×

வன்னியில் முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்ட இடைக்கால தமிழ் கல்வெட்டு.

வன்னியில் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலமையில் தொல்லியல் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்கள் திரு. கபிலன், திரு. மணிமாறன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வரும் தொல்லியல் ஆய்வின் போது வன்னியில் மரையடித்த குளத்திற்கு அருகே பெரியபுளியங்குளம் என்ற இடத்தில் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டொன்றை அடையாளம் காண்டனர்.

இக்கல்வெட்டு அப்பிரதேச மக்களால்  அங்குள்ள வயல்வெளியில் இருந்து எடுத்துவரப்பட்டு அங்குள்ள வைரவர் ஆலயத்தில் தெய்வ சிலைகளை வைப்பதற்கான பீடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் அக்கல்லில் உள்ள எழுத்துக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த வவுனியா பிரதேசசபை ஆய்வு உத்தியோகத்தர் திரு. ஜெயதீபன் இது பற்றிய செய்தியை திரு. மணிமாறனுக்கு தெரியப்படுத்தியதன் பேரில் இக்கல்வெட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவினரின் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

பல வரிகளில் எழுதப்பட்டிருந்த இக்கல்வெட்டின் உடைந்த கீழ்ப்பாகமே தற்போது கிடைத்துள்ளது. அதில் ஐந்து வரிகள் காணப்படுகின்றன.

அதன் முதலாவது வரியில் உள்ள எழுத்துக்கள் பல பெருமளவு சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. அதனால் அவ்வரியில் சொல்லப்பட்ட பெயர்களை அல்லது செய்திகளை அறியமுடியவில்லை. ஏனைய நான்கு வரிகளையும் தெளிவாக வாசிக்க முடிகிறது.

அவற்றைத் தமிழக கல்வெட்டு அறிஞர் பேராசிரியர் சுப்பராயலு பின்வருமாறு வாசித்துள்ளார்.

ஆஞ்ஞை மூந்று த

(ன்ம) ஆஞ்ஞை வல்ல-

வரையன் சத்தியம் இ-

து அழிப்பார் நர(கம்) புகுவார்.

ஒரு ஆலயத்திற்கு கொடுக்கப்பட்ட தானத்தை அல்லது அரசால் அல்லது ஒரு நிறுவனத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி நடப்போர் அழிந்து நரகத்திற்கு போவது நிச்சயம்  எனும் செய்தியை (ஓம்படைக்கிளவியாக) சொல்வதே இக்கல்வெட்டை எழுதியதன் நோக்கமாகும்.

இதில் வரும் ‘மூந்று த (ன்ம)’ என்ற சொல் கி.பி 12-13 ஆம் நூற்றாண்டில் வன்னியில் செயற்பட்ட தமிழ் வணிக கணங்களை அல்லது வேளக்காரர், இடங்கை, வலங்கை ஆகிய தமிழ் படை அமைப்புக்களை குறிக்கலாம்.

வல்லவராயன் என்ற பெயர் வன்னியில் ஆட்சி புரிந்த அரசனை அல்லது விநாயகக் (கணபதி) கடவுளைக் குறித்திருக்கலாம்.

தமிழகத்தில் கி.பி 11-12 ஆம் நூற்றாண்டு காலத்திற்குரிய கல்வெட்டுக்களில் வரும் வல்லவராயன் என்ற பெயர் விநாயகரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஆயினும் இக்கல்வெட்டின் எஞ்சிய பாகம் கிடைக்கப்பெறும் பட்சத்தில் ஊகமாகச் சொல்லப்பட்ட விளக்கம் உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தற்போது கிடைத்த இக்கல்வெட்டு, அங்குள்ள  காட்டுப்பகுதியில் ஒரு கட்டிட அழிபாடுகள் இடையே இருந்து எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனால் இக்கல்வெட்டின் மிகுதிப்பாகம் அக்கட்டிட அழிபாடுகள் இடையே இருக்குமென எதிர்பார்க்கலாம். தொடர்ந்தும் இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கல்வெட்டின் எஞ்சிய பாகமும், வேறு கல்வெட்டுக்களும் அங்கு கிடைக்க வாய்ப்புண்டு. எவ்வாறாயினும் வன்னிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது இடைக்காலத் தமிழ்க் கல்வெட்டென்ற வகையில் வன்னி பற்றிய ஆய்வில் இக்கல்வெட்டுக்கு தனி முக்கியத்துவம் உண்டு என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

நெடுங்கேணி சானுஜன்

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments