×

ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர்

விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று

விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.

இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின் மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர். பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை.)

சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின் பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம். ஓயாத அலைகள் ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தள பாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம்.

நேரடியாக மற்றப் பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித் தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.

இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்ப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்து. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.

திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணிநேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முலலைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.

கடலில் ரணவிறு என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது.

3 நாள் கடும் சண்டையின் பின் முல்லைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்துகொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டுவிட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடியாமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.

எங்கே ஓடுவது?

திரும்பவும் கடல்வழியால் தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.

தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள் மூலம் தான் சிங்களத்தின் பல பொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.

அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற் பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன.)

இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.

இன்று “கிளிநொச்சி” போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முலலைத்தீவுதான்.

முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த வருட சுனாமி அனர்த்தத்தின்போது.

இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.

ஓயாத அலைகள் என்ற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).

கைப்பற்றப்பட்ட ஆட்லறியுடன் போராளிகள்

கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.

 

தாக்குதல்

1996 ஜூலை 17ம் நாள் இரவு முடிந்து 18ம் நாள் அதிகாலை இப்படைத்தளம் மீதான தாக்குதலை பலமுனைகளில் இருந்து விடுதலைப்புலிகள் தொடுத்தனர். தரைவழியாக ஏனைய படைமுகாம்களோடு தொடர்பற்ற இத்தளத்திலிருந்து படையினரால் உதவிகள் பெற முடியவில்லை. மூன்றுநாட்களுக்குள் படைமுகாம் முற்றாக புலிகளிடம் வீழ்ச்சியுற்றது. அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஆட்லறிப் பீரங்கிகள் புலிகளின் கைகளுக்கு வந்ததும் இச்சமரில்தான். முல்லைத்தீவுப் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த 122மிமீ ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

தரையிறக்கமும் எதிர்ப்புச்சமரும்

முல்லைத்தீவுப் படைத்தளம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானபோது படையினரையும் தளத்தையும் காப்பாற்றவென சிறிலங்கா அரசபடையால் தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தளத்திலிருந்து தெற்குப் பக்கமாக மூன்று மைல்கள் தொலைவில் அளம்பில் என்ற கிராமத்தில் கடல்வழியாக மிகப்பெரிய தரையிறக்கமொன்றை இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து மேற்கொண்டன. இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத்தரையிறக்கத்துக்கு ”திரிவிட பகர” என்று அரசபடையால் பெயர் சூட்டப்பட்டது.

தரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து புலிகளின் அணிகள் சமர் புரிந்தன. சிலநாட்களாக, தரையிறங்கிய படையிரை முன்னேறவிடாது மறித்துவைத்திருந்த புலிகள், இறுதியில் முற்றாக அச்சமரை வென்றனர். அரசபடை, தரையிறங்கியவர்களில் மிகுதிப்படையினரை மீளப்பெற்றுக்கொண்டதோடு ‘ஓயாத அலைகள் – ஒன்று’ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

தரையிறக்கத்தின் போது கடலில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமி்டையில் நடைபெற்ற சமரில் ‘ரணவிறு’ என்ற தாக்குதல் கலமொன்று கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இக்கலத்தை மூழ்கடித்த தாக்குதலில்

மேஜர் கண்ணபிரான்

மேஜர் செல்லப்பிள்ள

மேஜர் பார்த்தீபன்

மேஜர் மிதுபாலன்

மேஜர் பதுமன்

மேஜர் சுடரொளி

கப்டன் சயந்தன்

ஆகியோருட்பட ஏழு கடற்கரும்புலிகள் வீரசாவடைந்தனர்.

இப்படை முகாம் கைப்பற்றப்பட்டதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுள் கொண்டுவந்தனர்.

இழப்பு விவரங்களும் ஊடகத் தணிக்கையும்

இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பலியானதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்தன.
ஆனால் அரசதரப்பு அதை மறுத்ததோடு மிகக் குறைந்தளவு படையினரே கொல்லப்பட்டதாகச் சொன்னது. அத்தோடு ஆட்லறிகள் எவையும் புலிகளால் கைப்பற்றப்படவில்லையென அப்போதையை பிரதிப் பாதுகாப்பமைச்சரும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதால் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டவருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்த தெரிவித்திருந்தார்.

புலிகள் பலநூறு சடலங்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அரசதரப்புக்குக் கையளித்தபோதும் அரசு அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிலவற்றை மட்டும் பெற்றுக்கொண்டு, ஏனையவை தமது இராணுவத்தினருடையவையல்ல என்று மறுப்புத் தெரிவித்தது.
பலநூறு சடலங்களை வன்னியில் பொதுமக்களும் புலிகளும் சேர்ந்து தீமூட்டினர். கொக்காவில் என்னுமிடத்தில் 600 வரையான படையினரின் சடலங்கள் ஒன்றாக தீமூட்டப்பட்டன.

”முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது வீரவணக்கம் “

ஓயாத அலைகள் 01 முல்லை வெற்றிச் சமர்

யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின் தடையமைப்பினுள் வெடித்த டோப்பிட்டோவின் வெடியோசையோடு முடிவுக்கு வந்தது.

“ஓயாத அலைகள்” என்று பெயரிடப்பட்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், இதன் பெயரிற்கேற்ப பிற்பட்ட காலத்தில் “ஓயாத அலைகள்” என்ற பெயரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வெற்றிகர வலிந்த தாக்குதல்களிற்கான முதற்படியாக அமைந்து “ஓயாத அலைகள் – 01” எனக் குறித்துக் காட்டவேண்டிய தாக்குதலுமானது.

முதற்றரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டதும் முழுமையான கடல்வழி ஆதரவைக் கொண்டதும் தன்னகத்தே பலமான மோட்டார், ஆட்டிலறிச் சூட்டாதரவைக் கொண்டதுமான முல்லைப் படைத்தளம் விடுதலைப் புலிகளின் 30 மணிநேரத் தாக்குதலின் பின் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இத்தாக்குதல் விடுதலைப் புலிகளின் மற்றுமொரு வளர்ச்சியைக் காட்டும் தாக்குதலாகவும் அமைந்தது.

சிங்களக் கடற்படையின் கடல்வழி ஆதரவைத் தடுக்கும் வலிமையை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை வெளிக்காட்டும் வகையில் முல்லைத்தளத்தினுள் கடல் வழித் தரையிறக்கம் மேற்கொள்ளப்படா வண்ணம் தடுத்த கடற்புலிகள் முல்லைத் தளத்திற்கு தெற்கே மூன்று கிலோமீற்றர் தொலைவில் அளம்பில் பகுதியில் வான்வழியால் தரையிறக்கப்பட்ட படைகள் கடல்வழியால் வலுவூட்டப்படுவதையும் தடுத்து நின்றனர்.

இவ்வாறு சிங்களக் கடற்படைக்குச் சவால்விடும் வகையில் கடலில் புலிகள் பலம் பெற்றமையையும் இத்தாக்குதலால் உலகம் கண்டுகொண்டது.

முல்லைப் படைத்தளம்

வன்னிப்பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் கடற்கரைப் பட்டினமான முல்லைத்தீவுப் பட்டினத்தை வன்கவர்ந்து அதில் அமைக்கப்பட்டிருந்ததுதான் முல்லைப் படைத்தளம். ஆரம்பத்தில் கடல்வழிக் கடத்தலைத் தடுப்பதற்காக முல்லைப்பட்டினத்தின் ஒதுக்குப்புறமாக சிறு கூடாரமொன்றில் பத்திற்கும் குறைவான சிங்களப் படையினர் தங்கியிருந்தனர்.

காலப்போக்கில் அத்தங்ககம் விரிவாக்கப்பட்டு வந்தது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அத்தங்ககத்தைத் தமது முற்றுகையின்கீழ் கொண்டு வந்ததையடுத்து “கடற்காற்று” – “Operation SEA BREEZE” – எனும் படை நடவடிக்கை மூலம் தமது படையினரை முற்றுகையில் இருந்து மீட்ட சிங்களப் படைகள் அங்கு பலமான படைத்தளத்தை அமைத்துக் கொண்டன.

அத்துடன் 1992 ஆம் ஆண்டு சத்பல – “Operation SATHBALA” – என்ற பெயரில்; மணலாற்றை நோக்கிய படை நகர்வை மேற்கொண்டு அளம்பில் வரையான பிரதேசத்தை வன்கவர்ந்த சிங்களப் படைகள் அதற்கு அப்பால் நகர முடியாது திணறியதுடன், முன்னகர்ந்த படைகளும் சிறிது காலத்தில் முல்லைத் தளத்திற்கே பின்னகர்ந்தன. இவ்வாறு தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வந்த முல்லைப் படைத்தளம் ”ஓயாத அலைகள் – 01” தாக்குதல் நடைபெற்றபோது ஒரு கூட்டுப்படைத்தளமாக விளங்கியது.

“ஓயாத அலைகள் – 01” தாக்குதல் நடைபெற்றபோது 25 ஆவது பிரிகேட் கூட்டுப்படைத்தளமாக விளங்கிய முல்லைப் படைத்தளம் 1407 படையினரைக் கொண்டிருந்தது. வெளிச்சுற்று, உட்சுற்று என இரு காப்புநிலை வரிசைகளைக் கொண்டிருந்த இத்தளம் 2900 மீ. நீளமும் 1500 மீ. அகலமும் கொண்டிருந்தது. இதன் வெளிச்சுற்றுக் காப்பு வரிசை 8500 மீற்றர் சுற்றளவைக் கொண்டதாக இருந்தது.

முல்லைப்பட்டினத்தை மையமாகக் கொண்டு படைத்தளத்தின் உட்சுற்றுக் காப்பு வரிசை அமைக்கப்பட்டு அதனுள் ஆட்டிலறி, மோட்டார் ஏவுதளம், பிரிகேட் தலைமையகம், பட்டாலியன் தலைமையகங்கள், தொலைத்தொடர்புக் கோபுரம், உலங்கூர்தி இறங்குதளம் போன்ற தளத்தின் முதன்மை அமைப்புக்கள் காணப்பட்டன.

வெளிச்சுற்றுக் காப்பு வரிசையானது கிழக்கில் இந்து சமுத்திரத்தையும் தெற்கில் இறால் குளம் மற்றும் பரந்த வெளிகளையும் மேற்கில் நந்திக் கடல் நீரேரியையும் வடக்கில் வெட்டு வாய்க்கால் தொடுவாயையும் எல்லைகளாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்தத் தரையமைப்பானது காப்பு வரிசையமைப்பிற்கு மிகவும் சாதகமானதாக விளங்கியது.

இந்தக் காப்பு வரிசையிலே உயர்ந்த மண்ணணை அமைக்கப்பட்டு அதிலே அண்ணளவாக 40 மீற்றரிற்கு ஒரு காப்பரண், தேவைப்படும் இடங்களில் உயரமாக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கோபுரங்கள் என இடையறாத கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், தளத்தின் உட்புறத்தை கண்காணிக்க முடியாதவாறு மண்ணணையின் மேல் மறைப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த மண்ணணையின் வெளிப்புறத்தே பல நிரைகளில் அமைக்கப்பட்டிருந்த தடையமைப்புகள், கண்ணி வயல்கள், இரவுக் கண்காணிப்பு ஏற்பாடாக ஒலி அவதானிப்பு நிலைகள் என உயர்காப்பு ஏற்பாடுகளை இத்தளம் கொண்டிருந்தது.

வேவு

இத்தளம் விடுதலைப் புலிகளின் பொதுவான வேவு நடவடிக்கைக்கு உட்பட்டு இருந்தது ஆயினும் விடுதலைப் புலிகளின் இயங்குதளம் வன்னிக்கு நகர்ந்தபின் தேசியத் தலைவர் அவர்கள் இத்தளத்தைத் தாக்குவதற்கான சிறப்பு வேவு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணித்தமைக்கு இணங்கச் சிறப்புத் தளபதி ஒருவரின் ஒருங்கிணைப்பின்கீழ் முன்னர் பொதுவான வேவில் ஈடுபட்ட போராளிகளையும் இணைத்துக் கொண்டு முனைப்பான வேவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கடல் வழியாலும் தரைவழியாலும் மிகவும் விரிவான வேவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிகுந்த இடர்களின் மத்தியில் வேவு வீரர்கள் இரவைப் பகலாக்கி முல்லைப் படைத்தளத்தின் அமைப்பை அறிந்தார்கள்.

தாக்குதல் திட்டம்

ஓயாத அலைகள் – 01 தாக்குதல் திட்டமானது அனைத்துச் செயற்பாடுகளும் நடைமுறையில் ஒத்திகை பார்க்கப்பட்டு மிகவும் துல்லியமாகத் தீட்டப்பட்டது. எடுத்துக்காட்டாக எதிரித்தளத்தின் வெளிச்சுற்றுக் காப்பு வரிசையின் கொலை வலயத்தினுள் அணிகள் நகர்த்தப்பட்டே நகர்விற்கான நேரங்கள் பெறப்பட்டு நேரத்திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.

தாக்குதல் திட்டமானது பின்வரும் படிமுறைகளைக் கொண்டிருந்தது

  • எதிரியின் வெளிச்சுற்றுக் காப்புவரிசையில் ஊடுருவல் பாதைகளை உருவாக்குதல்.
  • அப்பாதையினூடாக ஊடுருவும் அணிகள் வெளிச்சுற்றுக் காப்பு வரிசையிலுள்ள காப்பரண்களைக் கைப்பற்றுதல்.
  • ஊடுருவல் பாதைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட காப்பு வரிசையிலுள்ள சாதகமான பாதைகளால் உள்நுழையும் அணிகள் பிரதேசத் தேடியழிப்பை மேற்கொண்டு வெளிச்சுற்றுக்காப்பு வரிசைக்கும் தளத்தின் மையப் பகுதிக்கும் இடையேயான பிரதேசத்தைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதல்.
  • தாக்குதல் ஆரம்பித்த உடனேயே தளத்தின் மையப்பகுதி நோக்கி நகரும் அணிகள் தளத்தின் மையப்பகுதியைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருதல்.
  • கடலூடாகவும் கடற்கரையில் அதற்குச் சமாந்தரமாகவும் ஊடுருவும் அணிகள் கடற்கரையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து தளத்திற்கான கடல்வழி ஆதரவைத் துண்டித்தல்.

இதனைத் தவிரப் பின்வரும் பணிகளும் திட்டமிடப்பட்டன

  • தளத்திற்கு மணலாற்றுப் பிரதேசத்தி லிருந்து தரைவழி ஆதரவு வழங்கப்படுதலைத் தடுத்தல்.
  • தளத்திலிருந்து மணலாற்றுப் பிரதேசத்தை நோக்கிப் படையினர் பின்னகர் வதைத் தடுத்தல்.
  • தளத்தை அண்டிய பிரதேசங்களில் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டுத் தளம் வலுவட்டப்படுவதைத் தடுத்தல்.

ஒட்டுமொத்தத்தில் முழுமையான வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக

  • துல்லியமானதும் விரிவானதுமான வேவு நடவடிக்கை.
  • விரிவானதும் நுணுக்கமானதுமான தாக்குதல் திட்டம்.
  • துணிவுமிக்கதும் புதுமையானதுமான அரை மரபுவழி (Semi-conventional) தாக்குதல் உத்திகள்.
  • விரிவான பின்னணி ஏற்பாடுகள்
  • துல்லியமான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட விரிவான தொடர் ஒத்திகைப் பயிற்சிகள்.
  • இரகசியக் காப்பு.
  • ஏமாற்று நடவடிக்கைகள்.
  • எதிரி எதிர்பார்க்காத வகையிலான மறைமுகச் சூட்டுப் படைக்கலங்களின் வினைத் திறனான பயன்பாடு.
  • போதியளவான ஆளணி, படைக்கல ஒதுக்கீடு.

என்பவற்றுடன் ஓயாத அலைகள் – 01 தாக்குதல் திட்டமிடப்பட்டது.

தாக்குதல்

திட்டத்திற்கமைய தமது குறியிலக்குப் பிரதேசங்களினுள் ஊடுருவிய தாக்குதல் அணிகள் 18 ஆம் நாளன்று காலையில் தளத்தின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தன. குறிப்பாகக் கடற்கரை முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. படையினர் 6 ஆவது விஜயபாகு படையணியின் தலைமையகம் அமைந்திருந்த பகுதிக்குள் முடக்கப்பட்டனர். இவ்வாறு முடக்கப்பட்ட படையினர் தமக்கு அண்மையிலுள்ள கடற்கரையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

கடற்புலிகளின் பெரும் எதிர்ச்சமர்

இதேசமயம் சிறிலங்காக் கடற்படை தனது உச்சத்திறனைப் பயன்படுத்தி முல்லைப் படைத்தளத்தின் கடற்கரையைச் சென்றடைய மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டன. 15 மணித்தியாலங்களாகச் சிங்களக் கடற்படையின் உச்சப் பலத்தையும் சிங்கள வான்படையின் வான்கலங்களையும் எதிர்கொண்ட வண்ணம் கடற்புலிகள் வீரத்துடன் எதிர்ச்சமர் புரிந்தனர்.

வலுவூட்டலிற்கான தரையிறக்கம்

முல்லைத் தளத்தின் கடற்கரையில் ஒரு கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமற்றுப் போகவே முல்லைத் தளத்திற்குத் தெற்கே 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிலாவத்தைப் பிரதேசத்தில் 18 ஆம் நாளன்று மாலையில் ஒரு வான்வழித் தரையிறக்கத்தைச் சிங்களப் படைகள் மேற்கொண்டன. திரிவிட பகர – என்று பெயர் சூட்டி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் கிபிர் மற்றும் புக்காரா குண்டுவீச்சு வானூர்திகள், MI-24 தாக்குதல் உலங்கூர்திகளின் தாக்குதல் ஆதரவுடன் முதற்கட்டமாக MI-17 உலங்கூர்திகளில் கொண்டுவரப்பட்ட கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டனர்.

இவ்வாறு தரையிறக்கப்பட்ட கொமாண்டோக்களைக் கொண்டு பாதுகாப்பான தரையிறக்க வலயம் ஒன்றை உருவாக்கியபின் கடல்வழித் தரையிறக்கத்தை மேற்கொள்வதே படையினர் நோக்கமாக இருந்தது. 18 ஆம் நாளன்று அவர்களின் அந்த நோக்கம் ஈடேறக் கடற்புலிகள் அனுமதிக்கவில்லை. அத்துடன் இவ்வாறான தரையிறக்கம் ஒன்றை எதிர்பார்த்திருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் தரையிறங்கிய கொமாண்டோக்களை 18 ஆம் நாள் இரவே வளைத்துக்கொண்டன.

தளம் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது

இதேசமயம் 18 ஆம் நாள் மாலையில் முல்லைத் தளத்தினுள் முடங்கிப் போயிருந்த படையினர் மீது செறிவான நேரடி வன்கலச் சூட்டாதரவுடன் நெருங்கித் தாக்கிய விடுதலைப் புலிகளால் படையினர் அனைவரும் அழிக்கப்பட்டு அன்றிரவே படைத்தளம் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

ரணவிரு மூழ்கடிக்கப்பட்டது

19 ஆம் நாளன்று சிலாவத்தையில் தரையிறங்கிய படையினர் கடல்வழியால் வலுவட்டப் படுவதற்குக் கடற்புலிகள் அனுமதிக்கவில்லை. அன்று மாலை 4.30 மணியளவில் தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த சங்காய் 3 வகைப் பீரங்கிப் படகான ரணவிரு கடற்கரும்புலிகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. அன்றும் சிங்களப் படைகளிற்கு வான்வழித் தரையிறக்கமே சாத்தியமானது. அதேசமயம் தரையிறங்கிய படையினர் மீதான விடுதலைப் புலிகளின் நெருங்கித் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் ஆரம்பமாகின.

“MI-24 சேதமாக்கப்பட்டது

20 ஆம் நாளன்றும் கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமற்றுப்போக சிங்களப் படைகளின் ஒரேயொரு நம்பிக்கையாக இருந்த வான்வழித் தரையிறக்கத்திற்கும் ஆபத்து ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் எறிகணை வடிவில் வந்த அந்த ஆபத்து தரையிறக்க வந்த ஒரு MI-17 உலங்கூர்தியைச் சேதமாக்க அன்று வான்வழித் தரையிறக்கமும் சாத்தியமற்றுப் போனது.

புலிகளின் இறுக்கமான முற்றுகைக்குள் தரையிறக்கப்படைகள்

21 ஆம் நாளன்று பலத்த முயற்சியின் பின் ஒரு கடல்வழித் தரையிறக்கத்தைச் சிங்களக் கடற்படை மேற்கொண்டது. இவ்வாறு படையினர் தரையிறக்கப்பட்டு வலுவூட்டல் மேற்கொள்ளப்பட்டபோதும் அந்தப் படையினரால் புலிகளின் முற்றுகையை உடைத்துக்கொண்டு நகரமுடியவில்லை.

தரையிறக்க முயற்சிகள் பயனற்றுப் போயின

22 ஆம் நாளன்றும் தரையிறக்க முயற்சிகள் சாத்தியமாகவில்லையாயினும் சிங்களப் படைகள் தமது தரையிறக்க முயற்சிகளைத் தொடர்ந்தன. 23 ஆம் நாளன்று தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த தரையிறங்கு கலமொன்று புலிகளின் எறிகணையில் சேதமடைந்தது. அத்துடன் கடற்கரும்புலிகளின் படகொன்று நெருங்கிச் சென்று மோத முன்னர் வெடித்ததால் மற்றொரு தரையிறங்கு கலம் சேதங்களுடன் தப்பித்துக் கொண்டது. இதனால் அன்றும் தரையிறக்கம் சாத்தியமாகவில்லை.

மீட்கவந்த படைகள் பெரும் அவலத்தின் மத்தியில் மீட்டெடுக்கப்பட்டன

25 ஆம் நாளன்று கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமான போதும் புலிகளின் இறுக்கமான முற்றுகையை உடைத்துத் தரையிறங்கிய படைகளால் ஒரு அங்குலமேனும் முன்னகர முடியவில்லை. அத்துடன் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் தரையிறங்கிய படைகள் இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தன.

இந்நிலையில் 26 ஆம் நாளன்று தரையிறங்கிய படைகளை மீட்டுச் செல்லவந்த தரையிறங்கு கலம் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் சேதங்களுடன் மயிரிழையில் தப்பித்துக் கொண்டது. இந்நிலையில் தரையிறங்கு கலம் மூலம் மிகுந்த இடர்களின் மத்தியில் தரையிறங்கிய படைகள் மீட்கப்பட்டன.

தரையிறங்கிய படைகளைக் களமுனையில் வழிநடாத்திய லெப்.கேணல். பஸ்லி லாபிர் இந்நடவடிக்கையில் கொல்லப்பட்டார். கேணல் லோரன்ஸ் பெர்னாண்டோ காயமடைந்தார். தரையிறங்கிய படையினரில் 75 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் மீட்பின்போது தப்பித்து ஓடிய படையினர் கடலில் எறிந்த 100 இற்கும் அதிகமான சுடுகலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.

“1200 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர்

தரையிறக்கப்பட்ட படைகள் உட்பட 1,200 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். இரண்டு 122 மி.மீ ஆட்டிலறிப் பீரங்கிகள் உட்பட பெருந்தொகையான படைக்கலங்கள், அவற்றிற்கான வெடிபொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டன. இவை அனைத்திற்கும் மேலாகத் தமிழர் தம் பாரம்பரியப் பட்டினமாம் முல்லைப்பட்டினம் மீட்டெடுக்கப்பட்டது.

இந்த வெற்றிக்காக ஏழு கடற்கரும்புலிகள் உட்பட 314 மாவீரர்கள் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து மாவீர்களானார்கள்.

 அலைகள் ஓயாது

ஓயாத அலைகள் – 01 நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டமையானது புலிகளின் புதிய பரிணாமத்தைப் பறைசாற்றியது. இந்த வெற்றியினால் புலிகளிற்குச் சாதகமான பல விளைவுகள் ஏற்பட்டன. யாழ். குடாவைச் சிங்களப் படைகள் வன்கவர்ந்தபோது வன்னிக்கு இடம்பெயர்ந்து அல்லற்பட்டு சோர்வுற்றிருந்த மக்கள் இந்த வெற்றியினால் புத்துணர்ச்சி பெற்றனர்.

புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற மாயை தகர்த்தெறியப்பட்டது. இவ்வாறு ஆரம்பித்த ஓயாத அலைகள் பின்னர் 02, 03 என ஓங்கியடித்துத் தமிழர்களினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பலத்தைப் பகைவனிற்கும் அனைத்துலகிற்கும் வெளிக்காட்டியது கடந்த கால வரலாறு.

நமது மண் விடியும் வரை அலைகள் ஓயாது.

– தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையம் –

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

 

 

ஓயாத அலைகள் 1

010. Oyatha Alaikal
046. Oyatha Alaikal MULLAI 01

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments