×

பழமைக்கு எதிரான பண்பாட்டுப் புரட்சி

சீனாவில், அறுபதுகளில் அந்தப் புரட்சி நிகழ்ந்தது. புரட்சிக்குப் பின் ஒரு புரட்சியாக, தொடர் புரட்சியாக, பழமையை மாற்றியமைக்கும் பண்பாட்டுப் புரட்சியாக அந்தப் பூகம்ப நிகழ்வு இடம்பெற்றது. அது விளைவித்த பேரனர்த்தம் பயங்கரமானது. நாடு முழுவதுமே ஒரு வன்முறைப் பிரளயத்தில் மூழ்கி எழுந்தது. அந்தப் புரட்சிப் பெருவெள்ளத்தில் அள்ளுப்பட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கையோ எண்ணிலடங்காது. அது சீனக் கம்யூனிச இயக்கத்தை ஒரு உலுப்பு உலுக்கியது. வேர் அறுந்து விழுந்த விருட்சங்கள் போல கட்சியின் பழம் பெரும் தலைவர்கள் தூக்கி எறியப்பட்டனர். சீன சோசலிச நிர்மாணம் ஒரு இருண்ட யுகத்தினுள் தள்ளப்பட்டது. முன்னோக்கி நகர்ந்து வந்த செஞ்சீனம், இந்தக் காலகட்டத்தில் ஒரு பெரிய பின் நோக்கிய பாய்ச்சலை நிகழ்த்தியது.

இந்த ஊழிக் கூத்தை நடத்தி முடித்தவர் மாவோ. எதற்காக இந்தப் புரட்சியை அவர் கட்டவிழ்த்து விட்டார்? தான் கட்டி வளர்த்த கட்சியையே அவர் எட்டி உதைத்ததன் காரணமென்ன? தேசிய விடுதலைப் போரில் தோளாடு தோள் நின்ற தோழர்கள் பலரை அவர் இம்சைப்படுத்தியதன் நோக்கமென்ன? பெரும் புயலாக எழுந்து பேரழிவைத் தோற்றுவித்த இந்த அரசியற் கொந்தளிப்பை பண்பாட்டுப் புரட்சி என அவர் வர்ணித்தது ஏன்?

நீண்ட காலமாகவே சோசலிச சிந்தனை உலகில் பெரும் சர்ச்சையை எழுப்பிய வினாக்கள் இவை.

‘முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்’, ‘பண்பாட்டுப் புரட்சி’, என்பன மாவோ நிகழ்த்திய சமூகப் பரிசோதனைகள். இந்தப் பரிசோதனைகளின் போது பெரும் தவறுகள் இழைக்கப்பட்டன என்பதும், இவற்றினால் சீனச் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டது என்பதும் வரலாற்று உண்மைகள். இன்றைய சீனத் தலைமை மாவோவின் இந்தப் பரிசோதனைகளை விமர்சித்து, கண்டித்தும் இருக்கிறது. ஆனால் மாவோவை நிராகரிக்கவில்லை. நவ சீனத்தின் உருவாக்கத்தில் மாவோவின் பங்கு அளப்பரியது. தேசிய விடுதலையிலும், சமூகப் புரட்சியிலும் அவர் கணிசமான தொண்டாற்றியிருக்கிறார். சீனாவின் சிற்பி என வர்ணிக்கப்பட்ட இந்த மாபெரும் வரலாற்று மனிதர், ஏன் இந்தப் பாரிய தவறுகளை இழைத்தார்?

மாவோவின் இலட்சியங்கள் உன்னதமானவை. ஆனால் இந்த இலட்சியங்களை அடைவதற்கு அவர் கையாண்ட அணுகுமுறைகள்தான் தவறானவை என்பது சீன ஆய்வாளர்கள் பலரது கருத்து. அவர் முற்றுமுழுதாக மனித சக்தியைப் பயன்படுத்தி தனது இலக்குகளை அடைய முனைந்தார். ஆனால் இதனை ஒரு ஒழுங்கான முறையில், நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டத்தின் அடிப்படையில் செய்யவில்லை. இதனால் சீன சமூகம் பெரும் துன்பத்திற்கு ஆளாகியது. பொருண்மிய வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது.

கலாச்சாரப் புரட்சியை அவர் தொடக்கி வைத்ததற்கும் காரணங்கள் இருக்கத்தான் செய்தன. கொள்கையளவில், இந்தப் பரிசோதனை உயரிய நோக்குகளைக் கொண்டிருந்தது. ஆனால் நடைமுறை எதார்த்தம் வேறு. நடைமுறையில் அது பேரழிவைத் தோற்றுவித்தது.

மாவோ ஒரு இலட்சியவாதி. பெரிய கனவுகளைக் கண்டவர். சீனத்தை ஒரு சோசலிச சுவர்க்கமாக மாற்ற விளைந்தவர். சோவியத் யூனியனின் சோசலிசப் பாதையில் அவர் செல்ல விரும்பவில்லை. அந்தப் பாதை கட்சிச் சர்வாதிகாரத்தை கட்டி வளர்த்தது. மக்கள் சனநாயகத்தை மறுத்தது. பொருளுலகிற்கு முதன்மை கொடுத்தது. மனித உறவுகளை மலினப்படுத்தியது. அந்தப் பாதை ஒரு உன்னதமான பொதுவுடமைச் சமூகத்தை நோக்கிச் செல்லவில்லை என மாவோ கருதினார். சீனத்தை ஒரு புதிய பாதையில், ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்த்திச் செல்ல அவர் விரும்பினார்.

பொதுவுடமைச் சமுதாய மாற்றம் என்பது ஒரு நீண்ட பயணம். ஒரு தடவை நிகழ்த்தப்படும் சமூகப் புரட்சியுடன் அந்த இலக்கை எட்டிவிட முடியாது. ஒரு புரட்சியுடன் சமூகத்தில் நிலவும் எல்லா முரண்பாடுகளையும் களைந்துவிட முடியாது. படிப்படியாகக் கட்டவிழ்ந்து செல்லும் தொடர்ச்சியான புரட்சி மூலமே கம்யூனிச சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் எனக் கருதினார் மாவோ. இந்தத் தரிசனத்தின் அடிப்படையில் புதிய சமூகப் பரிசோதனைகளை அவர் நிகழ்த்த விரும்பினார். மக்களை விழிப்புறச் செய்து, மனித உறவுகளை மேம்பாடு செய்து, மக்கள் சனநாயகத்தைக் கட்டி வளர்க்கும் புதுமையான வழிமுறைகளாகவே இந்தப் பரிசோதனைகளை அவர் முன்னெடுத்தார். அவரைப் பொறுத்தவரை, சீனப் பண்பாட்டுப் புரட்சியானது பொதுவுடமைச் சமூகக் கட்டமைப்பை நோக்கிய ஒரு புதிய நகர்வு.

பொருண்மியக் கட்டமைப்பை மாற்றியமைத்தால், மனவுலக மாற்றத்திற்கும் அது வழி வகுக்கும் என்ற வைதீக மாக்சியக் கருத்தை மாவோ ஏற்கவில்லை. பொருளுலகம் கருத்துலகை முற்றாக நிர்ணயிப்பதல்ல. காலம் கலமாக மனவுலகில் வேர் பதிக்கும் கருத்துக்கள், நம்பிக்கைகள் சமூகப் புறநிலை மாற்றத்தால் மறைந்து விடுவதல்ல. கருத்துக்களை மாற்றுவதற்குக் கருத்துலகில் ஒரு புரட்சியை நிகழ்த்த வேண்டும். சிந்தனைப் புரட்சி மூலமே புரட்சிகரப் பிரக்ஞையைத் தோற்றுவிக்க முடியும் எனக் கருதினார் மாவோ. சீனாவில் சமூகப் புரட்சி நிகழ்ந்தது. பொருண்மியக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்ட போதும், மக்களின் மனவுலகில் மாற்றம் நிகழவில்லை. பழமைவாதக் கருத்துக்கள், பிற்போக்கான பார்வைகள், மூட நம்பிக்கைகள் மக்களிடம் செறிந்து கிடந்தன. கொன்பூசியஸின் ஆதிகால அடிமைவாதச் சித்தாந்தம் சீனச் சமூக வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி நின்றது. இந்தப் பழமைவாத சமூகப் பிரக்ஞையுடன் புதிய சமூக உலகைக் கட்டி எழுப்புவது கடினம். பொருளிய புற வளர்ச்சிக்கு ஒத்திசைவாக அக வளர்ச்சியும் ஏற்பட வேண்டும். புதிய யுகத்தை நோக்கி முன்னேறும் ஒரு சமூகம், புரட்சிகரமான அறிவியற் பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். பண்பாட்டுப் புரட்சி மூலம் இந்த நோக்கை அடையலாம் என மாவோ கருதினார்.

சோவியத் யூனியன் போன்று, சீனாவிலும் கட்சிச் சர்வாதிகாரம் விஸ்வரூபப் பரிமாணம் பெறுவதை மாவோ விரும்பவில்லை. மக்களுக்குப் புறம்பாக, மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சக்தியாக அரச நிர்வாக இயந்திரம் உருவாக்கம் பெறுவதை அவர் விரும்பவில்லை. அது, கட்சிக்கும் மக்களுக்குமிடையே பெரியதொரு முரண்பாட்டைத் தோற்றுவிக்கும். இந்த முரண்பாட்டைக் களைவதானால், அதிகார பீடத்திலுள்ள கட்சிக்காரர்களை மக்கள் அரங்கில் இறக்கி விடவேண்டும். மக்கள் மீது அதிகாரம் செலுத்துவதல்ல, மக்களுக்குச் சேவை புரிவதுதான் கட்சியின் இலட்சியம் என்பதை உணர்த்த வேண்டும். இந்த நோக்கிலும் பண்பாட்டுப் புரட்சியை முடுக்கி விட்டார் மாவோ.

இளைய நெஞ்சங்கள் மிகவும் செழிப்பான நிலம். புரட்சியின் விதைகளை அங்குதான் விதைக்க வேண்டும். இளைஞரிடம் புரட்சியுணர்வு இருக்கிறது. புதுமையைக் காணும் உத்வேகம் இருக்கிறது. துணிவு இருக்கிறது. தூய்மை இருக்கிறது. எந்த ஒரு போராட்டத்திலும் வலுவான சக்தியாக, துணிவாக நின்று போராடுவது இளம் சமூகமே. எனவேதான், இளம் பரம்பரையை அணிதிரட்டி, அவர்களுக்கு ‘செம்படை’ எனப் பெயரிட்டு, அவர்களுக்கு சகல அதிகாரங்களையும் வழங்கி, பழமைக்கு எதிராக, பழமையில் புதைந்து கிடக்கும் கட்சியின் பழம் பரம்பரைக்கு எதிராக பண்பாட்டுப் புரட்சியை அரங்கேற்றி வைத்தார் மாவோ.

மாவோவின் இலட்சிய நோக்கு உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால், பண்பாட்டுப் புரட்சி இந்த நோக்குகளை நிறைவு செய்யவில்லை. மாறாக, பேரழிவையே விளைவித்தது.

சீனப் பண்பாட்டுப் புரட்சி பற்றி பல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மாக்சிய தத்துவாசிரியர்கள் பலர் மதிப்பாய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். பல கோணத்தில் இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வு விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இவை எல்லாம் சீனாவுக்கு வெளியேயிருந்து சீனம் பற்றிப் பார்க்கப்பட்ட பார்வைகள். உள்ளார்ந்த அனுபவமின்றி நிகழ்த்தப்பட்ட புறநிலை நோக்குகள். ஆனால் சீனாவிலிருந்து, சீன வரலாற்றுத் தரிசனத்துடன் எழுதப்பட்ட நூல்கள் மிகவும் சொற்பம். இந்த வகையில், யுங் சாங் எனப்படும் சீனப் பெண்மணி எழுதியுள்ள ‘காட்டு அன்னங்கள்: சீனாவின் மூன்று புதல்விகள்’ (Wild Swans: Three Daughters of China) என்ற நூல், சீனப் பண்பாட்டுப் புரட்சியின்போது நிகழ்ந்த அனர்த்தங்களை, சுய அனுபவப் பார்வையில் தத்ரூபமாக சித்தரிக்க முனைகிறது.

இருபதாம் நூற்றாண்டின் சீன வரலாறு மிகவும் சிக்கலானது. நீண்டது. மிகவும் கொந்தளிப்பானது. ஜப்பானின் ஆதிக்கப் பிடிக்குள் சிதைந்து கிடந்த சீனம், நிமிர்ந்து எழுந்து போராடி, மிகவும் பலம் பொருந்திய பொதுவுடமை சமூகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஒரு யுக வரலாறு. இப்படியானதொரு நீண்ட, புரட்சிகர நிகழ்வுகளைக் கொண்ட சிக்கலான வரலாற்றுப் பின்புலத்தில் மூன்று பெண்களின் சுயசரிதம் பதியப்படுகிறது. தனது பாட்டி, தனது தாய், தன்னுடையதாக, மூன்று பரம்பரையை உள்ளடக்கி, தனது குடும்பத்தின் வாழ்வனுபவத்துடன் பின்னிப் பிணைத்து இந்த சுயசரித ஆக்கத்தைப் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.

எழுநூறு பக்கங்களைக் கொண்ட பெரிய நூல். நீண்டதொரு சமூக நாவல் போன்று கதை நகர்த்தப்படுகிறது. சீன சமூக வாழ்வும், அதில் இழையோடும் சமூக உறவுகளும், அந்த உறவுகளைத் தாங்கி வரும் பாத்திரங்களும், அந்தப் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் நுண்ணிய மனவுணர்வுகளும், ஏக்கங்களும் மிகவும் நுட்பமாகச் சித்தரிக்கப்படுகிறது. ஒரு தேசத்தின் வரலாற்றுப் பின்புலத்தில் ஒரு குடும்பத்தின் கதை சொல்லப்படும் பாங்கு சிறப்பாக அமைகிறது.

சீனப் பண்பாட்டுப் புரட்சி இந்த நூலின் மையமாக அமைகிறது. இந்தக் கலாச்சாரக் கிளர்ச்சி விளைவித்த அனர்த்தங்களையும் அதனால் சீன சமூகம் சந்தித்த அவலங்களையும் உண்மைச் சம்பவங்கள் வாயிலாக மிகவும் உணர்வுபூர்வமாக வரைந்து காட்டுகிறார் யுங் சாங்.

காட்டுத் தீ போல பண்பாட்டுப் புரட்சி நாடெங்கும் பரவுகிறது. அதன் தீ நாக்குகள் யுங் சாங்கின் குடும்பத்தையும் தீண்டுகின்றன.

நூலாசிரியையின் தந்தை ஒரு கம்யூனிஸ்ட் உயர் அதிகாரி. நீண்ட, கடின உழைப்பால் உயர்ந்தவர். கெரில்லா வீரனாக ஆயுதமேந்தி தேசிய விடுதலைக்காக போரிட்டவர். கட்சியின் விசுவாசி. மாவோவை சீனத்தின் கடவுளாக வரித்துக் கொண்டவர். தாயாரும் ஒரு புரட்சிவாதி. கட்சிப் பிரமுகர். யுங் சாங்கின் குடும்பம் ஒரு கம்யூனிஸ்ட் குடும்பம்.

கம்யூனிஸ்ட் உயர் அதிகாரிகளையும் பண்பாட்டுப் புரட்சி விட்டு வைக்கவில்லை. யுங் சாங்கின் பெற்றோர்கள் மீது ‘எதிர்ப் புரட்சியாளர்’ எனக் குற்றம் சுமத்தப்படுகிறது. முதலில் தந்தையும், பின்னர் தாயாரும் கைதாகின்றனர்.

இரகசிய விசாரணைகளில் இழிவுபடுத்தப்பட்டு, கண்டனக் கூட்டங்களில் அவமதிக்கப்பட்டு, தடுப்பு முகாம்களில் வதைபட்டு, பெற்றோர்கள் கொடுமைக்கு ஆளாக யுங் சாங்கின் குடும்பம் சிதைகிறது. தாய் மனமுடைந்து நோயாளியாக, தந்தைக்குப் பைத்தியம் பிடிக்கிறது. இந்த அவலமான சூழ்நிலையில் செம்படையில் சேவையாற்ற நிர்ப்பந்திக்கப்படுகிறார் யுங் சாங். அந்த இளைஞர் பட்டாளம் நிகழ்த்திய அனர்த்தங்கள் அவரைத் திகைக்க வைக்கிறது. தனிப்பட்ட சோகமும் சமூகத்தின் அவலமும் தன்னைச் சூழ நிகழ்ந்து கொண்டிருக்கும் அராஜகமும் – எல்லாமே அபத்தமாக, அர்த்தமற்ற கேலிக் கூத்தாக அவருக்குத் தென்பட்டது.

கட்டுக்கடங்காத காட்டாறு போல சீற்றம் கொண்டு பாய்ந்த புரட்சி வெள்ளம் நாடெங்கும் பேரழிவை ஏற்படுத்தியது. இலக்கற்ற, நோக்கற்ற இளைஞர் வன்முறையால், எத்தனையோ அப்பாவிகள் பழிவாங்கப்படுகின்றனர். யுங் சாங்கின் கண் முன்னே இந்தக் கொடுமை நடக்கிறது. பழமைவாதிகள் என்றும் துரோகிகள் என்றும் எதிர்ப் புரட்சியாளர் என்றும் முதலாளித்துவப் போக்காளர் என்றும் பிற்போக்குப் புத்திஜீவிகள் என்றும் பலர் வேட்டையாடப்பட்டு இம்சைப்படுத்தப்பட்ட சோக நிகழ்வுகளை அவர் மிகவும் உருக்கமாக எழுதுகிறார். பண்பாட்டுப் புரட்சி, மனிதர்களை மட்டுமன்றி, உடமைகளையும் விட்டு வைக்கவில்லை. நூல்கள், சிற்பங்கள், ஓவியங்கள், அரும் பழம் பொருட்கள் என்ற வகையில் பழமையைச் சித்தரித்த பண்பாட்டுச் சின்னங்கள் அனைத்துமே நாசமாக்கப்பட்டன. கலையம்சம் பொருந்திய பல புராதனக் கட்டிடங்கள் கூட இடித்துத் தகர்க்கப்பட்டன. மாக்சிய நூல்கள், மாவோவின் எழுத்துக்கள் தவிர்ந்த ஏனைய படைப்புகள், பழம் பெரும் இலக்கியங்கள், தத்துவங்கள், சாஸ்திரங்கள், மேலைநாட்டு நூல்கள் எல்லாமே பண்பாட்டுப் புரட்சித் தீயில் பொசுக்கப்பட்டதாகக் கூறுகிறார் நூலாசிரியை. புத்தகங்கள் மலை மலையாகக் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்ட கோரக் காட்சிகள் யுங் சாங்கின் ஆன்மாவைச் சுட்டு விடுகிறது. பண்பாட்டுப் புரட்சி, சீனக் கலாச்சாரப் பொக்கிஷங்களையே அழித்து விட்டதாக அவர் மனம் வெந்து எழுதுகிறார். இந்தக் கோரத் தாண்டவத்தை நிகழ்த்திய சீனத் தலைமை மீது அவருக்கு கோபாவேசம் பொங்குகிறது. மாவோ மீது முழுப் பழியையும் சுமத்துகிறார்.

பண்பாட்டுப் புரட்சியைத் தொடக்கி வைத்தவர் மாவோ. அதனை இயக்கி வைத்தவரும் அவரே. எனவே, இந்தப் புரட்சியால் நிகழ்ந்த அராஜகம் அனைத்திற்கும் அவரே பொறுப்பாளர் ஆவார். மாவோ சாதிக்க விரும்பியது வேறு. ஆனால் நிகழ்ந்தது வேறு. அந்த நிகழ்வுகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மிகவும் கட்டுப்பாடான கட்சி அமைப்பிற்கு எதிராக, கட்டுப்பாடற்ற இளைஞர் சேனையை கட்டவிழ்த்து விட்டது அவர் புரிந்த மாபெரும் வரலாற்றுத் தவறு. கடிவாளம் அறுந்த குதிரைபோல திசைமாறி ஓடியது செம்படை. அதனை நெறிப்படுத்த அவரால் முடியவில்லை. பழமைவாத சிந்தனையைக் களைந்தெறிய மாவோ விரும்பினார் என்பது உண்மை. ஆனால் நூல்களை எரிக்கவோ, அன்றி பழைய பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கவோ அவர் உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஆனால் செம்படையோ, மாவோவின் பிரகடனங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு, தான்தோன்றித் தனமாக நடந்தது. ஆயினும் அணைகளைக் கட்டாமல் வெள்ளத்தை ஓடவிட்டது மாவோ இழைத்த தவறு.

சீன சோசலிச நிர்மாணம் பற்றிய ஒரு பரந்த, தெளிந்த பார்வையுடன் யுங் சாங் இந்த நூலைப் படைக்கவில்லை. அவர் தனது குடும்பத்தின் சுவர்களுக்குள் நின்று, தான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் எழுதுகிறார். அந்த எழுத்தில் ஒரு புறம் ஆழமான சோகமும், மறுபுறம் வக்கிரமான கோபமும் தொனிக்கிறது. துயரம் தோய்ந்த வாழ்வனுபவமும், கனவுகள் உடைந்த விரக்தியும் அவருக்கு கம்யூனிசத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. அந்தக் கசப்புணர்வு சீனச் சமூகம் மீது திரும்புகிறது. செஞ்சீனத்தின் முகம் அவருக்கு அசிங்கமாகத் தென்படுகிறது. போராலும், புரட்சியாலும், கொந்தளிப்பான அரசியலாலும் சீர்குலைந்த ஒரு சமுதாயமாக அவர் சீனத்தைக் காண்கிறார். இந்தப் பார்வையின் அடிப்படையில் சீன வரலாற்றை ஒரு நீண்ட, முடிவில்லாத துன்பியல் நாடகமாக அவர் சித்தரிக்க முனைகிறார்.

ஆன்மாவை இழந்த மனிதர்களாக, எதற்கும் பணிந்து கொடுக்கும் பொம்மைகளாக, சீன விவசாயிகளை அவர் விபரிக்கிறார். இது மிகவும் தவறான கணிப்பு. ஒரு அபத்தமான பார்வை. சீன விவசாய வர்க்கமானது நவசீனத்தின் முதுகெலும்பு. ஜப்பானிய ஆதிக்கத்திற்கு எதிராக, சீனப் பிரபுத்துவ கொடுமைக்கு எதிராக, தேச விடுதலை வேண்டிப் போரிட்ட மாபெரும் மக்கள் சக்தியை யுங் சாங் இழிவுபடுத்த முயல்வது அவரது முதிர்ச்சியற்ற பார்வையை எடுத்துக் காட்டுகிறது. நகரப் புற வாழ்வும் உயரதிகார வர்க்கப் பின்னணியும் இப்படியானதொரு தீட்சண்யமற்ற நோக்கிற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

சீனாவை ஒரு நரகமாகவும் மேற்குலகை ஒரு சுவர்க்கமாகவும் அவர் வர்ணிக்கிறார். மேற்குலகில் அழகான ஆடைகள் இருக்கின்றன. வாசிப்பதற்கு நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. பார்த்து ரசிக்கப் பூக்கள் இருக்கின்றன. பொழுதுபோக்கிற்குக் களியாட்டங்கள் இருக்கின்றன, என்றெல்லாம் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக எழுதுகிறார். மேற்குலக நாகரீகம் உயர்ந்தது என்று சொல்கிறார். மேற்குலகில் பண்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது, வன்முறை அகன்ற மென்முறை இருக்கிறது, அமைதி இருக்கிறது, வர்க்க வேறுபாடற்ற சகோதரத்துவம் இருக்கிறது என்றெல்லாம் அவர் எழுதுவதைப் பார்க்கும் பொழுது வேடிக்கையாக இருக்கிறது. மேற்குலகில் நிலவும் சமூக முரண்பாடுகளையும், சீர்கேடுகளையும் வன்முறைகளையும் அவர் கண்டு கொள்ளாதது வியப்பாக இருக்கிறது. அத்துடன் உலக காலனித்துவ வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாற்றையும் அவர் செம்மையாகப் படிக்கவில்லை எனத் தோன்றுகிறது. சீனம் ஒரு பெரிய பூதம். ஆபத்தான பூதம். அதனை நிரந்தர தூக்கத்தில் வைத்திருப்பது அவசியம் என மேற்குலகம் சீன மக்களிடையே அபின் போதையை ஊக்குவித்த வரலாற்று நிகழ்வுகள் எதுவும் அவருக்குத் தெரியாது போல. குருட்டுத்தனமான மேற்குலக மோகம் நாட்டுப்பற்றை அவரிடம் மழுங்கடித்து விட்டிருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே அவர் நாட்டை விட்டு ஓடி லண்டனில் தஞ்சம் புகுந்திருக்கிறார். நாடுபெயர்ந்திருக்கும் அவருக்கு லண்டன் சுவர்க்கமாகத் தெரிகிறது போலும். அவரது இன்றைய சீமை அனுபவங்கள் எமக்குத் தேவைப்படாது. ஆனால் அவரது அன்றைய சீன அனுபவங்கள் எமக்கு பயன்தரக்கூடியவை. எனினும் மேற்குலகமே திகைக்கும் வகையில் பொருளியப் புதுமைகள் படைத்து நவீனமயமாகிவரும் இன்றைய நவசீனம் பற்றி அவர் அறியாதிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

பழமைக்கு எதிரான பண்பாட்டுப் புரட்சி

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments