
ஊர் நோக்கி – வயாவிளான்
ஈழதேசத்தின் வடக்கே யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வயாவிளான். திசையில் ஒட்டகப்புலம் குரும்பசிட்டியையும் மயிலிட்டி கட்டுவன் என்னும் கிராமங்களையும் எல்லையாகக் கொண்ட கடல்வளமும் நிலவளமும் மிக்க தமிழர் நிலம். தென்னந் தோப்புக்களும் பனைவளமும் புகையிலை வெங்காயம் மரவள்ளி போன்ற ஏற்றுமதிப் பயிர்கள் விளையும் விவசாய நிலங்களும் என அழகு நிறைந்த ஊர் வயாவிளான்.
வடபகுதியில் அமைந்துள்ள ஒரே விமானநிலையமான பலாலி விமான நிலையம் இந்தப்பகுதியிலே காணப்படுகிறது. நீண்ட காலமாக இராணுவ மயப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் கிராமம் இது. அருகாமையில் பெரிய இராணுவ முகாம் இன்றும் உள்ளது.
இதைவிட பலாலி அரசினர் ஆசிரியர் கலாசாலை, வயாவிளான் மத்திய கல்லூரி, வடமூலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை மற்றும் வேலுப்பிள்ளை வித்தியாசாலை, ஒட்டகப்புலம் றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, குட்டியப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, என பல கல்விக் கூடங்களை கொண்ட ஊர்
உலக வலைப்பந்து போட்டிகளில் தமிழரின் பெயரை பொறித்த தர்சினி சிவலிங்கம் ஆசிய ரீதியில் வலைப்பந்தாட்டக் குழுவில் தெரிவு செய்யப்பட்டு பல விருதுகள் பெற்று இலங்கையின் வலைப்பந்தாட்டக் குழுத் தலைவியாக இருந்து வழிநடத்தி இலங்கை நாட்டுக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த வீராங்கனையாவார். அவரும் இக் கிராமத்தின் சொத்தாகவே காணப்படுகிறார்.
வயவை மண்ணில் இருந்து மண் மீட்பிற்காய் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள் ஈழ விடுதலைக்கு தமது தியாகத்தை செய்து வயாவிளானுக்கு அடையாளமாக இருந்தனர். இதனால் இவ்வீர மறவர்களைத் தந்த வயவை மண் தனது புதல்வர்களினால் பெருமை கொள்கிறது.
இந்த அழகிய ஊரின் வணக்கத் தலங்களாக வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலயம், தான்தோன்றிப் பிள்ளையார், ஞானவைரவர் ஆலயம், முத்துமாரி அம்மன் ஆலயம், அபிராமி அம்மன் ஆலயம், குரும்பசிட்டி அண்ணமார் கோவில் என்பன குறிப்பிடத்தக்கன.
போர்த்துக்கேயர் எங்கள் வழிபாட்டுத் தலங்களை இடித்தழித்த போது அம்மன் ஆலயத்தில் உள்ள கருவறை அம்மனை அந்நியர் காலம் அகலும் வரை ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைத்து அர்ச்சிக்கப்பட்டு வந்தன. பின்பு அதே இடத்தில் கோவில் அமைத்து கருவறையில் வைத்து வழிபடப்பட்டன. இதனால் மனையுடையம்மன் என சிறப்பிக்கப்பட்டது. மேலும் கிறித்தவ ஆலயங்களான அந்தோனியார் தேவாலயம், வடமூலை உத்தரிய மாதா தேவாலயம் என பல ஆலயங்களையும் கொண்டமைந்த ஊராகக் காணப்படுகிறது.
தமிழீழ மீட்புப் போரைப் பொறுத்தவரையில் பலாலி வயாவிளான் பகுதிகளில் இடம்பெற்ற போரினால் ஏற்ப்பட்ட இடப்பெயர்வே முதலாவது இடப்பெயர்வு ஆகும். 1986 தை 13 இல் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றிய மக்களை 1987 ஆடி
மாதத்தில் வந்திறங்கிய இந்திய அமைதிப்படை உருவாக்கிய அமைதிக் காலத்தில் மக்களை மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு. குடியேறிய மக்களை மீண்டும் 1990 ஆனி மாதம் 15 இல் இரண்டாவது முறையாகவும் ஒரே நாளில் வெளியேற்றப்பட்டார்கள்.
ஈழப் போராட்டத்தில் தனது புதல்வர்களையும் புதல்விகளையும் மண்ணுக்கு போராளிகளாகவும் மாவீரர்களாகவும் கொடுத்த வயாவிளான் பல அறிஞர்கள் கலைஞர்கள் படைப்பாளிகள் உழைப்பாளிகள் என தன் அபிவிருத்திக்காக தந்து மீட்கப்படாத தேசம் போல சில பகுதிகள் இராணுவத்திடம் சிக்குண்டு கிடக்க தாகத்தோடு அபிவிருத்தி தேடி எரிந்துகொண்டு இருக்கிறது வயாவிளான் மண்ணும் அங்கு வாழும் மற்றும் வாழ்ந்த மக்களின் மனமும்.
வட்டக்கச்சி – வினோத்
உசாத்துணை: தமிழ் தகவல் மையம்