×

மாவீரர் வித்துடல் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்!

தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலேயே கட்டியெழுப்பப்பட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் தெரிவித்துள்ளார் என கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்தினம் தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது,
பெருமை கொள் இவ்வரலாற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே பதியப்பட்டுள்ளன. 2005 மாவீரர் நாளுக்கு வெளியான இப்பதிவை இன்றைய சூழலில் எடுத்து வருவதில் பெருமன நிறைவடைகின்றேன்.

தமிழரின் வீர வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு, மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டு, ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்து நிமிர்ந்தான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாகத் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக் கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எங்கள் மாவீரர்கள் என தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மாவீரர்களின் வித்துடல்களைப் புதைப்பதற்கு எடுத்த தீர்மானம், எமது இனத்தின் முதுபெரும் வரலாற்றை அடியொற்றியது.

புதைத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்தாது, விதைத்தல் என்ற சொல்லையும் உடலுக்கு வித்துடல் என்ற பதத்தையும், நாம் பயன்படுத்துகின்றோம்.
மாவீரர்கள் மீண்டும் எழுவார்கள், அவர்கள் சடப்பொருள் அல்லவென்ற அர்த்தத்தில் விதைத்தல் வித்துடல் என்பவை பயன்படுகின்றன.
11 மற்றும் 12 நூற்றாண்டுகளில் தோன்றிய தமிழ் வீரத்தையும், தேசியத்தையும் உணர்ந்தும் பரணி நூல்களில், களம் என்ற நெற்களத்தையும், போர்க்களத்தையும் குறிக்கும் சொல், பயன்பாட்டில் உள்ளது. ஜெயங்கொண்டார், பயிர் தொழிலையும், போர்த்தொழிலையும் கலிங்கத்துப் பரணியில் இணைத்துப் பாடியுள்ளார்.

விடுதலைப்போரின் ஆரம்பகாலகட்டத்தில், களப்பலியான புலிவீரர்களின் உடல்கள் புதைத்தல், எரித்தல் என்ற இரு வகையாகவும் சிறப்பிக்கப்பட்டன.
பெற்றாரின் மதநம்பிக்கை மற்றும் விருப்பத்திற்கு அமைவாகவும், போராளிகளின் வித்துடல்கள் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்தன. பொது மயானங்களில் அப்போது போராளிகளின் வித்துடல்கள் தகனம் செய்யப்பட்டன. அல்லது நல்லடக்கம் செய்யப்பட்டன.

போராட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வித்துடல்களை புதைக்கவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் போரிட்ட காலத்தில், தேசியத் தலைவரும் அவருடைய புலிப்படையினரும் மணலாறுக் காடுகளில் நிலையெடுத்திருந்தனர்.
களப்பலியான வீரர்களை தகனம் செய்தால், இந்திய இராணுவத்தினர் புகை எழும் திசையையும், புலிகளின் மறைவிடங்களையும் கண்டறிந்து விடுவார்கள், என்ற காரணத்திற்காக ஆங்காங்கே காடுகள் தோறும் வித்துடல்கள் புதைக்கப்பட்டன.
இப்போது மணலாற்றில் புதைக்கப்பட்ட புலிவீரர்களின் புனித எச்சங்கள், ஒரே இடத்தில் அதாவது மணலாறு துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மீண்டும் விதைக்கப்பட்டன. இத்துயிலும் இல்லத்திற்கு ஒரு தனிப்பட்ட வீரவரலாறு உண்டு என்பது வெளிப்படை.
போர் நடந்த இடங்களில் கைவிடப்பட்ட, அல்லது புதைக்கப்பட்ட வீரர்களின் எச்சங்களை, சாதகமான நிலை தோன்றிய பின்பு மீட்டெடுத்து, எடுத்துச்செல்லும் பாரம்பரியம் உலகில் உண்டு. துயிலும் இல்லம் என்ற சொற்றொடரை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கியுள்ளனர்.

புலிவீரர்களின் வித்துடல்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி இங்கு விதைக்கப்படுகின்றன. மாவீரர் பற்றிய புலிகளின் எண்ணக்கருவை இச்சொற்றொடர் உணர்த்துகிறது.
முதலாது துயிலும் இல்லம் கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில் போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்டதோடு எரிக்கப்பட்டும் வந்தன.
1991இல் வித்துடல்கள் எரிக்கப்டமாட்டாது, புதைக்கப்படும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுபற்றி 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏடு, மாவீரர்களைத் தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில், இப்போது மாவீரர்கள் புதைக்கப்பட்டு, இங்கே கல்லறைகள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக, எமது மண்ணில் நிலைபெறும். என்று கூறுகிறது.
இம்முடிவானது போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வித்துடல்கள் புதைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டபின், முதன்முதலான கப்டன் சோலையின் வித்துடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில், 14 ஜுலை 1991 ஆம் நாள் விதைக்கப்பட்டுள்ளது.

வித்துடல் கிடைக்காமல் போனால், நினைவுக்கற்கள் நாட்டும் வழமை, புலிகளாகிய எம்மிடம் உண்டு. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலும் இல்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலும் இல்லத்திலும், வைப்பது எமது இன்னுமொரு வழமையாகும்.
தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திலும், முள்ளியவளை துயிலும் இல்லத்திலும், விதைக்கப்பட்டுள்ளன.
அவர்களுடைய நினைவுக்கற்கள் தென் தமிழீழ துயிலும் இல்லங்களில் நிறுவப்பட்டுள்ளன. மாவீரர்களான லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது வித்துடல்கள் பாரிஸ் பொது மயானத்தில் விதைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நினைவுக்கற்கள் விசுவமடு துயிலும் இல்லத்தில் நிறுவப்பட்டன.
எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை 25. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 20000. (2005 மாவீரர் நாள் விபரம். இதன் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்காலத்தில் மேலும் துயிலும் இல்லங்கள் தற்காலிகமாக அமைந்ததும் எண்ணிக்கைகள் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ளவும்)
அடுத்து எமது நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். களப்பலியான மாவீரனின் வித்துடல் கிடைக்கப்பெற்றதும், அது ஓரிடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பதனிடப்பட்ட அந்த உடலுக்கு சீருடை அணியப்படுகிறது.

அதே நேரத்தில் அந்த மாவீரனுடைய விபரங்கள் உறுதிசெய்யப்பட்டு, அவனுக்கான பதவி நிலை வழங்கப்படுகின்றது. பின்பு வித்துடல் பேழையில் வைக்கப்படுகிறது. மாவீரர் பெயரும் பதவிநிலையும் பேழையில் பொறிக்கப்படுகின்றன.
மாவட்ட அரசியல்துறையூடாக வித்துடல் அடங்கிய பேழை இராணுவ மரியாமையுடன், பெற்றார் அல்லது உறவினர் வீட்டுற்கு எடுத்துவரப்படுகிறது. வீட்டு வணக்கம் முடிந்தபின், வீரவணக்க நிகழ்விற்காக வித்துடல் ஒரு பொது மண்டபம் அல்லது மாவீரர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
அதன்பின் வீரவணக்கக்கூட்டம் மண்டபத்தில் நடாத்தப்படுகிறது. முதற்கண் பொதுச்சுடர் ஏற்றப்படுகிறது. அடுத்ததாக ஈகைச்சுடர் பின்பு வித்துடலுக்கு மலர்மாலை அணிவிக்கப்படுகிறது. பெற்றார் மனைவி கணவன் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
நினைவுக்கல் நாட்டும் நிகழ்விற்கும், இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. நினைவுக்கல் நிகழ்வில் மாவீரனின் படம் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டபின் உரித்தாளரிடம் கொடுக்கப்படுகிறது. வித்துடலுக்கு மலர்மாலை, மலர்வணக்கம் செலுத்தப்பட்டபின், அகவணக்கம் செலுத்தப்படுகிறது. நினைவுரைகள் அடுத்ததாக நிகழ்த்தப்படுகின்றன.

இறுதியாக இராணுவ மரியாதையுடன் வித்துடல் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு மலர்வணக்கம் செய்யப்படுகிறது. அதன்பின் விசேட பீடத்தில் வைக்கப்பட்ட பேழையும், வித்துடலும் மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் வைக்கப்படுகிறது. அப்போது உறுதிமொழி வாசிக்கப்படுகிறது.
உறுதிமொழி வாசிக்கப்பட்ட பின், இராணுவ மரியாதை வேட்டு தீர்க்கப்படுகிறது. தாயகக்கனவுப் பாடல் ஒலித்தபின், அனைவரும் அகவணக்கம் செலுத்துகின்றனர்.

வித்துடல் புனித விதைகுழிக்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்ட்டு விதைக்கப்படுகிறது. அனைவரும் கைகளால் மண்ணெடுத்து, விதைகுழியில் போடுகின்றனர். நடுகல்லானால் மலர் வணக்கம் செய்கின்றனர்.
ஈழத்தமிழினத்தால், மாவீரர் நாளாக் கொண்டாடப்படும் நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்போரில் முதல் களச்சாவடைந்த, எமது இயக்க வேங்கை லெப். சங்கர் (சத்தியநாதன்) நினைவாக அமைகிறது.
1989 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாட்தொட்டு, நாம் ஆண்டு தோறும் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றோம். முதலாவது மாவீரனின் வீரச்சாவு தான், அனைத்து மாவீரர்களின் நாளாக கொண்டாடப்படுவதால், அதற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு.
தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வு என்ற சிறப்பு மாவீரர் நாளுக்கு உண்டு.

1990ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை, நவம்பர் 21 தொட்டு 27 வரையிலான ஒருவாரம் மாவீரர் வாரமாக சிறப்பிக்கப்பட்டது.
1995ஆம் ஆண்டிலிருந்து, நவம்பர் 25, 26, 27 ஆம் நாட்கள் மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. 1994ஆம் ஆண்டு தொட்டு, மாவீரர் நாள் நள்ளிரவில் இருந்து, மாலை 6.05 மணிக்கு மாற்றப்பட்டது.

முதல் மாவீரன் லெப். சங்கர் வீரச்சாவடைந்த நேரமும் அதுவாகும். இதற்கு முன் தலைவரின் மாவீரர் நாள் உரை அமையும். மாவீரர் உரை முடிந்ததும் 6.05 மணிக்கு தமிழீழம் எங்கணும் அனைத்துத் தேவாலய மணிகளும் ஒரு நிமிடம் மணியெழுப்பும்.
அதன் பின் அகவணக்கம் செலுத்தப்படும். மாவீரர் துயிலும் இல்லங்கள் யாவற்றிலும் ஒவ்வொரு கல்லறைக்கும் நடுகல்லுக்கும் முன்னால் பெற்றார் உரித்தாளர்கள் போன்றோரால் சுடர் ஏற்றப்படும். துயிலும் இல்லத்தின் நடுமேடையிலும் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்படும்.
மாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கப்படும். முதலாவதாக இது 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை.

மொழியாகி எங்கள் மூச்சாகி
முடிசூடும் தமிழ் மீது உறுதி
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே
உங்ளைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
வல்லமை தாருமொன்றெண்ணி
உம்வாசலில் வந்துமே வணங்குகின்றோம்
உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது எங்கள்
தாயகம் வரும்வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரைநிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் எந்த
நிலைவரும் போதிலும் நிமிர்வோம் உங்கள்
நினைவுடன் வென்றிடுவோம்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

மாவீரர் துயிலும் இல்ல விபரம்.

  1. திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
  2. திருகோணமலை வெளியகுளம் மாவீரர் துயிலும்ல்லம்
  3. திருகோணமலை தியாகவனம் மாவீரர்துயிலுமில்லம்
  4. திருகோணமலை உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்
  5. மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம்
  6. மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்
  7. மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்
  8. அம்பாறை உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம்
  9. முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்
  10. விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்
  11. துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
  12. வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
  13. அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்
  14. மணலாறு புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்
  15. மணலாறு உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்
  16. களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்
  17. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
  18. முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்
  19. வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்
  20. ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்
  21. பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்
  22. யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்
  23. தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்
  24. வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
  25. தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம்
  26. வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
  27. மன்னார் முள்ளிக்குளம் மாவீரர் கல்லறைகள்

இறுதியுத்தத்தில்

1.சுதந்திரபுர மாவீரர் துயிலுமில்லம்
2.தர்மபுரம் மாவீரர் துயிலுமில்லம்
3.இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம்
4.பச்சைபுல்வெளி மாவீரர் துயிலுமில்லம்
5.முள்ளிவாய்க்கால் கிழக்கு மாவீரர் துயிலுமில்லம்
6.முள்ளிவாய்க்கால் மேற்கு மாவீரர் துயிலுமில்லம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments