×

“ஓயாத அலைகள் 3” போரியல் ஆய்வு – கட்டுரை 1

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3” (கட்டம் 3,4)

போரியல் ஆய்வு – கட்டுரை 1

உலக போரியல் வரலாற்று சாதனைகளில் கட்டாயம் இடம்பெறவேண்டிய ஒன்றுதான் 1999-2000 இல் விடுதலை புலிகள் நடத்திய ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பு மீதான ஓயாத அலைகள் 3 சமர்.

இந்த சமர் ஏன் உலக போரியல் வரலாற்று சாதனைகளில் இடம்பெறவேண்டிய முக்கியமானதொன்று என்பதை போரியல் ஆய்வு பார்வையினூடாக  விளக்க முனைவதே இந்த பதிவின் நோக்கம்.

இந்த பதிவை பகுதிகளாக பிரித்திருக்கிறேன்.

விடுதலை புலிகள் ஓயாத அலைகள் 3 ஐ தொடங்குவதற்கு முன்பிருந்த போர்கள நிலவரத்தை மிக சுருக்கமாக விளக்கி பகுதி 1 இல் தந்திருக்கிறேன்.

விடுதலை புலிகளின்  ஓயாத அலைகள்-3 (கட்டம் 3 ,கட்டம் 4 ) நடந்த காலப்பகுதியான 1999 டிசம்பர் – 2000 ஏப்ரல் வரையிலான அந்த நான்கு மாத காலப்பகுதியில், புலிகளின் மிக முக்கிய போரியல் நகர்வுகளை மட்டும் வரைபடமாக, அந்த முக்கிய நகர்வுகளை அம்புகுறிகளாக குறித்து காலவரிசைப்படி (chronological) அடுக்கி பகுதி 2 இல் தந்திருக்கிறேன்.

இந்த நான்கு மாத காலப்பகுதியில் நடந்த சகல போரியல் நகர்வுகளையுமே உள்ளடக்குவது மிக சிரமமான காரியம். அத்துடன் பதிவு மிகவும் நீண்டுவிடும். அதனாலேயே மிக முக்கிய நகர்வுகளை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.

பகுதி 2 இல் தந்திருக்கும் விடுதலை புலிகளின் போரியல் நகர்வுகளை, போரியல் ஆய்வு பார்வையினூடாக அணுகுவதை பகுதி 3 இல் தந்திருக்கிறேன்.

இந்த பதிவில் விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 இன் கட்டம் 3, கட்டம் 4 ஐ மட்டுமே ஆய்வுக்காக எடுத்துகொண்டிருக்கிறேன். இந்த சொல்லாடாலை பதிவு நெடுக பயன்படுத்தவேண்டி இருப்பதால் அதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக பயன்படுத்தியிருக்கிறேன். ஓயாத அலைகள் 3 இன் ஆங்கில மொழிபெயர்ப்பான  Unceasing Waves 3 ( Phase 3, Phase 4) என்பதை (UW3 -P3,P4) என சுருக்கமாக பயன்படுத்தியிருக்கிறேன்.

பகுதி 

இலங்கையின் நிலப்பரப்பை அவதானித்தால் யாழ்குடாவும் (தலைபகுதி) இலங்கையின் எஞ்சிய பகுதியும் ( உடல் பகுதி) ஒரு சிறு நிலப்பரப்பினூடாகவே ( கழுத்து பகுதி) தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும். அந்த கழுத்துபகுதியில்தான் ஆனையிறவு பெருந்தளம் இருந்தது.

யாழ்குடா என்பது வலிகாமம், வடமராட்சி , தென்மராட்சி எனும் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. (படம் 3)

விடுதலை புலிகள் இரண்டாம் ஈழப்போரில் ( 1990-1994) தங்களது படைப்பிரிவுகளை மரபு போர் (conventional war) செய்யும் படைகளாக மாற்ற ஆரம்பித்த போது , இந்த ஆனையிறவு பிரதேசத்தின் இராணுவ கேந்திர முக்கியத்துவம் அதிகரிக்க தொடங்கியது.

விடுதலை புலிகள் மரபு போர்படையாக மாற ஆரம்பித்த பின்னர் தங்களது படையணி, கனரக ஆயுதங்களை வன்னிக்கும், யாழ் குடாவிற்கும் எளிதாக இடம் மாற்றுவதற்கு கழுத்து பகுதி மிக அவசியமானது என்பதனால் அந்த பகுதியின் இராணுவ கேந்திர முக்கியத்துவம்  அதிகரிக்க தொடங்கியது.

அதனால் 1991 இற்கு முன்னர் வெறும் இராணுவ முகாமாக இருந்த ஆனையிறவு , பின்னாட்களில் ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பாக உருமாறியது.

1995 இல் யாழ்குடா பகுதியை இலங்கை இராணுவம் கைப்பற்றியது.

1999 இல் விடுதலை புலிகள் கழுத்து பகுதியை கைப்பற்றி இலங்கை இராணுவத்தின் கடல்,வான் வழியிலான வழங்கல் பாதையையும் துண்டித்து யாழ்குடாவின் மொத்த இராணுவத்தையும் முற்றுகைக்கு உள்ளாக்க முடிவுசெய்தனர்.

பகுதி 2

ஓயாத அலைகள் 3 கட்டம் 3  10/12/1999 இல் தொடங்கப்பட்டது

12/12/1999- விடுதலை புலிகள் கட்டைக்காடு இராணுவ முகாமை தாக்கி அந்த பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

அதன் பின்னர் யாழ் குடாநாட்டின் வட கிழக்கு திசையில் இருந்த வெற்றிலைக்கேணி இராணுவ, கடற்படை பெருந்தளம் (Army Navy Base) விடுதலை புலிகளால் தாக்கியழித்து கைப்பற்றப்பட்டது.

(படம் 1: இலக்கம் 2)

யாழ்குடாவின் வட கிழக்கு கடற்பிராந்தியத்தை கண்காணித்த வந்த வெற்றிலைக்கேணி இராணுவ கடற்படை பெருந்தளம் அமைந்திருந்த பகுதி இராணுவ ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

வெற்றிலைக்கேணிக்கு மேற்கு பக்கம் உள்ள புல்லாவெளி இராணுவ முகாமும் தாக்கியழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

 

எறிகணை தளமும் 2வது கெமுனு பட்டாலியனின் தலைமையகமுமாக இயங்கிய முள்ளியான் முகாமை மாலதி படையணி கைப்பற்றியது.

மாலதி படையணியும் யாழ் படையணியும் முள்ளியான்,மண்டலாயிலிருந்து மேலும் முன்னேறின.

இந்த தாக்குதல்களில் சுமார் 150 இராணுத்தினர் கொல்லப்பட்டனர். விடுதலை புலிகள் தமது தரப்பில் 38 போராளிகள் இறந்ததாக அறிவித்தனர்.

இன்னுமொரு சமர் முனை திறக்கப்பட்டது.

12/12/1999 அன்று காலை பத்து மணியளவில் கிழக்கு அரியாலையிலும் அருகுவெளியிலும் இரு வேறு பிரிவுகளாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

சாவகச்சேரிக்கு தெற்கே உள்ள கேரதீவு, அருகுவெளி நோக்கிய சமர் முனையில் மாலதி படையணி, ஜெயந்தன் படையணி,இம்ரான் பாண்டியன் படையணிகளை சேர்ந்த ஒரு படைத்தொகுதி களமிறங்கியது.

அருகுவெளி முகாம் கைப்பற்றப்பட்டது. அதேபோல் கேரதீவு கடற்படை முகாம் தாக்கியழிக்கப்பட்டு பெருமளவு ஆயுதங்களும், ராடாரும் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அன்றைய தினம் மாலைக்குள் அந்த பகுதிகளை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

 

13/12/1999 – வெற்றிலைக்கேணி பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஆழியவளை பிரதேசத்தில் இருந்த மினிமுகாம் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றப்பட்டது.

16/12/1999 – சுண்டிகுளத்திற்கும் மருதங்கேணி பிரதேசத்திற்கும் இடைப்பட்ட கடற்கரை பிரதேசங்கள் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனூடாக புலிகளால் தமது கனரக ஆயுதங்களை யாழ்குடாவிற்கு நகர்த்த முடிந்தது.

அடுத்த நகர்வாக விடுதலை புலிகளின் ஒரு படையணி தனங்கிளப்பு பிரதேசத்திற்குள் ஊடுருவினர்.

தனங்கிளப்பு பிரதேசத்திலிருந்து யாழ் நகர் சில கிமீ தொலைவிலேயே இருக்கிறது.

பரந்தன் தளம் 

ஆனையிறவு எனும் கூட்டுப்படை தளத்தின் தெற்கு பகுதியின்  பாதுகாப்பிற்கான மிக முக்கிய தளம் பரந்தன் தளமாகும் (Paranthan army camp, situated strategically on the southern sector of Elephant Pass base complex).

இலங்கை இராணுவத்தின் 54 டிவிசனின் 6ம் பிரிகேட்டை  கொண்டுள்ள பரந்தன் தளம் மீதும், 54 டிவிசனின் 5ம் பிரிகேட்டை கொண்டுள்ள உமையாள்புரம் தளம் மீதும் தாக்குதல் நடத்த தளபதி தீபன் நியமிக்கப்படுகிறார்.

16/12/1999 – விடுதலை புலிகள் பரந்தன் தளம் மீதான தாக்குதலை தொடுக்கிறார்கள். இந்த தாக்குதலில் முன்னணி படைகளாக சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவும்,மாலதி படைப்பிரிவும் பங்கு கொண்டன.

19/12/1999 – இருமுனை நகர்வினூடாக 54-6 பிரிகேட் படைப்பிரிவை கொண்டிருந்த பரந்தன் தளம் கைப்பற்றப்பட்டது. (#படம் 1 : இலக்கம் 4)

இதற்கிடையில் இலங்கை விமானப்படையின்

MI 24 Helicopter  புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

21/12/1999 – பரந்தன் chemical factory முகாமும் கோரக்கன்கட்டு குளம் இராணுவ முகாமும் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

(படம் 1: இலக்கம் 6)

மருதங்கேணி, தாளையடி இராணுவ முகாம்களை அண்டிய பகுதிகளில் வாழும் பொது மக்கள் 25/12/99 திகதிக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு விடுதலை புலிகளால் மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.

உமையாள்புரம் இராணுவ தளம் வீழ்ந்தது.

27/12/1999 – ஆனையிறவு படை தளத்திற்கு தெற்காக 5கிமீ தொலைவில் உள்ள 54-5 பிரிகேட்டை கொண்டிருந்த உமையாள்புரம் தளம் புலிகளால் தாக்கியழித்து கைப்பற்றப்பட்டது.

பரந்தன் படைத்தளத்தை இழந்த பின்பு பின்வாங்கிய இலங்கை இராணுவத்தின் 54-6 பிரிகேட் உமையாள்புரத்தில் இருந்த 54-5 பிரிகேட்டுடன் இணைந்து பலமான பாதுகாப்பு அரணை அமைத்திருந்தது.

உமையாள்புரத்தை சுற்றியிருந்த 40 மினி (mini camps) முகாம்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

இந்த உமையாள்புரம் இராணுவ பெருந்தளத்தை கைப்பற்ற நடந்த இரண்டு நாள் சமரில், தமது தரப்பில் 39 போராளிகள் வீரசாவடைந்ததாக விடுதலை புலிகள் அறிவித்தனர்.

30/12/1999 – இலங்கை விமானப்படையின் கிபிர் போர்விமானங்களும் , உலங்கு வானுர்திகளும் பூநகரி, கேரதீவு பிரதேசங்களில் இருந்த விடுதலை புலிகளின் நிலைகள் மீது கடும் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தின.

02/02/2000 – தனங்கிளப்பு, கேரதீவு பிரதேசங்களில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்தன.

18/2/2000 – இலங்கை விமானப்படையின் Bell Helicopter விடுதலை புலிகளினால் தென்மராட்சி பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

12/3/2000 – விடுதலை புலிகள் வசமிருந்த உடுதுறை பிரதேசத்தை மீட்க இலங்கை இராணுவத்தின் கமாண்டோ படையணி நடத்திய ஆபரேசன் தோல்வியில் முடிந்தது.

புகழ்பெற்ற குடாரப்பு தரையிறக்கம்

26/3/2000 – விடுதலை புலிகளின் வரலாற்று சிறப்புமிக்க கடல்வழி தரையிறக்கமான (sea borne invasion ) குடாரப்பு தரையிறக்கம் நடந்த நாள்.

தரையிறக்கத்திற்கு பின்பு, இரவு சுமார் 9 மணியளவில் புலிகள் தமது பெரும் தாக்குதலை ஆரம்பித்தனர். ஒரே நேரத்தில் தாளையடி, செம்பியன்பற்று, மருதங்கேணி இல் இருந்த இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. (#படம் 1 : இலக்கம் 7)

ஆட்டிலறி தளமாக இருந்த பளை இராணுவ பெருந்தளம் மீதான கமாண்டோ தாக்குதல்

மறுபக்கம் A9 கண்டி வீதியில் அமைந்திருந்த பளை இராணுவ பெருந்தளம் மீது விடுதலை புலிகளின் கமாண்டோ அணி அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் 11 பீரங்கிகளையும் அதனது ஆயுத களஞ்சியத்தையும் நிர்மூலம் செய்தனர்.

Special commando units of the LTTE stormed the military garrison at Pallai and destroyed the main artillery base and ammunition dump. Explosives destroyed eleven heavy artillery pieces.

பளையிலுள்ள பீரங்கிகள் நிர்மூலம் செய்யப்பட்டதால், அதனுடைய சூட்டாற்றல் ( Fire Power) பெருமளவு குறைக்கப்பட்டது.

அத்துடன்  இயக்கச்சி இராணுவ பெருந்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இயக்கச்சி பெருந்தளம் மீது விடுதலை புலிகள் கடுமையான பீரங்கி, மோட்டார் தாக்குதலை நடத்தினர்.

பிரதான வழங்கல் பாதை துண்டிப்பு

ஆனையிறவு பெருந்தளம், இயக்கச்சி இராணுவ பெருந்தளத்திற்கான பிரதான வழங்கல் பாதையாக (Main Supply Route – MSR) இருந்த A9 கண்டி வீதியை விடுதலை புலிகள் துண்டித்தார்கள்.

இதனால் இலங்கை இராணுவம் கரையோர பகுதியில் இருந்த மாற்று பாதையான( Alternative Supply Route) கறுக்காய் தீவு, புலோப்பளை ஊடான ஒடுங்கிய பாதையை பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அடிப்படையில் இந்த மாற்று பாதை கனரக ஆயுதங்களையோ , வாகனங்களையோ நகர்த்துவதற்கு ஏற்ற பாதை அல்ல. (படம் 2)

The breach in the MSR between Jaffna and the Iyakkachchi-Elephant Pass sector has caused logistical problems for the army in sending in reinforcements and evacuating the wounded from the battle zones in the southern part of the Thenmaradchi division, military sources in the north said.

28/03/2000 – விடுதலை புலிகளினால் மாமுனை இராணுவ முகாம் கைப்பற்றப்பட்டது.

தாளையடி military complex வீழ்ந்தது.

29/03/2000 – மூன்று நாள் கடும் சமரிற்கு பின்பு தாளையடி இராணுவ பெருந்தளம்  விடுதலை புலிகளால் தாக்கியழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

இந்த தாளையடி இராணுவ பெருந்தளம் அடிப்படையில் 

தாளையடி-மருதங்கேணி-செம்பியன்பற்று முகாம்கள் ஒருங்கிணைந்த army complex ஆகும். இந்த தளத்தின் பாதுகாப்பு நிலைகளின் நீளம் சுமார் 14 கிமீ ஆகும்.

இந்த தளம் இலங்கை இராணுவத்திலேயே மிகச் சிறந்த படையணியாக கருதப்பட்ட 53 Division இன் கட்டுப்பாட்டில் இருந்தது.

இதற்கிடையில் விடுதலை புலிகளின் விசேட தாக்குதல் அணிகள் தமது அதிரடி தாக்குதல் மூலம் தம்புதோட்டம் இராணுவ முகாமில் 11 பீரங்கிகளையும் (long range artillery guns) , தாமரைகுளம் இராணுவ முகாமில் 4 பீரங்கிகளையும் அழித்தொழித்தனர்.

(படம் 1: இலக்கம் 9)

சமர்முனையின் மறுபகுதியில் நடந்தவை.

இதற்கிடையே டிசம்பர்,1999 இல் ஊடுருவிய விடுதலை புலிகளின்  ஒரு படையணி சாவகச்சேரியின் தென்பகுதி, தனங்கிளப்பு சந்தி, கேரதீவு அண்டிய பகுதிகள் என்பவற்றை தொடர்ந்து தமது  கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்கள்.

இந்த மூன்று மாதங்களில், இலங்கை இராணுவம் இந்த பகுதிகளில் கடுமையான விமான குண்டுவீச்சு தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள், இராணுவத்தின் தாக்குதல்கள் என பலவாறாக முயன்றும் விடுதலை புலிகளை இந்த பிரதேசங்களிலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை.

இந்த பகுதிகளை விடுதலை புலிகள் தொடர்ந்து தக்கவைத்திருந்தது போரியல் வியூகத்தில் பெரும் முக்கியத்துவமுடைய நகர்வு. இது எந்தவகையில் பெரும் முக்கியத்துவமுடையது என்பதை போரியல் அலசல் பந்தியில் விவரிக்கிறேன்.

பிரதான வழங்கல் பாதையை மீட்க போராடிய இலங்கை இராணுவம்

02/04/2000 – ஆனையிறவு பெருந்தளம், இயக்கச்சி பெருந்தளத்திற்கான பிரதான வழங்கல் பாதையான A9 பாதையின் பளைக்கும் முகமாலைக்கும் இடையேயான 4km பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தது.

”அந்த சிறிய பகுதியை” மீள கைப்பற்றும் நோக்கில், இலங்கை இராணுவம் “வலிசக்கர” ( Operation Wali Sakara) எனும் இராணுவ ஆபரேசனை நடத்தியது. இலங்கை இராணுவம் அதனது armored unit டினை முன்னிறுத்தி, இரு முனைகளில் நகர்ந்து இந்த தாக்குதலை நடத்தியது.

இதற்கு எதிரான முறியடிப்பு தாக்குதலை விடுதலை புலிகள் முகமாலை பகுதியில் நடத்தினார்கள். இந்த கடும் சமரில் இலங்கை இராணுவத்தின் 2 யுத்ததாங்கிகள் (Main Battle Tanks – MBT) புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டது. மேலும் 5 யுத்ததாங்கிகள் (MBT) கடுமையான சேதத்திற்கு உள்ளாகின.

அத்துடன் 2 South African ‘Buffel’ கவச வாகனங்களை விடுதலை புலிகள் கைப்பற்றினர். மேலும் புலிகளின் இந்த முறியடிப்பு தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். முன்னூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்தனர்.

மார்ச் 27 திகதியிற்கு பிறகான கடந்த ஐந்து நாட்களில், இந்த பகுதியினை கைப்பற்ற இலங்கை இராணுவம் நடத்திய மூன்றாவது பெரும் தாக்குதலே  இந்த “வலி சக்கர” எனும் ஆபரேசன்.

04/4/2000 – இலங்கை இராணுவம் மீண்டும் ஒரு புதிய இராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இந்த ஆபரேசனின் பெயர் “வெலிகதர” ( Operation ‘Welikathara”).

முகமாலையை நோக்கி நகர்ந்த இலங்கை இராணுவத்தின் இந்த ஆபரேசனை கடுமையான எதிர்தாக்குதலின் ( counter attack) மூலம் விடுதலை புலிகள் தடுத்து நிறுத்தினர். இந்த எதிர் தாக்குதலின் பின்னர், புலிகள் தமது பகுதியில் மட்டும் இலங்கை இராணுவத்தின் 60 சடலங்களை கண்டெடுத்தனர்.

10/4/2000 – இலங்கை இராணுவம் மீண்டும் புலிகள் வசம் இருந்த “அந்த சிறிய பகுதியை” மீட்க, பலமுனைகளிலான நகர்வுடன் ஒரு புதிய தாக்குதலை தொடுத்தது.

இதற்கு எதிரான விடுதலை புலிகளின் எதிர்தாக்குதலில் 4 யுத்த தாங்கிகள் (MBT) முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் 5 யுத்த தாங்கிகள் (MBT) சேதமாக்கப்பட்டன.

விடுதலை புலிகளின் Final Push

18/04/2000 விடுதலை புலிகளின் ஓயாத அலைகள்-3 இன் இலக்கை அடைவதற்கான இறுதி பெரும் தாக்குதலை தொடங்கினார்கள். இந்த தாக்குதலில் இயக்கச்சி இராணுவ பெருந்தளத்தை சுற்றியிருந்த இராணுவ முகாம்களையெல்லாம் முற்றாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். குறிப்பாக சோரன்பற்று , மாசார் இராணுவ முகாம்கள் வீழ்ந்தன.

(படம் 1: இலக்கம் 10)

இந்த பெரும் தாக்குதலின் பின்னர், இயக்கச்சி இராணுவ தளமும் ஆனையிறவு தளமும் மட்டுமே எஞ்சியிருந்தன. இந்த இரு தளங்களுக்கான பிரதான வழங்கல் பாதை (MSR) ஏற்கனவே முற்றாக துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் , இந்த தாக்குதலின் பின்னர் அவைகளுக்கான பாதுகாப்பு இராணுவ முகாம்களும் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன.

20/04/2000 – இயக்கச்சி இராணுவ தளம் மீதான பல்முனை தாக்குதலை விடுதலை புலிகள் தொடுத்தனர்.

22/04/2000 – இயக்கச்சி, ஆனையிறவு தளங்கள் வீழ்ந்தன.

இந்த தாக்குதலின் போது விடுதலை புலிகளின் கமாண்டோ அணிகளால் இயக்கச்சி முகாமில் இருந்த பீரங்கிகள்,யுத்த தாங்கிகள்,கவச வாகனங்கள், ஆயுத களஞ்சியங்கள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன.

இரண்டு நாட்கள் நடந்த புலிகளின் கடும் தாக்குதலிற்கு பிறகு இயக்கச்சி இராணுவ தளம் வீழ்ந்தது.

இயக்கச்சி இராணுவ தளம் வீழ்ந்த மறுகணமே ஆனையிறவு தளம் மீதான பல்முனை தாக்குதலை விடுதலைபுலிகள் நடத்தினர். அந்த தாக்குதலில் ஆனையிறவு தளமும் வீழ்ந்தது.

விடுதலை புலிகளின் இந்த இயக்கச்சி, ஆனையிறவு தளம் மீதான இறுதி தாக்குதலில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இந்த இரு தளங்களை கைப்பற்றியதினூடாக விடுதலை புலிகள் 152mm பீரங்கி, யுத்த தாங்கி, கவச வாகனங்கள் என்பவற்றை கைப்பற்றினர்.

பகுதி 3 – போரியல் ஆய்வு பார்வையினூடாக ஓயாத அலைகள் 3 (கட்டம் 3, கட்டம் 4)

விடுதலை புலிகள் ஆனையிறவு எனும் பெருந்தளத்தை, கூட்டுபடை தளத்தை இன்னும் துல்லியமாக சொல்வதென்றால் பல நூறு  சதுர கிமீ பரப்பளவு கொண்ட இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பை மீட்டது எப்படி?

முதலில் இதை ஏன் இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பு என அழைக்கிறேன்?

இயக்கச்சி, ஆனையிறவு எனும் இரு பெரும் தளங்களின் காவலரண் நீளம் மட்டுமே 76கிமீ. அதனது பரப்பளவு சதுர கிமீ 259.

இவைகளோடு பெரும் எண்ணிக்கையான ஆட்டிலறிகளை கொண்ட தளமான பளை இராணுவ தளம், அமெரிக்க சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ அணியான 53வது டிவிசனின் தாளையடி இராணுவ பெருந்தளம், இராணுவ,கடற்படை தளமான வெற்றிலைக்கேணி பெருந்தளம், தெற்கு பகுதியில் பரந்தன், உமையாள்புரம் எனும் இரு பெருந்தளங்கள், அதற்கு அடுத்த அடுக்கில் இவைகளின் பின்பலமாக பல இராணுவ முகாம்கள், பின் அதற்கு அடுத்த அடுக்கில் இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு அரணாக இருந்த நூற்றுக்கணக்கான மினி இராணுவ முகாம்கள் என மிகப் பலமான இராணுவ தளங்களின் தொகுப்புதான் அது.

இத்தகைய அதி உச்ச பாதுகாப்பு அரண்களை கொண்டிருந்ததால்தான், தாக்குதலுக்கு சிலமாதங்கள் முன்பு கூட அமெரிக்க தளபதி ஒருவர் ஆனையிறவு கூட்டுப்படை பெருந்தள இராணுவ வலயத்தை பார்வையிட்டு, இது யாராலும் வீழ்த்த முடியாத தளம் ( impregnable) என கூறினார். அது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.அது போரியல் யதார்த்தத்துடன் சொல்லப்பட்ட கூற்று.

அப்படியானால் எவ்வாறு விடுதலை புலிகள் இந்த இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பை மீட்டார்கள்?

இதற்கான விடை போரியல் பார்வையில் ஆராய்ந்தால் மட்டுமே கிடைக்கும்.

ஆனையிறவு இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பை வீழ்த்திய ”ஓயாத அலைகள் 3” சமர் MANEUVER WARFARE  எனும் போரியல் முறையை சார்ந்தது.

இந்த Maneuver Warfare எனும் போரியல் உத்தி என்பது என்ன?

இதை போரியல் உத்தியை உங்களுக்கு விளங்கப்படுத்த Major Kevin P. Anastas எனும் இராணுவ தளபதி எழுதிய

The American Way of Operational Art: Attrition or Maneuver? எனும் ஆய்வு கட்டுரையையும், Eric K. Clemons எனும் பேராசிரியர் எழுதிய Maneuver Warfare: Can Modern Military Strategy Lead You to Victory? எனும் கட்டுரையையும் இந்த பதிவில் ஆங்காங்கே மேற்கோள்களுக்காக எடுத்துள்ளேன்.

Maneuver warfare represents—in the words of the United States Marine Corps doctrinal manual, Warfighting—“a state of mind bent on shattering the enemy morally and physically by paralyzing and confounding him, by avoiding his strength, by quickly and aggressively exploiting his vulnerabilities, and by striking him in a way that will hurt him most.

Its ultimate aim is not to destroy the adversary’s forces but to render them unable to fight as an effective, coordinated whole.

இதை சுருக்கமாக சொல்வதானால், ஆளணி, ஆயுத பலம் சூட்டுவலு தொழில்நுட்பம், படைகளுக்கான வழங்கல் கட்டுமானம் (troop strength, firepower, weapons technology and logistics) என்பவைதான் போரின் முடிவை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணிகள்.

இந்த காரணிகள் எதிரிக்கு சாதகமாக இருக்கும்போது, அந்த பலமான எதிரியின் பலமான காரணிகளை தவிர்த்து, பலவீனமான பக்கங்களை துல்லியமாக தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்தி, அவர்களின் முடிவு எடுக்கும் திறனை அதிர்ச்சிக்குள்ளாக்கி, சண்டையிடும் திறனை முடங்க வைத்தல்தான் Maneuver Warfare என்று சொல்லாம்.

Maneuver warfare is a military strategy, which attempts to defeat the enemy by incapacitating their decision making through shock and disruption.

ஆனால் இந்த சுருக்கமான விளக்கம் ஒரு வகையில் முழுமையான விளக்கம் அல்ல. அதனால் சில கேள்விகள் ஊடாக இந்த போரியல் உத்தியை விளக்க முனைகிறேன்.

முதலில் ஏன் Maneuver warfare போரியல் உத்தி தேவைப்படுகிறது? இதற்கு ஓயாத அலைகள் 3 நடந்த 1999-2000 காலப்பகுதியில் இருந்த படைவலு நிலவரத்தை பார்ப்போம். இலங்கை இராணுவத்தின் மொத்த ஆளனி குறைந்தது 150000.  விடுதலை புலிகளின் மொத்த ஆளணி அதிகபட்சம் போனால் 14000.

இந்த கணக்குப்படி Force Ratio (1:10) .அதாவது ஒவ்வொரு விடுதலை புலி போராளிக்கும் எதிராக குறைந்தது 10 இலங்கை இராணுவம் இருக்கிறது.

அடுத்து firepower, weapons technology என எடுத்து கொண்டால், ஒரு இறையாண்மையுள்ள அரசுக்கு ( Sovereign State) நிகரான கனரக ஆயுதங்களையோ, தொழில் நுட்பத்தையோ ஒரு Non State Actor ஆன விடுதலை புலிகள் கொள்வனவு செய்யமுடியாது. இன்னொரு இறையாண்மை அரசு உதவி செய்தாலே ஒழிய.

உதாரணமாக ஓயாத அலைகள் 3 சமருக்கு முன்புவரை விடுதலை புலிகள் வசமிருந்த ஆர்ட்டிலறிகளின் எண்ணிக்கை வெறும் மூன்றுதான். அந்த மூன்று ஆர்ட்டிலறிகளுமே இலங்கை இராணுவத்தை அழித்தொழிப்பு சமர் செய்து கைப்பற்றியவை.  1996 இல் முல்லைத்தீவு இராணுவ தளத்தை நிர்மூலம் செய்து கைப்பற்றிய இரண்டு 122 mm howitzers உம், மற்றையது அதே ஆண்டு புலுக்குணாவ முகாமை தாக்கியழித்து கைப்பற்றிய ஒன்றும்தான்.

அத்துடன் ஷெல்களை ஏவும் 120 mm Mortars என பார்த்தால் அவைகளின் எண்ணிக்கை 10 இற்கு கீழேதான். இவைகள்தான் விடுதலை புலிகளின் நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய கனரக ஆயுதங்களின் சூட்டுவலு.  மறுபுறம் இலங்கை இராணுவத்தின் சூட்டுவலு என்பது அதனது யுத்த தாங்கிகளையும் (Main Battle Tank-MBT), பல மடங்கு எண்ணிக்கை பலமுடைய ஆர்ட்டிலறிகளையும், அதனது குண்டு வீச்சு்விமானங்களையும் கொண்டது.

மரபு வழியிலான போரில் ( conventional war) கனரக ஆயுதங்களும், அதன் எண்ணிக்கையும், சூட்டுவலுவும் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன. இப்போது விடுதலை புலிகள் தங்களிடம் இருக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள, தங்களால் கொள்வனவு செய்யமுடியாத கனரக ஆயுதங்களை,  இலங்கை இராணுவத்தின் கனரக ஆயுதங்களுக்கு ‘நேரேதிராக’ நிறுத்தி  மரபுவழி போரை நடத்துவது அவைகளை இழப்பதற்கே வழிவகுக்கும்.

அதேபோல் Force Ratio (10:1) என்றளவில் புலிகளுக்கு எதிராக இருக்கும் போது, எண்ணிக்கையில் குறைவான புலிகள் , எண்ணிக்கையில் பலமான இலங்கை இராணுவத்திற்கு  எதிராக Offensive அடிப்படையிலான மரபுவழி போரை நடத்தும்போது  அதிக இழப்புகள் ஏற்படும். காரணம் மரபு வழி போரின் (conventional war) உள்ளார்ந்த தன்மை அத்தகையது. The side with the most resources has the best chance to win.

இவ்வாறு மரபு வழி போரில் ‘நேரெதிரான’ அணுகுமுறையில் போரிடும் உத்திக்கும் ஒரு போரியல் பெயர் உண்டு. அதனை இந்த பதிவின் பிற்பகுதியில் விளக்குகிறேன்.

ஆதலால் போரியல் காரணிகள் தமக்கு எதிராக இருக்கும் தரப்பு,ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் வளங்களை கொண்டு உச்ச பயன்பாட்டை பெறும் வகையில் தமது ஆளணியையும், ஆயுதங்களையும், சூட்டுவலுவையும் நகர்த்தி எதிரிக்கு பெரும் அழிவை ஏற்படுத்துதலே Maneuver warfare.

அதனால் Maneuver warfare என்பது ‘நேரெதிரான’ அணுகுமுறையை விட கடினமான போரியல் முறை.

ஓயாத அலைகள் உம் அதன் Maneuver warfare பண்புகளும்

இந்த பந்தியில் maneuver warfare போரி்யல் உத்தியின் பிரதான பண்புகளையும் , அவை ஓயாத அலைகளில் எந்தெந்த நகர்வுகளில் இருந்தன என்பதையும் கீழே வரிசையாக தருகிறேன்.

Targeting Critical Vulnerabilities

A practitioner of maneuver warfare continually analyzes a rival with the aim of discovering those fundamental weaknesses that, “if exploited, will do the most significant damage to enemy’s ability to resist.”

எதிரியின் உயிர்நாடியை துல்லியமாக கண்டறிவது maneuver warfare இன் மிக முக்கிய பண்பு.

ஆனையிறவு மீதான ஓயாத அலைகள் 3 சமரை எடுத்துகொண்டால் , ஆனையிறவு பெருந்தளம் தன்னை சுற்றி பலமான பெருந்தளங்களை தனக்கான பாதுகாப்பு அடுக்காக வைத்திருந்ததை காணலாம்.

ஆனால் ஆனையிறவு பெருந்தளத்தின் தரைப்பாதை வழங்கல் பாதையாக (Main supply route -MSR) இருந்தது  A9 பிரதான பாதையும், கடல்வழியாக வெற்றிலைக்கேணி கடற்படை முகாமும்தான். இந்த இரு வழங்கல் பாதைகள்தான் ஆனையிறவு பெருந்தளத்தின் உயிர்நாடி. இந்த வழங்கல் பாதைகளை துண்டித்தால் ஆனையிறவு பெருந்தளம் தானாக வீழும் என்பது தலைவர் பிரபாகரனுக்கு தெரியும்.

அதனாலேயே ஓயாத அலைகள் 3 (UW3 -P3,P4) சமருக்கான மையப்புள்ளி இந்த வழங்கல் பாதைகளை (MSR) துண்டிப்பதாகவே இருக்குமாறு வடிவமைத்தார்.

அதற்கேற்றவாறு UW3 ( P3,P4) இன் முதல் கட்ட இலக்கே வெற்றிலைகேணியை கைப்பற்றுவதாக இருந்தது. அதன்மூலம் ஒரு வழங்கல் பாதையை துண்டித்தாகிவிட்டது.

1991 இல் விடுதலை புலிகளின் ஆனையிறவு முற்றுகையின்போது, இதே வெற்றிலைக்கேணியில்தான் இலங்கை இராணுவம் அதனது மேலதிக படைகளை (reinforcement) தரையிறக்கம் செய்து, புலிகளின் முற்றுகையை உடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது MSR ஆன A9 பாதையை துண்டிப்பதை இலக்காக வைத்துதான் -அடுத்த நான்கு மாதங்களும் ஓயாத அலைகள் 3 (UW3 – P3,P4) இன் சமர் நடந்தது.

  • Bypassing and cutting off enemy strongpoints often results in the collapse of that strongpoint even where the physical damage is minimal, such as the MAGINOT LINE.

இதைத்தான் விடுதலை புலிகள் துல்லியமாக செய்தார்கள். மிகப் பலமாக இருந்த ஆனையிறவு பெருந்தளம், இயக்கச்சி பெருந்தளம் என்பவை மீது 20/04/2000 வரை தமது infantry படைகளை கொண்டு நேரெதிரான தாக்குதலை (frontal attack) தொடுக்கவில்லை.

அவைகளின் பாதுகாப்பு நிலைகளை பலவீனப்படுத்த (softening enemy positions with artillery bombardment) இடையிடையே ஆர்ட்டிலறி தாக்குதல் (concentrated artillery fire) மட்டுமே நடத்தப்பட்டது .

இதை இன்னொரு கோணத்திலும் புரிந்துகொள்ளலாம். சீன போரியல் அறிஞரான sun tzu அவரது  “Art of War” இல் கூறியிருப்பதை போல Avoid Strength, Attack Weakness என்பதாகவும் எடுத்து கொள்ளமுடியும்.

  • In maneuver warfare, the destruction of certain enemy targets, such as command and control centers,logistical bases or fire support assets, is combined with isolation of enemy forces and the exploitation by movement of enemy weaknesses.

குறிப்பிட்ட எதிரிகளின் நிலைகளையோ, Command and control (C2) களையோ,Logistical bases களையோ அல்லது சூட்டாதரவு நிலைகளையோ அழிப்பதன்மூலம் பிரதான இலக்கினை பலவீனப்படுத்தல்.

26/03/2000 இல் பளை இராணுவ முகாம் மீது விடுதலை புலிகளின் கமாண்டோ படையணி அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் 11 பீரங்கிகளையும் அதனது ஆயுத களஞ்சியத்தையும் நிர்மூலம் செய்தனர். (Special commando units of the LTTE stormed the military garrison at Pallai and destroyed the main artillery base and ammunition dump. Eleven heavy artillery pieces were destroyed by explosives)

பளை பெருந்தளத்தின் ஆட்டிலறிகளை அழித்ததன் மூலம், ஆனையிறவு பெருந்தளத்திற்கு பக்கபலமாக இருந்து சூட்டாதரவு வழங்கும் நிலை பெருமளவு பலவீனமாக்கப்பட்டது.

(படம்-1: இலக்கம் 8)

அடுத்தது  Surprise

Striking a foe in an unexpected manner can disorient him and ensure that his response comes too late to be effective.

Surprise can be achieved by using one of three approaches: #stealth, #ambiguity, or #deception.

Deception, “to convince the enemy that we are going to do something other than what we are really going to do,” is designed to cause a rival to deploy resources erroneously.

ஒரு போரியல் நகர்வின் மூலம், எதிரியை பிழையாக போர் களத்தின் தன்மையை உள்வாங்கவைத்தல்.

எதிரியை பிழையாக போர் களத்தை உள்வாங்க வைக்கும்போது, எதிரியின் பதில் போரியல் நகர்வும் பிழையானதாகவே அமையும். இதற்கு Deception தேவைப்படுகிறது.

12/12/1999 இல் கிழக்கு அரியாலை பகுதியிலும்,அருகுவெளியிலும் இரு வேறு பிரிவுகளாக விடுதலை புலிகளை தரையிறக்கியதன் மூலம், தலைவர் பிரபாகரன் அத்தகைய Deception போரியல் நகர்வை செய்தார். இது முற்றிலும் பிறிதான திசையில் திறக்கப்பட்ட சமர் முனை.

தரையிறங்கிய விடுதலை புலிகள் அருகுவெளி முகாமை கைப்பற்றின. அதேபோல் கேரதீவு கடற்படை முகாம் தாக்கியழிக்கப்பட்டு பெருமளவு ஆயுதங்களும், ராடாரும் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அன்றைய தினம் மாலைக்குள் அந்த பகுதிகளை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

ஆனால் ஆச்சரியப்படுத்தும் விதமாக, இதுவரை ஓயாத அலைகள் 3 ஐ பற்றி பலர் பதிவிட்டிருந்த போதும், இந்த மறுமுனையில் திறக்கப்பட்ட சமரை பற்றி யாருமே குறிப்பிட்டிருக்கவில்லை.

 

ஆனால் யாராலும் குறிப்பிடப்படாத இந்த சமர் முனை , ஓயாத அலைகள் 3 இன் (UW3 -P3,P4) மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே எனது போரியல் ஆய்வின் ஊடாக புரிந்துகொண்டது.

மறுமுனையில் திறக்கப்பட்ட இந்த சமர் ஏன் மிகுந்த முக்கியத்துவம் உடையது?

1999-2000 காலப்பகுதியில் யாழ்குடா நாட்டில், இலங்கை இராணுவத்தின் மூன்று டிவிசன்கள் (Division) நிலை கொண்டிருந்தன. ஒரு டிவிசன் என்பது 10000-15000 படையினரை கொண்டது.

ஆனையிறவு மற்றும் அதனை சுற்றியிருந்த பெருந்தளங்கள் 54ம் டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்நதன. தாளையடி பெருந்தளம் அதனை சுற்றியிருந்தவை 53ம் டிவிசனின் கைவசம் இருந்தது. வலிகாமம் பகுதிகள் 52ம் டிவிசனின் கட்டுப்பாட்டில் இருந்தது. பல்வேறு தகவல்களின் அடிப்படையில் யாழ்குடா நாட்டில் அன்று குறைந்தது 40000 படையினர் இருந்தனர் என்று தெரியவருகிறது.

அதாவது யாழ்குடா எனும் theater of war இல் குறைந்தது 40000 படையினர் இருந்தனர். (In warfare, a theater is an area in which important military events occur or are progressing)

இது தவிர போர்களத்தின் மற்றைய theatre களில் இலங்கை இராணுவத்தின் மற்றைய டிவிசன்கள் நிலை கொண்டிருந்தன. மேலே குறிப்பிட்டது போல இலங்கை இராணுவத்தின் மொத்த எண்ணிக்கை குறைந்தது 150000. அதன்படி யாழ்குடா theater இல் இருந்த 40000 படையினரையும் கழித்து பார்த்தால், எஞ்சிய theater களில் இருந்த படையினரின் எண்ணிக்கை குறைந்தது 110000.

ஆனால் விடுதலை புலிகளின் மொத்த எண்ணிக்கை அதிகபட்சம் 14000 போராளிகள்தான். ஓயாத அலைகள் 3 இற்கு என சகல போராளிகளையும் ஒதுக்கமுடியாது.

காரணம் மற்றைய theater களில் , இலங்கை இராணுவத்தின் எஞ்சிய டிவிசன்கள் புதிதாக விடுதலை புலிகளின் கேந்திர நிலைகளை நோக்கி நகர முனையும். அத்தகைய நகர்வுகளை தடுத்து நிறுத்தும் வகையில் விடுதலை புலிகளின் கணிசமான படைப்பிரிவு மற்றைய theater களில் defensive warfare இற்கு தயாராக நிறுத்தப்பட்டிருக்கும்.

ஓயாத அலைகள் 3 (UW3 -P3,P4) சமருக்கென deploy செய்யப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை இன்றுவரை யாருக்கும் தெரியாது.அதிகபட்சம் விடுதலை புலிகள் தமது அரைவாசி படை பிரிவுகளை ஒதுக்கியிருந்தாலும் கிட்டத்தட்ட 7000 போராளிகள்தான் வரும்.

இந்த கணக்குப்படி  யாழ்குடா நாட்டின் படைபல நிலவரத்தை மதிப்பிட்டால் , இலங்கை இராணுவத்தின் குறைந்தது 40000 படையினருக்கு எதிராக விடுதலை புலிகளால் நகர்த்த கூடிய (deploy)  அதிகபட்ச போராளிகளின் எண்ணிக்கை 7000 ஐ தாண்ட சாத்தியங்கள் இல்லை.

ஆனால் இதைவிட குறைந்த எண்ணிக்கையிலான போராளிகளே நகர்த்தப்பட்டிருக்கும் என்றே நான் கணிப்பிடுகிறேன். ஆனால் 7000 என அதிக பட்ச எண்ணிக்கையை எடுத்துக்கொண்டதன் காரணம், தலைவர் பிரபாகரனின் Deception போரியல் நகர்வை உங்களுக்கு புரியவைக்கவே.

12/12/1999 இல் கிழக்கு அரியாலை பகுதியிலும்,அருகுவெளியிலும் இரு வேறு பிரிவுகளாக விடுதலை புலிகளை தரையிறக்கியதன் மூலம், விடுதலை புலிகள் யாழ் நகரை கைப்பற்ற முனைவதற்கான நகர்வு என்ற #தோற்றப்பாட்டை உருவாக்கினார்கள். (படம்-1: இலக்கம் 5)

இப்போது இலங்கை இராணுவத்திற்கு, விடுதலை புலிகளின் வடமராட்சி கரையோர பகுதியினுடான நகர்வுகளை (படம்-1: இலக்கம் 1, 2, 3, 7) தனது படைகளை ஒருங்கிணைத்து தடுத்துநிறுத்துவதா அல்லது கிழக்கு அரியாலை, அருகுவெளி நகர்வுகளை (படம் -1: இலக்கம் 5) நிறுத்துவதா என்ற போரியல்ரீதியான பிரச்சினை எழுந்தது.

காரணம் அரியாலை யாழ் நகரிலிருந்து சில கிமீ தூரத்திலேயே இருக்கிறது.

விடுதலை புலிகள் பூநகரியிலிருந்து கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு கரையோரத்தில் தரையிறக்கத்தை ( seaborne invasion) நிகழ்த்தினால், அதை எதிர்கொள்வதற்கான இராணுவத்தை தொடர்ந்து வலிகாமம் பகுதியில் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை இராணுவத்திற்கு உருவானது.

இதனால் யாழ்குடாவில் இருக்கும் 40000 இலங்கை இராணுவத்தை விடுதலை புலிகளின் வடமராட்சி கரையோர பகுதியினுடான நகர்வுகளை (படம்-1 : இலக்கம் 1, 2, 3, 7) தடுத்து நிறுத்துவதற்கும், கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு  பகுதியிலான நகர்வுகளை தடுத்து நிறுத்துவதற்கும் (படம்-1: இலக்கம் 5) இரண்டாக பிரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை இராணுவத்திற்கு தரப்பட்டது.

இலங்கை இராணுவம், புலிகளின் இரண்டு போர் முனைகளையும் தடுத்து நிறுத்த அதனது 40000 படையினரை இரண்டாக பிரித்த போது, வடமராட்சி கரையோர பகுதியினுடனான நகர்வுகளுக்கு (படம்-1: இலக்கம் 1, 2, 3, 7) அதனால் 25000 இற்கும் குறைவான இராணுவத்தையே ஒதுக்க முடிந்தது.

துல்லியமாக இந்த theater இற்கு ஒதுக்கப்பட்ட இலங்கை படையினரின் எண்ணிக்கை தெரியாத போதும், பல தகவல்களின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை 17000-25000 இடைப்பட்டதாகவே இருந்தது என்பதை அனுமானிக்க முடிகிறது.

The Liberation Tigers currently hold a beach head extending to about six kilometers on either side of the road from the Kerathivu jetty, south of Chavakachcheri, to the Thanangilapu junction. (This road turns north from this junction to Chavakachcheri town and west to the village of Thanangilapu)

The army has been unable to dislodge the Tigers from this sector despite more than three months of concerted air and artillery attacks. The LTTE troops operating in this beach head run vehicles too.

The SLA claims that neutralising the power of the Sea Tigers in the Jaffna lagoon is important at this juncture to prevent the LTTE from launching any major thrust into the peninsula from the Keratheevu – Thanangilapu beach head as this would bring them close to the Jaffna’s town’s entrance.

Sri Lankan army planners are also apprehensive that the Sea Tigers may embark on a major amphibious offensive on Kilaly or a tactically suitable point on the Thenmaradchi division’s coast with the Jaffna lagoon in the next phase of Operation “Unceasing Waves 3”.

தலைவர் பிரபாகரன் கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு பகுதியில் திறந்த   Deception வகையிலான இந்த சமர் முனை , வடமராட்சி கரையோர பகுதியின் படைவலு சமநிலையை பெரிதும் மாற்றிப்போட்டது. இப்பொழுது மேற்சொன்ன தகவலை மீள தருகிறேன். இப்போது 7000 விடுதலை புலிகள் எதிர்கொள்ள வேண்டிய இலங்கை படையினரின் எண்ணிக்கை 25000 ற்கும் கீழே என குறைக்கப்பட்டுவிட்டது.

அதேநேரம் டிசம்பர் 1999 இல் கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு பகுதியில் இறங்கிய விடுதலை புலிகளின் படைப்பிரிவு தொடர்ந்து நான்கு மாதங்கள் இலங்கை இராணுவம் மேற்கொண்ட கடுமையான விமான குண்டுவீச்சு, ஆர்ட்டிலறி தாக்குதல்கள், இராணுவத்தின் முன்னேற்ற முயற்சிகளை முறியடித்து கொண்டே இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

விடுதலை புலிகளின் இந்த கிழக்கு அரியாலை, தனங்கிளப்பு பகுதியிலான தரையிறக்கம், தலைவர் பிரபாகரன் பல காலத்திற்கு முன்பே திட்டமிட்ட Deception போரியல் நகர்வு என்பதை நிருபிக்க ஒரு மேலதிக தகவலை தருகிறேன்.

02/12/1998 இலிருந்து 20/10/1999 வரை, இலங்கை இராணுவம் ரிவிபல, ரணகோச 1, 2, 3, 4, 5, வாட்டர்செட் என பல இராணுவ ஆபரேசன்களின் மூலம் வன்னி நிலப்பரப்பில் 2533 சதுர கிமீ நிலப்பரப்பை கைப்பற்றியது.

அந்த காலகட்டத்தில் Sep 1999 இல், பூநகரியை கைப்பற்றும் இலக்கோடு மண்டைதீவிலிருந்து “சுழல் காற்று” எனும் இராணுவ ஆபரேசனை தொடங்கியது. முப்படைகளின் தாக்குதலோடு ஒரு தரையிறக்கத்தை நடத்தி பூநகரியை கைப்பற்ற பெரும் தாக்குதலை தொடுத்தது. விடுதலை புலிகள் கடுமையான எதிர் தாக்குதலை ( counter attack) நடத்தி அதை முறியடித்தார்கள். (படம்-5)

இதில் அவதானிக்க வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. இலங்கை இராணுவம் ரிவிபல, ரணகோச, வாட்டர்செட் நடவடிக்கைகள் மூலம் வன்னி நிலப்பகுதியின் 2533 சதுர கிமீ ஐ கைப்பற்ற அனுமதித்த தலைவர் பிரபாகரன் , பூநகரியை கைப்பற்ற அனுமதிக்கவில்லை.

காரணம் சில மாதங்களுக்கு பின்பு, தான் தொடங்க போகும் ”ஓயாத அலைகள் 3” இல் பூநகரி பிரதேசம் முக்கிய பாத்திரம் வகிக்கபோகிறது என்பதை தலைவர் பிரபாகரன் அறிவார்.

அடுத்த – Surprise 

இதற்கு தளபதி பால்ராஜின் தலைமையில் நடத்தப்பட்ட குடாரப்பு தரையிறக்கத்தை குறிப்பிடலாம். இன்றுவரை உலகின் போரியல் வரலாற்றில், ஒரு Non State Actor இனால் நடத்தப்பட்ட பெரும் தரையிறக்கம் இந்த ”குடாரப்பு தரையிறக்கம” தான்.

இத்தகைய ஒரு ஆபத்தான தரையிறக்கத்தை விடுதலை புலிகள் செய்வார்கள் என யாருமே அனுமானிக்கவில்லை.

Striking a foe in an unexpected manner can disorient him and ensure that his response comes too late to be effective.

மேலேயுள்ள கூற்றுக்கு முற்றிலும் பொருந்தும்வகையில் அமைந்ததுதான் “குடாரப்பு தரையிறக்கம்”. இதுவரை விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3  (OA3 -P3,P4) சமர்,  maneuver warfare இன் முக்கிய பண்புகளை எவ்வாறு தனக்குள் கொண்டிருந்தது என்பதை விவரித்திருந்தேன்.

அடுத்து Historical Minimum Planning Ratios

One particularly common heuristic is the utilization of force ratios, which express a numerical advantage deemed necessary to prevail in a localized area over the enemy. The most common force ratio is the 3:1 rule, stipulating that success when attacking a prepared defensive position requires an offensive force with three times more troops than the defenders. A complete table of “Historical Minimum Planning Ratios” contained in current US Army doctrine is provided below.

மேலேயுள்ள பகுதி எதிரியின் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப, தாக்குதல் நடத்தும் படைகள் எத்தகைய எண்ணிக்கையை கொண்டிருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் அமெரிக்க இராணுவத்தின் போரியல் கோட்பாட்டு புள்ளிவிபரங்களை தருகிறது.

அதைத்தான் Historical Minimum Planning Ratios எனும் (படம்-6) விளக்குகிறது.

இந்த அட்டவணையின் தரவுபடி, தற்காப்பு முறையை (defensive) எதிரி எடுக்கும்போது அவர்களின் நிலை prepared and fortified ஆக இருந்தால், தாக்குதல் (attack)  நடத்தும் படைகள் மூன்று மடங்கு எண்ணிக்கையை கொண்டிருக்கவேண்டும் என கூறுகிறது.

அமெரிக்க இராணுவத்தின் Historical Minimum Planning Ratios அடிப்படையில் கணக்கிட்டால், ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பில் இருந்த 17000-25000 இற்கும் இடைப்பட்ட இலங்கை இராணுவத்தின் prepared and fortified  நிலைகளை தாக்கி வீழ்த்துவதற்கு விடுதலை புலிகள் தரப்பு குறைந்தது 51000-75000 போராளிகளையாவது கொண்டிருக்கவேண்டும்.

ஆனால் வெறும் 7000 இற்கும் குறைவான போராளிகளை கொண்டுதான் இந்த 17000-25000 இற்கும் இடைப்பட்ட இலங்கை இராணுவத்தின் prepared and fortified  ஆன ஆனையிறவு பெருந்தளங்களின் தொகுப்பு வீழ்த்தப்பட்டது.

க.ஜெயகாந்த்

(மீதி அடுத்த பகுதியில்)

(The rest is in the next section)

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

 

 

1. Oyatha Alaikal 03
012. Oyatha Alaikal 03 – Iranuva Aivu1

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments