளியில் சென்ற கப்பலுடைய மணியாக இருக்கலாம்” எனவும் அவர் கூறினார்.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையைக் கொண்டு எனது ஆய்வு தொடர்ந்து அதில் என்னுள் எழுந்த முக்கியமான கேள்வி முகைய்யத்தீன் வக்குசு என்பது ஒரு நபரின் பெயரா அல்லது ஒரு கப்பலின் பெயரா? என்பதுதான்.

1975ல் இவ்வாறு விரிவான கட்டுரைகள் வெளியானவுடன் இந்த மணியின் மீது உலகின் பல பாகங்களிலிருந்தும் ‘உரிமைக்குரல்கள்’ எழுந்தன. இலங்கைக்காரர்கள், மலாயா கடலோடிகள், தமிழ்நாட்டுக் கடலோடிகள், வணிகர்கள் என பலரின் உரிமைப்போராட்டம்! அது ஒரு நீண்ட பட்டியல். இருப்பினும் ஒரு சில மட்டும் உங்கள் பார்வைக்கு:

1988 ல் தமிழக இஸ்லாமியர் வரலாறு என்ற நூலை எழுதிய ஏ.கே. ரிபாயி, நியூசிலாந்து   அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ஒரு தமிழ் மணி. இதில் ‘முகையதீன் அடிமை’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்த மணி தங்களது குடும்பத்தின் முன்னோர்களுக்குச் சொந்தமான கப்பலிருந்து கிடைத்த மணி, எனவே அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென ராமநாதபுரம் மாவட்டம், மரக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த O.M.S.K.அப்துல் கரிம் மரக்காயர் தெரிவிக்கிறார் என எழுதி இருந்தார்.

கீழக்கரையிலிருந்து மற்றுமொருகுரல்! “இந்த மணி கீழக்கரை உறபீபு மரக்காயர் என்று அழைக்கப்பட்ட உறபீபு அரசருக்குச் சொந்தமான கப்பலின் மணி, அவருக்கு 40 கப்பல்கள் இருந்தன. உலகின் பல துறைமுகங்களுக்கு அவரது கப்பல்கள் சென்று வந்தன. அவ்வாறு நியூசிலாந்து பகுதிக்குச் சென்ற அவரது கப்பலிலிருந்து அப்பகுதிக்கு இந்த மணி சென்றிருக்க வாய்ப்பு உண்டு” என ஒலித்தது.

தமிழ் எழுத்துப் பொறித்துள்ள இந்த மணி நியூசிலாந்து தீவுப்பகுதியில் கிடைத்திருப்பதால் ‘நியூசிலாந்து தீவைக் கண்டு பிடித்தவர்களே தமிழ் முஸ்லிம்கள்தான்’, என்ற ஒரு பரபரப்பானக் கட்டுரையை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒருவர் எழுதினார்.

கீழக்கரையைச் சேர்ந்த இன்னொரு பிரமுகர், “கீழக்கரையில் எங்களது முன்னோர் பாரம்பரியமாக கடல் வாணிபம் செய்து வந்தவர்கள். அவர்களுக்குச் சொந்தமாகப் பல கப்பல்கள் இருந்தன. எங்களது குடும்ப பட்டப்பெயர் (வகையறா பெயர்) ‘வக்காசு’ என்பதாகும். முகையதீன் வக்காசு என்பது எங்களது முன்னோர் ஒருவரது பெயர் என்பதற்கு சான்று இருக்கிறது. மணியில் முகைய்யத்தீன் வக்குசு என்று எழுதப்பட்டுள்ளது முகைய்யத்தீன் வக்காசு என்பதுதான்” வக்குசு” என எழுதப்பட்டுள்ளது. எனவே இந்த மணி எங்களது குடும்பத்திற்கு உரியதாகும்” என உரிமை கொண்டாடி அவர்களது குடும்பக் கொடி வழி ஜாபிதா ஒன்றையும் வெளியிட்டிருந்தார். (இணையதளத்தில் காணவும்.).

 கீழக்கரையிலிருந்து இன்றும் சில கடலோடிக் குடும்பங்களின் குரல்களும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தன.

இத்தகைய தகவல் மூட்டைகளுடன் தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு” என்னும் எனது  ஆய்வுப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.

18,19 ஆம் நூற்றாண்டுக்குரிய கடல் வாணிப வரலாறு, அதில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்த ஆங்கிலேயர் விட்டுச் சென்றுள்ள வணிக ஆவணங்களை சென்னை ஆவணக்காப்பகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். இக்கால கட்டத்தில் நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள” கப்பல்களின் பெயர்கள்”, காதர் பக்ஸ் (Kathar Bux), மொகிதீன் பக்ஸ், மொகிதீன் பாக்யலட்சுமி பக்ஸ், முகமது சுலைமான் பக்ஸ் என பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. கப்பலின் உரிமையாளர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள்தான்.  இருப்பினும் உரிமையாளர் பெயரும் கப்பலின் பெயரும் வேறாக உள்ளன. எடுத்துக்காட்டாக நாகப்பட்டினத்தில் 1808ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள காதர் பக்ஸ் என்னும் கப்பலின் உரிமையாளர் பெயர்  முகமது நைனார் மரக்காயர் ஆகும். ஆகவே முஸ்லிம் கப்பல் உரிமையாளர்கள் இஸ்லாமிய ஆன்மீகப் பெரியோர்களின் பெயர்களைத் தங்கள் கப்பல்களுக்கு சூட்டியிருந்தனர் என்பது தெரிய வந்தது. (Tamilnadu Archives, Tanjore District Records Vol. No.3174/31 Mard. 1806; Public consultations vol, 610/9 April/1833; Vol. 614/2 0ctober, 1833; Vol. 636/18 May 1835; Vol. 666/ 18 April 1837; Tinnlveli Gazette Vol VI. No. 194/December 1862- இன்னும் பல தொடர்புடைய ஆவணங்கள்)

இந்த ஆவணச் செய்தி எனக்கு ஒரு அறுதியான செய்தியை விளக்கியது. அதாவது ‘முகைய்யதீன் பக்ஸ்’ என்பது ஒரு கப்பலுடைய பெயர் எனவும் அதுவே, மேற்படி மணியில் ‘முகைய்யதீன் வக்குசு’ என எழுதப்பட்டிருப்பதாகவும் அறிந்து கொள்ள முடிந்தது. மேலும், பக்ஸ் (Bux) என்றால் கப்பல் என்றும் பொருள்படும் எனவும் முடிவுக்கு வரமுடிந்தது.

அடுத்து மணியின் உரிமை கோரியுள்ளவர்கள் குறித்து நமது கவனம் திரும்பியது. இதில் கீழக்கரையின் குரல் முக்கியத்துவம் பெறுவதை அறிந்து, ராமநாதபுரம் மாவட்டம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தேன். இந்த ஆவணங்களில் கீழக்கரை ஹபீபு முகமது (ஹபீபு அரசர்) குறித்த செய்திகள் பலவற்றைக் காண முடிந்தது. சோழமண்டல (கிழக்கு)க் கடற்கரைப்பகுதியிலும், இலங்கையிலும் இவர் கப்பல் வணிகராகத் திகழ்ந்த சிறப்புமிகு செய்திகளும் கிடைத்தன. ஆனால் இவருக்கு எத்தனை கப்பல்கள் இருந்தன என்பது குறித்தும் அவற்றுள் முகைய்யத்தீன் பக்ஸ் என்ற ஒரு கப்பல் இருந்ததா என்பது குறித்தும் செய்திகள் இல்லை. மேலும் ஹபீபு மரக்காயரது கலங்கள் கிழக்குக்கரை, (தமிழகம்), மேற்குக்கரை (மலபார்) துறைமுகங்கள் மற்றும் இலங்கைத் துறை முகங்களுடனும் வணிகத்தொடர்பு கொண்டிருந்தாகவே பதிவேட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய கடல் வெளியில் (Indian Ocean area) இவரது கப்பல்கள் பயணித்ததாக குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆகவே இந்த மணி கீழக்கரை ஹபீபு மரக்காயரது கப்பலுக்கு சொந்தமானது அல்ல என்பது புலனாகியது.

 மரக்காயர் பட்டினம் மரக்காயர் குறித்து எந்த ஆவணமும் கிடைக்கவில்லை.

‘வக்காசு’, குடும்ப மரபு குறித்தும் ஆவணங்களிலோ, அப்பகுதிக் கள ஆய்விலோ, தகவல்கள் இதுவரை அறியக்கூடவில்லை.

நியூசிலாந்துத் தீவை தமிழ் முஸ்லிம்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்பது எத்தகைய கண்டுபிடிப்பு என்பதை நீங்களே சிந்தியுங்கள்.

இவ்வாறே இன்னும்பல உரிமைக் குரல்களும் சத்தமின்றி அடங்க வேண்டியதாகிறது.

மதராஸ் துறைமுகத்திலிருந்து (Madras Port) 18,19 ம் நூற்றாண்டுகளில் இந்தியப் பெருங்கடல் நாடுகளுடன் நேரடிக் கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது. கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பல்கள் கட்டுவதற்குத் தேவையான மரங்கள் ஆஸ்திரேலியத் துறைமுகங்களிலிருந்து ஆங்கிலேய கம்பெனியின் கப்பல்கள் மூலம் மதராசுக்கு (சென்னைக்கு) கொண்டு வரப்பட்டன.

 ஆங்கிலக் கம்பெனிக் கப்பல்களோடு தனியார் கப்பல்களும் இந்த வழித்தடத்தில் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தன. மதராஸ் மற்றும் அதன் அருகிலிருந்த துறைமுகங்களிலிருந்தும் இத்தகைய வணிகம் நடைபெற்று வந்தது. 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பழவேற்காடு (புலிகாட்) துறைமுகத்திலிருந்து ‘முகைய்யத்தீன் பக்ஸ்’, என்னும் பெயருடைய கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடல் துறைமுகங்களுக்குப் பயணித்த பதிவேட்டு செய்தி தெரியவருகிறது.  இந்த கப்பல் முகமது ஷபி என்பவருக்கும், ஜேன் டி மட்டு அக்வாரெஸ் என்னும் டச்சு தனியார் வணிகருக்கும் சொந்தமானது. இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியா, மற்றும் அதன் அருகிலுள்ள நியூசிலாந்து பகுதியில் பயணித்தபோது இந்த கப்பல் விபத்துக்குள்ளாகி, கரை ஒதுங்கியதில் அந்த கப்பலின் இந்த மணி அப்பகுதியில் கரை ஒதுங்கியிருக்கக்கூடும். (இருப்பினும் இது குறித்து நிறைவான செய்தியை தெரிந்து கொள்ள இக்கப்பலின் பயணக் குறிப்புகள் (Ship Logs) கிடைக்கவில்லை. இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன். எவ்வாராயினும் நியூசிலாந்து பகுதிக்குச் சென்ற  முகைய்யத்தீன் பக்ஸ்  என்பது  தமிழ்நாட்டுக் கப்பல்  என்பது  எமது   ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. இந்த மணி அந்த கப்பலில் இருந்ததாக இருக்கலாம்.

இது குறித்த செய்திகளை 1990 ம் ஆண்டு டிசம்பர் மாதம், கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் ஒரு ஆய்வுரை சமர்ப்பித்தேன். அந்த கட்டுரை மேற்படி மாநாட்டு ஆய்வு நூலாகவும் வெளிவந்துள்ளது.

 தொடர்ந்து, பல கட்டுரைகளிலும் இந்த செய்திகளைக் குறிப்பிட்டுள்ளேன்.

 2004ம் ஆண்டு வெளியான எனது முனைவர்பட்ட ஆய்வுரையான ‘Maritime History of Muslims of Coromandel Coast’ என்னும் எனது நூலிலும் மணியின் புகைப்படத்துடன் இது குறித்த செய்திகளைக்  குறிப்பிட்டுள்ளேன். உலக அளவிலான கடல் வாணிப வரலாற்று ஆய்வாளர்கள் இதனைப் பார்த்துள்ளனர். (இந்த ஆங்கில நூலின் தமிழாக்கம் விரைவில் வெளிவர உள்ளது.)

 இந்த மணி குறித்து அவ்வப்போது வெளியாகும் பிழையான செய்திகளுக்குத் திருத்தம் அளித்து வந்துள்ளேன்.

எல்லா மட்டங்களிலும் ஒரு மேலோட்டம்தான்!

டெல்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இந்த மணியின் புகைப்படத்தை வைத்து, 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து மணி, நியூசிலாந்து அருங்காட்சியத்தில் உள்ளது”, என்ற வாசகத்துடன் காட்சிப்படுத்தியிருந்ததை 1997ல் நேரில் கண்டேன். சரியான தகவல்களை அவர்களுக்கு எழுதினேன். அங்கு தற்போது சரியான தகவல் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு கப்பலில் இது போன்ற மணிக்கு என்ன வேலை? எஸ். எஸ்.ரஜூலா கப்பல் குறித்த எமது ஆய்வில் ஒரு சுவையான  தகவல் கிடைத்தது. ” ஒவ்வொரு வேளை உணவின் போதும் ஒழு சிறுவனிடம் மணி ஒன்றைக் கொடுத்து அடிக்கச்செய்து உணவு தயாராக இருப்பதாக அறிவிப்பு செய்வார்கள்.” (டாக்டர் ஜெ. ராஜா முகமது, “ரஜூலா, 20ம் நூற்றாண்டு கப்பலின் வரலாறு”. (நூல்)” நாவாய் – கடல்சார் வரலாற்று ஆய்வுகள்”, (தொ.ஆ.) ந. அதியமான், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,2010) நாம் பேசிக்கொண்டிருக்கும் மணியும் சிறியதாக இருப்பதால், இது போன்றதொரு பயன்பாட்டிற்காகவே இருந்திருக்கலாம்.

ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்த மணியை என்றாவது பார்த்துவிட வேண்டுமென்ற ஏக்கம் என்னுள் நிறைந்திருந்தது. 2019 டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூர் இந்திய மரபுடமை மையம் (Singapore – Indian Heritage Centre) சிங்கப்பூரில் நடத்திய பன்னாட்டு வரலாற்றுக் கருத்தரங்கில், ”தமிழக முஸ்லிம்களின் சிங்கப்பூர் கடல் வாணிபத் தொடர்பும் அதன் விளைவுகளும்” என்பது குறித்து ஆய்வுரை அளிக்க இந்தியாவிலிருந்து நான் அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு இந்த மணி குறித்த ஒரு விவாதம் முதன்மைப் பெற்றிருந்தது. மேலும், நியூசிலாந்து வெல்லிங்டன் அருங்காட்சியகம் இந்த மணியினை (அசல்) சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து காட்சிக்கு வைத்திருந்தது. உலகெல்லாம் ஊடகங்களில் சுற்றித்திரியும் அந்த மணியினை நேரில் காணும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். அந்த கருத்தரங்கிலும் மணி குறித்த  எனது கருத்தை  பதிவு செய்தேன்.

இவ்வளவு சரியான தகவல்கள் ஒருபுறமிருக்க, யாரோ எந்தகாலத்திலோ சொல்லிவைத்த வழக்காறுகள், கதைகள் கோலோச்சுகின்றன. இவ்வாறான ஆய்வுரைகள் பல எழுதி இருந்தும், இன்னும் இந்த செய்திகளைப் பலரும் பரவலாகச் அறியும் வகையில் நான் சொல்லவில்லையோ என்ற எண்ணம் மேலோங்குகிறது.  இதுவும் கூட சரிதான்.

நான் முன்பு குறிப்பிட்டுள்ளதைப்போல் இது குறித்து பதிவிட்டுள்ள பதிவாளர், தான் பதிவிட்டுள்ள செய்திகள் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார். இணைய தளம் நவீன காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள எளிமையான கலைக்களஞ்சியம். தட்டிய நொடியில் செய்திகள் கிடைத்துவிடும். ஆனால் இதில் வரும் அனைத்து செய்திகளும் வரலாற்றுப் பூர்வமானதாக இருக்குமென சொல்வதற்கில்லை. இணையதள ஊடகங்களில் யார் வேண்டுமானாலும் எதையும் எழுதலாம் என்ற நிலையில் எழுதுபவர் அவர் அறிந்த செய்திகளை அவசரத்தில் பதிவிடுகிறார். இதன் மெய்த்தன்மை அறிவது அவற்றைப் படிப்பவர்களின் கடமையாகிறது. அவற்றைக் கையாளும்போது சற்று கவனமாக இருப்பது நலம்!

இவ்வாறான சூழல்களின் நிறைவாக என்மனதில் உதித்த ஒன்று நாம் இதுபோன்று செய்திகளை இன்னும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே! அதிலும் முஸ்லிம்களின் வரலாறு எவ்வாறெல்லாம் புணையப்பட முடியுமோ அவ்வாறு புனையப்பட்ட உருவம்  பெற்று உச்சத்தில் உள்ளது. எனவே இதில் கவனம் செலுத்தி நம்மைக் குறித்த சரியான வரலாற்றையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகிறது என்பதை உணருகிறேன். இந்த பதிவின் நிறைவாக,

“கிளராத சோறு வேகாது

சீவாத தலை படியாது

துவைக்காத துணி வெளுக்காது”

இவற்றைப் போலத்தான் விளங்காத உண்மையும் வீணாகிப்போகும்”.

“உண்மைகளை உரிய நேரத்தில் விளக்கிச் சொல்லாத காரணத்தினால்

அநியாயக்காரர்கள் அரியாசனத்திலே ஒட்டிக் கொண்டிருக்க முடிகிறது”

என்று அறிஞர் அண்ணா சொல்லியிருப்பது தான் என் மனத் திரையில் பளிச்சிட்டது.

 வரலாற்று உண்மைகளைத் தொடர்ந்து சொல்வோம்!

ஆவணம்

 

 

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments