×

ஊர் நோக்கி – மல்லாவி

மல்லாவி என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.   இது மாங்குளத்திலிருந்து 13 கிலோ மீற்றர்கள் (8.1மைல்) தூரத்திலும் துணுக்காயிலிருந்து   4 கிலோ மீற்றர்கள் (2.5 மைல்) தூரத்திலும்அமைந்துள்ளது.

இது சுமார் 9000 மக்கள் தொகையை கொண்டது. இங்கு சிறந்த கல்வி வசதிகளும், மருத்துவ வசதிகளும் உண்டு. இங்குள்ள பாடசாலைகளில் மல்லாவி மத்திய கல்லூரி மற்றும் யோகபுரம் மகா வித்தியாலயம் என்பன பிரசித்தி பெற்ற பாடசாலைகளைக்  கொண்ட ஒரு பிரதேசமாகும். பல இடப் பெயர்வுகளை சந்தித்த மக்கள் தஞ்சமடைந்த இடம் மல்லாவி வந்தவருக்கு எல்லாம் பசியாற்றி இடம் கொடுத்து வாழவைத்த மல்லாவி ஈழப் போரியல் வரலாற்றில் முக்கியமான இடமாகும். ஆலம்குளம் துயிலுமில்லம் போராட்ட வாழ்வின் அடையாளமாகும்.

வயல்களையும், குளங்களையும் பயிர்நிலங்களையும்,  தோப்புக்களையும் தன்னகத்தே கொண்ட மல்லாவி முல்லை நிலப் பூமியாக காடுககளைத் தன் அரணாக வைத்துள்ளது.

ஈழவள நாட்டின் மாவீரர்களையும், போரளிகளையும், கல்வியாளர்களையும் உழைப்பாளிகளையும் தன்னகத்தே கொண்ட மாவீர பூமி மல்லாவி. ஆனால் எல்லாவற்றுக்கும் உயிர்நாடி பாலியாறுதான். பாலியாற்றுத் தண்ணீரைத் தேக்கியே வவுனிக்குளம் கட்டப்பட்டது. வவுனிக்குளத்தை வைத்தே மல்லாவி வவுனிக்குளம், அனிஞ்சியன் குளம், யோகபுரம் ஒட்டங்குளம், துணுக்காய் எள்ளறுத்த காடு, தேறாங்கண்டல் எல்லாம் உருவாகின. வடகாட்டுக்கு மேற்கே வவுனிக்குளம் இருந்தது. சோழ மன்னர்கள் ஒரு காலம் கட்டிய குளம் என்று சொல்லப்படும். இந்தக் குளத்தையே பின்னர் கடந்த நூற்றாண்டில் பெருப்பித்துக்கட்டி வவுனிக்குளம், மல்லாவி, துணுக்காய் குடியேற்றத்திட்டங்களைச் செய்தது அரசாங்கம்.

யாழ்ப்பாணத்தவர்களே இந்தப் பகுதிகளில் குடியேறினார்கள். அதிலும் கூடுதலானவர்கள் நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள். மல்லாவிக்கு வந்த நெடுந்தீவு வாசிகள் ஊரிலிருந்து மாடுகளையும் ஆடுகளையும் கடல் வழியாக படகுகளில் கொண்டு வந்து சேர்த்தனர். பட்டிகள் பெருகின.

குடியேறியவர்கள் மல்லாவியிலும், துணுக்காயிலும், வவுனிக்குளத்திலும், ஒட்டங்குளத்திலும் உழுந்து போட்டார்கள். மிளகாய்க் கன்றுகளை நட்டனர். எள் விதைத்தனர். உழுந்தும், எள்ளும் மல்லாவியின் முதலாவது எழுச்சி என்பது உழுந்தினால் உண்டானதே.

மல்லாவி புதிய குடியேற்றம். ஆனால் மல்லாவியைச் சுற்றியிருக்கும் பனங்காமம், பாண்டியன்குளம், மாந்தை, தென்னியன்குளம், நட்டான்கண்டல், வலைஞன்கட்டு எல்லாம் பழைய குடியிருப்புகள். அதிலும் பனங்காமம் தனியொரு இராச்சியப்பிரிவாகவே இருந்திருக்கிறது. கைலைவன்னியன் கடைசியாக ஆண்ட இடம் என்பார்கள்.

இன்னும் அங்கே பழைய தொல் எச்சங்கள் அங்குமிங்குமாக. கருங்கற் தூண்களும் சிதைந்த கட்டிடங்களின் அடித்தளங்களுமாக பனங்காமத்தைப் போலத்தான் தென்னியன்குளமும். தென்னியன் என்ற மன்னனால் கட்டப்பட்ட குளத்தை மையமாகக் கொண்டே அங்குள்ள குடியிருப்பு உள்ளதென்பது நம்பிக்கையாகும்.

வட்டக்கச்சி வினோத் –  உசாத்துணை இணையக் கட்டுரை இணையம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments